என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தெற்குமேலக் கோட்டையில் 2 பேர் நாட்டு துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் குப்பக்குடி வெற்றி ஆண்டவர் கோவில் அருகே உள்ள முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு அடுத்துள்ள கொட்டகையில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு இருந்த முருகேசனை பிடித்து விசாரித்ததில் கொட்டகையில் 2 நாட்டு துப்பாக்கிகளையும் பழுதடைந்த ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் மரத்தால் ஆனா ஒரு துப்பாக்கியையும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்ததுடன், முருகேசனை கைது செய்தனர். முருகேசனின் கூட்டாளியான கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை அருகே பள்ளி மாணவி வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை செட்டிசத்திரம் தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு மோகனசுந்தரி(வயது 17) என்ற மகள் மற்றும் கருப்பையன்(12) என்ற மகன் உள்ளார். மோகனசுந்தரி, கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மோகனசுந்தரி வீடு திரும்பினார். பின்னர் மாரியம்மாள் வெளியே சென்றுவிட்டார்.

    அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் மோகனசுந்தரி தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் சத்தம் போட்டார். இதையடுத்து அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் மோகனசுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மோகனசுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகனசுந்தரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக விராலிமலையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 2522 மனுக்கள் பெறப்பட்டு அதில் 841 மனுக்களுக்கு உடனடி தீர்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, விராலிமலை புதிய பஸ் நிலையத்தில் ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மேற்கூரை திறப்பு, கல்குடி பிரிவு சாலை உள்ளிட்ட 10 இடங்களில் தலா ரூ.5 லட்சம் செலவில் 10 இடங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய எல்.இ.டி. உயர்கோபுர மின்விளக்குகள் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று விராலிமலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பஸ் நிலைய மேற்கூரை மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது-

    விராலிமலை தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன்படி விராலிமலை முருகன் கோவிலுக்கு வெள்ளி ரதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மலை மீது நேரடியாக வாகனங்கள் செல்லும் வகையில் ரூ.4 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து ‘லிப்ட்' அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையான காவிரி-குண்டாறு உபரிநீர் இணைப்பு திட்டம் ரூ.7 ஆயிரத்து 673 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் செழித்து பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். மேலும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்பான செயல்பாட்டால் உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 5-வது முறையாக தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது என்று கூறினார்.

    இதில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை ஒன்றியகுழு முன்னாள் துணைத்தலைவர் திருமூர்த்தி, விராலிமலை அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், தாசில்தார் சதீ‌‌ஷ்சரவணக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமே‌‌ஷ், ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று பேசியிருப்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள்க கலந்து கொண்டனர் . இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமாரும் கலந்து கொண்டார். அப்போது அவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது:-

    உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பவர் மு.க.ஸ்டாலின்தான். எம். ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே.

    முதல்வர் இருக்கையை தட்டிப்பறிக்க நினைத்திருந்தால் ஸ்டாலின், கூவத்தூர் பிரச்சினையின்போதே முதல்வர் ஆகியிருப்பார். ஜனநாயக முறையில் அவர் முதல்வர் ஆக விரும்புகிறார். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். மு.க. ஸ்டாலின் நிச்சயம் அரியணை ஏறுவார். நாம் அதை யெல்லாம் பார்க்க போகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச். ராஜா ஆகியோர் முரசொலி பஞ்சமி நில விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் பா.ஜ.க. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அரசியல் செய்து வருகிறது.

    ஸ்டாலின்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் இணைய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று பேசியிருப்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நான் மண்புழு போன்று ஊர்ந்து சென்று முதல்வராக மாட்டேன். நான் கருணாநிதியின் மகன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பொய்களை கூறி தி.மு.க. வெற்றி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அப்படியென்றால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பொய் கூறி வெற்றி பெற்றதாக அவரால் கூற முடியுமா? உள்ளாட்சி தேர்தலை யாராவது நிறுத்தி விட மாட்டார்களா? என்று அ.தி.மு.க. நினைத்து வருகிறது. முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது.

     எடப்பாடி பழனிச்சாமி

    1989-ல் நானும் ஸ்டாலினும் எம்.எல்.ஏ. ஆனோம். ஆனால் நான் முதல்வராகிவிட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். நான் மண்புழு போன்று ஊர்ந்து சென்று முதல்வராக மாட்டேன். நான் கருணாநிதியின் மகன். தன் மானத்தை இழக்க மாட்டேன். மானம் கெட்ட பதவி எனக்கு தேவையில்லை.

    உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்பை முன் கூட்டியே வழங்கி வருகிறது அ.தி.மு.க. அரசு. மிசாவில் நான் இத்தனை நாள் சிறையில் இருந்தேன் என்று நானே சொல்வதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் திருநாவுக்கரசர் எம்.பி. பேசுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் ஆக வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார் என்று பேசியிருக்கிறார். இதில் அவர் அரசியல் சார்பற்று மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியுள்ளார் என்றார்.


    அறந்தாங்கி அருகே கஜா புயல் நிவாரணத்துக்கு வந்த 23 அரிசி பைகள்-தார்ப்பாய்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதியில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தின் பின்புறம் துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அவ்வழியாக சென்றவர்கள் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு பூச்சிகளுடன் அரிசிகள் சிதறி கிடந்தன. இதனால் அந்த இடத்தை தோண்டிப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தி அறந்தாங்கி-சுப்ரமணியபுரம் சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் குணசேகர், தாசில்தார் சூரியபிரபு, துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் துர்நாற்றம் வீசிய இடத்தை தோண்டினார்கள். அப்போது அங்கு தலா 10 கிலோ எடை கொண்ட 23 அரிசி பைகள் கெட்டுப்போன நிலையில், குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அருகே உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வேறு அரிசி பைகள் அல்லது மூட்டைகள் உள்ளனவா? என பார்த்தனர். அங்கே 35 தார்ப்பாய்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து 35 தார்ப்பாய்களையும் வருவாய் துறையினர் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் குணசேகர் கூறுகையில், அரசர்குளம் கீழ்பாதி பகுதிக்கு கஜா புயல் நிவாரணத்திற்காக வந்த அரிசி பைகளும், தார்ப்பாய்களும் ஊராட்சியில் உள்ள அனைத்து ரே‌‌ஷன் கார்டு தாரர்களுக்கும் வழங்கும் அளவிற்கு இல்லை. அவை எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கிராம சேவை மைய கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆனதால், அரிசி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால், ஊராட்சி நிர்வாகத்தினர் எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அவற்றை குழி தோண்டி புதைத்து உள்ளனர் என்றார். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி-சுப்பிரமணியபுரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடியில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே படேல் நகரில் ஒரு கார் அனாதையாக நின்றது. இது குறித்து பொதுமக்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை பார்த்த போது அதில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பது தெரியவந்தது. 

    விசாரணையில் இறந்து கிடப்பது ஆலங்குடி அருகே உள்ள குளவாய்பட்டியை சேர்ந்த முத்துவின் மகன் கார்த்திக் என்பது தெரியவந்தது. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த ஒரு வருடமாக கொலையாளிகளை தேடி வந்தனர். 

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த குமராபாண்டி என்பவரின் மனைவி சித்ரா (வயது 33) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சித்ரா, கார்த்திக்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சித்ராவை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
    ஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்தில் படுகாயமடைந்த விவசாயிக்கு மருத்துவமனை ஊழியர் தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தீபன் (வயது 38). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் கீரமங்கலம் வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு வாகனம் வருவதை பார்த்து திடீரென பிரேக் பிடித்ததில், நிலைதடுமாறி சாலையிலேயே விழுந்தார். அப்போது ஹெல்மெட் உடைந்ததில், அவருக்கு கீழ் தாடை மற்றும் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள், செவிலியர்கள், துணை செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், காக்கி சீருடை அணிந்திருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கார்த்தீபனுக்கு தையல் போட்டுள்ளார். அவர், கார்த்தீபனுக்கு தையல் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டபோது, ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்று தையல் போடப்படுவதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் செல்வோர் உயிர் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். தலைக்கவசம் உயிர் கவசம் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வருவதுடன், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் கார்த்தீபன் ஹெல்மெட் அணிந்திருந்தும், அது தரமில்லாததாக இருந்ததால் ஹெல்மெட் உடைந்து அவர் படுகாயம் அடைந்தார். எனவே தரமில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனையை தடுக்க போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கந்தர்வகோட்டை அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பெண், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேலே பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது60). இவரின் மனைவி சகாயமேரி(45) இவர் சம்பவத்தன்று அவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மழையின் காரணமாக மின்சார கம்பி அறுந்து சாலையில் கிடந்துள்ளது. 

    இதனை பார்க்காத சகாய மேரி மின்சார கம்பியை காலால் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் அவர் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சகாய மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிபோதையில் பஸ் சக்கரத்தில் தலை வைத்து படுத்திருந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுப்பிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அவர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் தலையை வைத்து தூங்கிவிட்டார். பஸ் புறப்படும் நேரம் வந்துவிட்டதால், பஸ்சை இயக்க வேண்டும் பஸ் டிரைவர் முயன்றார். அப்போது பஸ் சக்கரத்தில் ஒருவர் தலைவைத்து படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ்சில் இருந்து கீழே இறங்கி, அவரை எழுப்ப முயன்றார்.

    ஆனால் அவர் மதுபோதையில் தன்னை அறியாமல் டிரைவரிடம் தகராறு செய்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் இதுகுறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுப்பிரியரை பிடித்து விசாரணை நடத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் பஸ் டிரைவர் பஸ்சை எடுக்க முயன்றபோது, போலீசாரை மீறி திடீரென அந்த மதுப்பிரியர் ஓடி வந்து பஸ் சக்கரத்தின் கீழ் தனது கையை வைத்துக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் பஸ் புறப்பட தாமதம் ஆனதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், இதுபோல் மதுகுடித்துவிட்டு பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறந்தாங்கி போலீசார் அவ்வப்போது பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்று பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அறந்தாங்கி பஸ் நிலையத்தில் மதுபோதையில் படுத்திருக்கும் மதுப்பிரியர்கள் தாங்கள் அணிந்திருக்கும் உடைகள் கலைந்திருப்பது கூட தெரியாமல் படுத்திருப்பதால் பெண்கள், சிறுமிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் சக்கரத்தில் தலையை வைத்து படுத்திருந்தவரை டிரைவர் கவனிக்காமல் பஸ்சை எடுத்து இருந்தால் உயிர்பலி ஏற்பட்டு இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ஆலங்குடி அருகே மது அருந்தி கொண்டிருந்த கும்பல் வாலிபரை பீர்பாட்டிலால் குத்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அக்கும்பலை தேடி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்தவர் ராஜீவ். இவர் நேற்றிரவு தவளைப்பள்ளத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றார். தவளைப்பள்ளம் விலக்கு பகுதியில் செல்லும் போது ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்கள் ராஜீவ்வுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

    அப்போது வாக்குவாதம் முற்றவே அந்த கும்பல் ராஜீவ்வை பீர்பாட்டிலால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர்பாட்டிலால் குத்திய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
    ராஜபக்சே சகோதரர்கள் பொறுப்பேற்றுள்ளதால் இலங்கை தமிழர் பாதுகாப்பை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுப்பதற்கு புதுக்கோட்டையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை திருநாவுக்கரசர் எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகராஷ்டிரா மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்த பிறகு தனது கோரப்பசியின் காரணமாக ஒரு கட்சியை பா.ஜ.க. உடைத்து ஆட்சி அமைத்துள்ளது கண்டனத்துக்குரியது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர் பதவிகள் நேரடித் தேர்தல் என்று தமிழக முதல்வர் கூறிவந்த நிலையில் திடீரென்று மறைமுகத்தேர்தல் என்று அறிவித்துள்ளது அவர்களது குழப்பம் மற்றும் பயத்தை காட்டுகிறது.

    நேரடித் தேர்தல் வைத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்பதற்காக மறைமுக தேர்தல் நடத்தி கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி தலைவர் பதவியை பிடிக்கலாம் என்ற நப்பாசையில் தமிழக அரசு இது போன்ற நிலையை எடுத்துள்ளது.

    தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடப்பது கிடையாது.

    இலங்கையில் தற்போது அதிபராகவும், பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ராஜபக்சே சகோதரர்கள், கடந்த காலங்களில் தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள். தற்போது அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய அரசு தொடர்ந்து இது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    அதிமுக

    இடைத்தேர்தல் வெற்றியை கணக்கிட்டு அ.தி.மு.க. அரசுக்கு செல்வாக்கு மிகுந்து உள்ளது என்று கருத முடியாது. பொதுத்தேர்தல் நடந்த பிறகுதான் அ.தி.மு.க.வின் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ளமுடியும்.

    விடுதலைப்புலிகள் வளர்வதற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் உதவி செய்தார்கள் என்பது அது ஒரு சகாப்தம். ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு மக்களும் சரி, அரசியல் கட்சித் தலைவரும் சரி அங்கீகரிக்கவில்லை. தற்போது விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நீர்த்துப் போயுள்ளதாக யாரும் நினைக்க முடியாது. உலக அளவிலும் தமிழகத்திலும் அவருடைய ஆதரவாளர்கள் இருக்கலாம்.

    தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை ஒரு காலத்தில் வைத்துக்கொள்ள பயந்தனர். ஆனால் தற்போது பலரும் அவருடைய படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொள்கின்றனர். அதனால் விடுதலை புலிகள் ஆதிக்கம் நீர்த்துப் போய்விட்டது என்று கூற முடியாது

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளிவருகிறதா? இல்லையா? என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய இறப்பு குறித்த சந்தேகம் இன்னும் மர்மங்களாகவே உள்ளன. இதுகுறித்து கவலைப்பட வேண்டிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கவலைப்படாமல் உள்ளனர். இதற்காக அமைக்கப்பட்ட குழு என்ன ஆனது என்றே தெரியவில்லை. திரைப்படம் வெளிவந்த பிறகு அது எவ்வளவு உண்மை உள்ளது, பொய் உள்ளது என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×