என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிசேகம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று கோவில் அருகே உள்ள பழமையான வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்துள்ளது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் மரத்தில் இருந்து வடிந்த பாலை கழுவி துடைத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து பால் வடிந்துக்கொண்டே இருந்தது.
வேப்பமரத்தில் இருந்து பால் வடிவது குறித்த தகவல் அப்பகுதியில் பரவியதை அடுத்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பால் வடியும் வேப்பமரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பின்னர் அந்த மரத்திற்கு புடவை கட்டியும், குங்குமம், சந்தனம் வைத்தும் வழிபட்டனர்.
அறந்தாங்கி அருகே வேப்பமரத்தில் பால் வடியும் தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, காரையூர் அருகே மேலத்தானியத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மேலத்தானியத்தில் இருந்து சூரப்பட்டி செல்லும் தார்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இங்கிருந்து சூரப்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ–மாணவிகள் கீழு விழுந்து காயமடையும் நிலை உள்ளது.
மேலும் பஸ் போக்குவரத்திற்கும் பயன்படாத நிலையில் இந்த சாலை உள்ளது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மேலத்தானியத்தில் இருந்து சூரப்படிக்கு செல்லும் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் உறுதியளித்தப்படி குண்டும், குழியமான, சாலையை உடனடியாக சரிசெய்யவிட்டால், பொதுமக்களை கூட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என கூறி விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி தாலுகா அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் முருகேசன் முன்னிலைவகித்தார்.
தமிழ முதல்வர் செலவினத் தொகையினை வழங்க உத்திரவிட்டும் ஆன்லைன் சான்றுகளுக்கு செலவினத் தொகை வழங்க அரசாணை வெளியிடப் படாமல் உள்ளதைக் கண்டித்தும், உட் பிரிவு பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலர்களை ஈடுபடுத்த மறுக்கும் வருவாய் மேல்நிலை அலுவலர்களை கண்டிப்பது, கூடுதல் பொறுப்பூதியம் வழங்கவேண்டும், டிச-7 முதல் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமக்கணக்குகளை வருவாய் மேல்நிலை அலுவலர்களின் நீதி மன்றங்களுக்கு எடுத்துச் செல்வதில்லை எனவும், டிச-14முதல் ஆன்லைன் சான்றுகளை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வட்டச்செயலாளர் ஹேமலதா, பொருளாளர் சண்முகம் துணைச் செயலாளர் ரங்கராஜ், அமைப்புச் செயலாளர் சௌந்தரபாண்டி, கோட்டச் செயலர் விஜயா, அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் சிவன்கோவில் உள்ளது. சிவபெருமானை எதிர்த்து சொற்போர் புரிந்த புலவர் நக்கீரன் இங்கு தவமிருந்ததால் நக்கீரன் என்ற ஊர் தான் தற்போது கீரனூர் என்ற பெயரில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே குளம் ஒன்றும் உள்ளது. மேலும் சமீபத்தில் தான் இதில் தூர் வாரப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையில் குளம் நிரம்பி உள்ளது. மேலும் கோவில் சுற்று புறத்தில் உள்ள தெருக்களில் ஓடும் மழைநீர் குளத்தில் சேரும் வகையில் வாரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெற்கு ரதவீதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி வாடகை வீடுகள் மற்றும் வாடகை விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் வரத்துவாரியின் வழியாக கோவில் குளத்தில் சேரும்படி வரத்துவாய்க்காலின் ஒரு பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருக்கெடுத்து வரும் மழை நீருடன் கழிவு நீரும் கோவில் குளத்தில் சேருகிறது. இதனால் குளத்து நீரின் நிறம் மாறி உள்ளது.
பண்டிகை காலங்களில் பக்தர்கள் நீராடவும், கோடை காலத்தில் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வரும் இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதை பார்த்து பக்தர்கள், பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். மேலும் இந்த கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட் டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும் கூறியுள்ளது. இதனை தமிழக அரசு பயன்படுத்தி கட்டுமான தொழில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று வாபஸ் பெற்றுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் நிறைவேற்றித்தர தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
சமீபத்தில் நடந்த 500 மருத்துவர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பணி நியமன வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் டாக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வகுப்புவாத சக்திகள் வெற்றி பெறாமல் இருப்பதற்காகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க.வுக்கு தார்மீக ஆதரவை அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சமீப காலமாகவே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

இது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் செயலாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காவல் துறையினரை கொண்டு ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ய முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தி.மு.க.வுக்கும், வகுப்பு வாத சக்திகளுக்கும் இடையே நடக்கும் தேர்தலாகும். மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் குளத்தூர் ஊராட்சி இளையாவயல் கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா தலைமையில் நடைபெறுகிறது.
டாக்டர் குழுவினர் ராமமூர்த்தி, சையதுஇப்ராகிம், நிரஞ்சனா, அருண்குமார் ஆகியோர் ரத்த அழுத்த நோய்,கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இலவசமாக செய்தனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கிலிமுத்து, திமுக குளத்தூர் மணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக உள்ளார். இருப்பினும் தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரனையும், அ.தி.மு.க. வையும் இணைக்க முயற்சிப்பேன் என்று கூறினார்.
இதனிடையே இரட்டை இலை சின்னம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு வழங்கப்பட்ட நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களான கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியும் முதல் வரை சந்தித்து ஆதரவு தரப் போவதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து ரத்தின சபாபதி எம்.எல்.ஏ. மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-
அனை வரும் ஒற்றுமையாக ஒரு தலைமையின் கீழ் இருந்தால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் மட்டுமல்ல அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறலாம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டு அணிகளையும் இணைக்க முயற்சிப்பேன் என்று நான் கூறிய கருத்தை திரித்து கூறி வருகின்றனர். இளைஞர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரன் பக்கம் இருக்கின்றனர். அ.தி.மு.க. என்னை போல் பலரை வளர்த்த கட்சி. அனைவரும் ஒரு மனநிலையில் இருந்தால் இணைவது எளிது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தால் இணை வது கடினம்.
அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களின் பிடியில் உள்ளது. இதனால் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வுடன் இணைவது கடினம்தான். முதல் வரை சந்திப்பேன் என்று நான் கூறினால் தான் சந்திப்பேன். இது குறித்து நான் எதுவும் கூறாத போது நான் எப்படி சந்திப்பேன். தேவையில்லாமல் வதந்தியை கிளப்பி விடுகின்றனர்.
நான் எப்போதும் தினகரன் அணியில் இருப்பேன். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. எனது நிலைப்பாட்டில் இருந்து எப்போதும் மாறமாட்டேன்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்தவர்கள் அதிகாரம் பதவி, பணம் இருப்பதால் சசிகலாவையும், தினகரனையும் எதிர்த்து பேசி ஆட்டம் போட்டு வருகிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசின் ஆதரவு இருப்பதால்தான் இந்த ஆட்சி நீடித்து வருகிறது. ஆனால் உண்மையான அ.தி. மு.க. நாங்கள் தான்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவையும், துணை பொதுச் செயலாளராக தினகரனையும் ஏற்றுக் கொண்டால், அதே நேரத்தில் அவர்கள் அனுமதி வழங்கினால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சி இணைப்பு குறித்து பேசுவேன். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு இருக்கும் வரை முதல்வர் அணிக்கு செல்ல மாட்டேன்.
எம்.பி.க்கள் அணி மாறிய செயல் அவர்களின் நிலைப்பாடு. ஆனால் அனைவரும் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






