என் மலர்
செய்திகள்

தினகரன் அணியை விட்டு ஒருபோதும் செல்லமாட்டேன்: ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக உள்ளார். இருப்பினும் தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரனையும், அ.தி.மு.க. வையும் இணைக்க முயற்சிப்பேன் என்று கூறினார்.
இதனிடையே இரட்டை இலை சின்னம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு வழங்கப்பட்ட நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களான கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியும் முதல் வரை சந்தித்து ஆதரவு தரப் போவதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து ரத்தின சபாபதி எம்.எல்.ஏ. மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-
அனை வரும் ஒற்றுமையாக ஒரு தலைமையின் கீழ் இருந்தால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் மட்டுமல்ல அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறலாம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டு அணிகளையும் இணைக்க முயற்சிப்பேன் என்று நான் கூறிய கருத்தை திரித்து கூறி வருகின்றனர். இளைஞர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரன் பக்கம் இருக்கின்றனர். அ.தி.மு.க. என்னை போல் பலரை வளர்த்த கட்சி. அனைவரும் ஒரு மனநிலையில் இருந்தால் இணைவது எளிது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தால் இணை வது கடினம்.
அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களின் பிடியில் உள்ளது. இதனால் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வுடன் இணைவது கடினம்தான். முதல் வரை சந்திப்பேன் என்று நான் கூறினால் தான் சந்திப்பேன். இது குறித்து நான் எதுவும் கூறாத போது நான் எப்படி சந்திப்பேன். தேவையில்லாமல் வதந்தியை கிளப்பி விடுகின்றனர்.
நான் எப்போதும் தினகரன் அணியில் இருப்பேன். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. எனது நிலைப்பாட்டில் இருந்து எப்போதும் மாறமாட்டேன்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்தவர்கள் அதிகாரம் பதவி, பணம் இருப்பதால் சசிகலாவையும், தினகரனையும் எதிர்த்து பேசி ஆட்டம் போட்டு வருகிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசின் ஆதரவு இருப்பதால்தான் இந்த ஆட்சி நீடித்து வருகிறது. ஆனால் உண்மையான அ.தி. மு.க. நாங்கள் தான்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவையும், துணை பொதுச் செயலாளராக தினகரனையும் ஏற்றுக் கொண்டால், அதே நேரத்தில் அவர்கள் அனுமதி வழங்கினால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சி இணைப்பு குறித்து பேசுவேன். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு இருக்கும் வரை முதல்வர் அணிக்கு செல்ல மாட்டேன்.
எம்.பி.க்கள் அணி மாறிய செயல் அவர்களின் நிலைப்பாடு. ஆனால் அனைவரும் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






