search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போயஸ் தோட்டம்"

    • போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எதிரில் 2 மாடிகளை கொண்ட பங்களா வீடு ஒன்றை சசிகலா கட்டி உள்ளார்.
    • அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர் சசிகலா. அவரது மரணத்துக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறை தண்டனை முடிந்து அவர் வெளியில் வருவதற்குள் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்களால் அந்த கட்சிக்குள் சசிகலாவால் அதிகாரம் செலுத்த முடியாமல் போய் விட்டது. இருப்பினும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிகலா அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

    தனது ஆதரவாளர்களை அடிக்கடி சந்தித்து பேசி வரும் சசிகலா சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை ஒன்றிணைப்பேன் என்று கூறி வரும் சசிகலா தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எதிரில் 2 மாடிகளை கொண்ட பங்களா வீடு ஒன்றை சசிகலா கட்டி உள்ளார். வருமான வரித்துறையினர் அந்த வீட்டை சில நாட்கள் முடக்கி வைத்திருந்தனர். கோர்ட்டு நடவடிக்கைகள் முடிவடைந்து சிக்கல்கள் தீர்ந்து உள்ள நிலையில் சசிகலா நேற்று புதிய வீட்டில் பால் காய்ச்சினார். அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை. நேற்று காலையில் கிரகபிரவேசம் முடிவடைந்துள்ள நிலையில் சசிகலா இனி போயஸ்கார்டனில் உள்ள புதிய வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2 மாடிகளை கொண்ட வீட்டில் மாடியின் ஒரு பகுதியில் 500 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை வீட்டிலேயே கூட்டி ஆலோசித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்திலேயே சசிகலா தனது வீட்டில் அரசியல் கூட்ட அரங்கை கட்டி உள்ளார்.

    இதனால் சசிகலாவின் அரசியல் பணிகள் போயஸ் கார்டனில் இருந்து இனி வேகமெடுக்கும் என்றே சசிகலா ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ×