என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த ஆண்டான் தெரு கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அம்புக்கோவில் ஊராட்சி கண்டியன்பட்டியில் இருந்து ஆண்டான் தெரு கிராமத்துக்கு மண் சாலை இருந்தது. இதை நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் பயன் படுத்தி வந்தனர். இருப்பினும் அந்த சாலை தனிநபரின் பட்டா இடத்தில் செல்வதாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் கண்டியன்பட்டியில் இருந்து ஆண்டான் தெருகிராமத்துக்கு சாலை அமைப்பதற்காக தனி நபரின் இடத்தில் கிராவல் மண் கொட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நபரின் குடும்பத்தினர் பாதையில் முள்வேலியை போட்டு அடைத்தனர். இதனால் ஆண்டான் தெரு கிராமத்தில் இருந்து அம்புக்கோவில் மெயின் சாலைக்கு வருவதற்கு பாதை இல்லாமல் போனது.
இதனால் ஆத்திரமடைந்த ஆண்டான் தெரு கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் கிராமத்திற்கு பாதை வசதி கேட்டு நேற்று அம்புக்கோவில் பஸ் நிறுத்தம் அருகே கந்தர்வகோட்டை, தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன், கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்தவுடன் கோட்டாட்சியர் தலைமையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மேலபச்சைக்குடி திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையோரம் வயல் பகுதி உள்ளது. இன்று காலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேலைக்காக அங்கு சென்றனர்.
அப்போது வயல் பகுதியில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே இலுப்பூர் டி.எஸ்.பி. சிகாமணி, விராலிமலை இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்ததுடன், அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த இளம்பெண் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. உடல் பாதி எரிந்த நிலையில் உள்ளதால் மர்ம நபர்கள் யாராவது அவரை வயல் பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து, எரித்து கொன்றார்களா? அல்லது குடும்ப பிரச்சினையில் அந்த இளம்பெண் வயல் பகுதிக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மாயமான இளம்பெண்களின் விவரத்தை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் இளம்பெண் சாவுக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும். வயல் பகுதியில் தீயில் கருகிய நிலையில் இளம்பெண் இறந்து கிடந்த சம்பவம் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னவாசல் அருகே உள்ள குருக்கப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 32). இவருக்கும் திருமயம் அருகே உள்ள அம்மாப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகள் முத்துலட்சுமிக்கும் (வயது 19) கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்து கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துலட்சுமி தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அடைக்கலம் வெளிநாடு சென்றுவிட்டார்.
பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த அடைக்கலம் மீண்டும் முத்துலட்சுமியை வீட்டிற்கு அழைக்க சென்றபோது அவர் வரமறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து வீடு திரும்பிய அடைக்கலம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அடைக்கலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வைர முத்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிருபர்களிடம் கூறிய எச்.ராஜா, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தி.மு. க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம் என்றார்.
இந்த நிலையில் கேட்ட இடத்தை அ.தி.மு.க. ஒதுக்கி தராததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக பா.ஜ.க., அறிவித்துள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க., தலைவர் ராமசேதுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 3 ஒன்றிய வார்டு வீதம் பா.ஜ.க. வுக்கு ஒதுக்கித்தர வேண்டும் என அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதலில் தருவதாக உறுதி அளித்த அ.தி.மு.க., நாட்கள் செல்ல செல்ல அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இதனால் விருப்ப மனு அளித்த பா.ஜ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 3-க்கு பதிலாக 1 இடத்தை ஒதுக்கி தருவதாக கூறினார். அந்த ஒன்றும் நாங்கள் போட்டியிட விரும்பாத இடமாக ஒதுக்கப்படும் என்பது தெரியவந்தது. இதை பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் ஏற்கவில்லை. மொத்தம் உள்ள 225 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களுக்கு சுமார் 200 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இதனால் தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று தனித்து போட்டியிடும் முடிவை பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசித்து எடுத்துள்ளோம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வேட்பு மனுவை தாக்கல் செய்யுமாறு தொண்டர்களிடம் தெரிவித்து விட்டோம். இந்த முடிவு குறித்து பா.ஜ.க. மாநில செயலாளர் புரட்சி கவிதாசன் இன்று அறிவிப்பார் என்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பா.ஜ.க. தேசியசெயலாளர் எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. பொய்யான வாதங்களை வைத்து மக்களை திசை திருப்பும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்க கூடாது என்பதுதான் ஒரே குறிக்கோள். அதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது.
மக்கள் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. தி.மு.க. தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றதற்கு காரணம் அவர்கள் தோல்வி பயத்தினால்தான். இடைத்தேர்தலில் எப்படி தோல்வி அடைந்தார்களோ அதே போன்று உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி எதிரொலிக்கும் என்று தான் நீதிமன்றம் சென்றனர்.
தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கூறியது, ஆனால் தேர்தல் நடத்தக்கூடாது என்று தி.மு.க. கூறியது. யாருக்கு மரண அடி என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்
ஸ்டாலின் பேச்சு தெளிவாக இல்லை. இந்திய குடியுரிமை சட்டம் மிகத்தெளிவாக உள்ளது. ஓட்டு வங்கிக்காக இந்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்க்க வில்லை என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன. சிறுபான்மையினரை பாதுகாக்கத்தான் இந்த சட்டம்.
இலங்கையில் நம் தமிழர்கள் மண்ணை இழந்து விடாமல் அவர்களது உரிமையை அங்கேயே நிலை நாட்ட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் எண்ணம். அதற்கான முழு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்து வருகிறது
அதை திசை திருப்புவதற்காகத்தான் சிலர் குற்றச் சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்திய குடியுரிமைச் சட்டத்தில் இலங்கை தமிழர்களையும் சேர்த்து விட்டால் இலங்கையில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு தமிழகத்திற்கு விரட்டி அடிக்கும். அதை அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.
இந்தப் பிரச்சினையை தவறாக பிரசாரம் செய்ய நினைத்தால் உள்ளாட்சித் தேர்தலில் இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட முடிவுதான் தி.மு.க. கூட்டணிக்கு ஏற்படும். பா.ஜ.க.விற்கு மாநிலத் தலைவர் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறுகையில், நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி எப்படி அமோக வெற்றி பெற்றதோ, அதே போன்று உள்ளாட்சித்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் அ.தி. மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை வழியாக சொந்த ஊரான சிவகங்கைக்கு சென்றார். அவருக்கு புதுக்கோட்டை கட்டியாவயல் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ப.சிதம்பரத்தோடு வந்திருந்த சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டப்படி தண்டனை பெற்று கொடுக்க வேண்டுமே தவிர போலீசாரோ, அரசாங்கமோ சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு என்கவுண்டர் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜனநாயக நாட்டில் என்கவுண்டர் என்பது இழுக்கான ஒன்று. என்கவுண்டர் விவகாரத்தில் பல சந்தேகங்கள் எழுகிறது. உண்மையாக இவர்கள் தான் குற்றம் செய்தார்களா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர என்கவுண்டரை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார். இதேபோல திருமயம் பைரவர் கோவில் முக்கத்தில் ப.சிதம்பரத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம் தலைமையில் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திருமயம் பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிதம்பரத்திற்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, காரில் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
புதுக்கோட்டையில் கடந்த 2012ம் ஆண்டு தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது அவர் மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விஜயகாந்த் மீது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்த அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசு வக்கீல் ராமநாதன், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், விஜயகாந்த் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






