என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர் தமிழ் (வயது 26). இவர் சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தமிழ்நாட்டில் 8 வருடத்திற்கு பிறகு தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தகவல் தமிழுக்கு உறவினர்கள் மூலம் தெரியவந்தது.
உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் முடிவு செய்தார். வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என்பதை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் புறப்பட்டார்.
இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது . இதற்காக கடந்த 28-ந் தேதி வடகாடு கிராமத்திற்கு தமிழ் வந்தார். நேற்று வடகாடு வாக்குச்சாவடியில் தனது வாக்கினை அவர் பதிவு செய்தார். உள்ளாட்சித்தேர்தலில் ஓட்டுப்போட சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த தமிழை கிராம மக்கள் பாராட்டினர்.
அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் எனக்கூறினர். பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து தமிழ் வாக்களிக்க வந்த நிலையில் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சில வாக்காளர்கள் சோம்பலால் வாக்குச்சாவடிக்கு வராமல் இருப்பது தவறு, இது ஜனநாயக கடமை என்று கூறும் தமிழ், கடந்த 2019 மே மாதம் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்கவும் விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை சிலர் வாங்கும் நிலையில் தமிழ், சிங்கப்பூரில் இருந்து வந்து செல்ல விமான கட்டணம் ரூ.50 ஆயிரம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் வெம்மணி ஊராட்சிக்குட்பட்ட பெரிய முள்ளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந்தேதி நடைபெற்றது.
ஒட்டுப்பதிவு முடிந்ததும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளை வாக்குப்பதிவு மைய அதிகாரிகள் சீல் வைத்து வாக்குச்சாவடி மையத்தின் அறையையும் பூட்டிவிட்டு அமர்ந்திருந்தனர்.
அப்போது வாக்குச்சாவடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடினார். தடுக்க முயன்ற போலீஸ்காரர் சையது முகமது புகாரியை, மூர்த்தி தள்ளி விட்டு சென்றார்.
அந்த வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் அன்பழகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த மண்டையூர் போலீசார் காட்டுப்பகுதிக்குள் கிடந்த வாக்கு பெட்டியை மீட்டனர். பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய மூர்த்தியையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட வாக்குப்பெட்டியில் சீல் உடைக்கபடாமல் இருந்தது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுக்கோட்டை எஸ்.பி. அருண்சக்திகுமார் வாக்குப்பெட்டி திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கருப்பையாதான் பெட்டியை தூக்கச் சொன்னதும் சரவணன், அய்யப்பன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாக்குப்பெட்டியை திருடிக்கொண்டு ஓடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூர்த்தி உட்பட 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மண்டையூர் போலீசார் அதில் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வாக்குபெட்டியை திருடிச் சென்ற மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை புதுக்கோட்டை கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை நகராட்சி 42-வது வார்டுக்கு உட் பட்ட து நியூடைமண்ட் நகர் கிழக்கு பகுதி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதிக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின்போது சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளன.
புயலின்போது சாய்ந்த மின்கம்பங்கள் இதுவரை அகற்றப்படாமல் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே கிடக்கின்றன. சுமார் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. இதேபோல் நியூடைமண்ட் நகர் கிழக்கு பகுதியில் தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மது அருந்தும் திறந்தவெளி பாராக அப்பகுதி உள்ளது. அங்கு மது அருந்துபவர்கள் காலிபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.
குடிநீர் வசதி முற்றிலும் இல்லை. நகராட்சிக்கு உட்பட்ட பிறபகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதிக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகனங்களில் கொண்டு வரப்படும் குடிநீரை ஒரு குடம் 6 ரூபாய் என்ற விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த நவம்பர் மாதத்தின் இறுதியில் பெய்தமழையின் காரணமாக ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த மழைநீர் 20 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் தேங்கி நிற்பதால், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், ஒவ்வொரு வீட்டின் அருகேயும், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. மேலும் அப்பகுதியில் குப்பைகளை சேகரித்து செல்ல, நகராட்சியின் சார்பில் பணியாளர்கள் வருவதில்லை. அப்பகுதியில் குப்பை தொட்டிகளும் வைக்கப்படவில்லை.
இதனால் அடிப்படை வசதிகளின்றி அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புயலின்போது சேதமடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் தெருவிளக்குகள் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பைகளை பணியாளர்கள் சேகரித்து செல்லவும், குப்பை தொட்டிகளை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக தெருவிளக்கு வசதிகள் இல்லாததால், தினமும் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இரவு நேரங்களில் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பை தொட்டிகள் இல்லாததால், நாங்களே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று குப்பைகளை கொட்டி வருகிறோம். எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், என்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் விசைப் படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இந்த மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, 3 விசைப் படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சிறைப்பிடித்தனர்.
முத்தையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த காளிதாஸ், ராக்கப்பன், மற்றொரு காளிதாஸ், ஆதவன், ஹரிஷ் மற்றும் சேகர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்த சுந்தர், சின்னத்தம்பி, பிரவீன், ராஜாராம் மற்றும் அண்ணாத்துரை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த அண்ணாதுரை, தம்பிராஜ், முத்து, முருகன் ஆகிய 13 பேரையும் விசைப் படகுகளுடன் சிறைப்பிடித்தனர்.
இலங்கை கடற்படையினர், அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் ஸ்பேனர் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது அவருக்கு ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரூ சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து சேகர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான உமா மகேஸ்வரியிடம் புகார் செய்தார்.
இதையடுத்து விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் 30-ந்தேதி 2-ம்கட்ட தேர்தலின் போது மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னம் மாறியதன் காரணமாக விராலிமலை ஒன்றியம் 15-வது வார்டில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை, இறந்த உறவினர் ஒருவருக்கு 16-ம் நாள் காரியம் செய்வதற்காக, உறவினர்களுடன் சேர்ந்து மணமேல்குடி கோடியக்கரை கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு காரியம் முடிந்த பின்னர், கடலில் சந்திரன் குளித்து கொண்டிருந்தார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.ம.மு.க. சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
தென்னங்கன்று சின்னத்தில் போட்டியிடும் அவர் தென்னங்கன்றுகளை கையில் ஏந்திச்சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டார். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வேட்பாளர் ரமேஷ் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து தேர்தல் அதிகாரி முருகேசன் தலைமையில் பிலாவிடுதி பகுதிக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு தென்னங்கன்றுகளை விநியோகித்து கொண்டு இருந்தார்.
உடனே அவரை மடக்கி பிடித்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 18) என்பதும், அ.ம.மு.க. வேட்பாளர் ரமேசுக்கு ஆதரவாக தென்னங்கன்றுகளை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 100 தென்னங்கன்றுகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து போலீசில் ஒப்படைத்தனர். இதனிடையே அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் பொன்னமராவதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் மணிகண்டனின் பாட்டிக்கு சொந்தமாக அப்பகுதியில் நிலம் உள்ளது. அதனை அதே பகுதியை சேர்ந்த சுப்பையா மகன்கள் மணிராஜா (25), சரவணன் (22) ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. பலமுறை ஆக்கிரமிப்பில் இருந்து விலகி கொள்ளுமாறு கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனை தட்டிக்கேட்ட மணிகண்டனை அவர்கள் தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மணிகண்டனின் பாட்டியை, மணிராஜா, சரவணன் ஆகியோர் தாக்கியுள்ளனர்.
இதுபற்றி மணிகண்டனிடம் அவரது பாட்டி கூறினார். ஆத்திரமடைந்த அவர் சுப்பையா வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மகன்கள் மணிராஜா, சரவணன் ஆகியோரிடம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். மேலும் இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில் மணிகண்டன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் காரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் மணி ராஜா, சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நிலம் ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. நாளையுடன் பிரசாரம் நிறைவடைவதால் வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற மன நிலையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக சமூக ஆர்வலர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதோ, பணம் வாங்குவதோ குற்றம் என்று பிரசாரங்கள் செய்து வருகின்றனர். இதுபற்றி இளைஞர்களும், மாணவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம வளர்ச்சிக்காகவும், நீர் நிலைகளை சீரமைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட மக்கள் செயல் இயக்கம் இளைஞர் அமைப்பினர் ‘நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்று அச்சிட்ட பதாகைகளை பொது இடங்களில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மறமடக்கி மக்கள் செயல் இயக்க இளைஞர் அமைப்பினர் கூறுகையில், நமது ஒவ்வொரு ஓட்டும் விலை மதிப்பற்றது. அதனை மக்களிடம் ஏமாற்றி ரூ.100-க்கும், ரூ.500-க்கும் வாங்கிசென்று விடுகிறார்கள். அதன்பிறகு இந்த மக்களின் குடி தண்ணீர் தேவைகளை கூட பூர்த்தி செய்ய வருவதில்லை. பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்களிடம் போய் கேட்டால், பணம் வாங்கி விட்டுத்தானே ஓட்டு போட்டாய் என்று கேட்கிறார்கள்.
இதனால்தான் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு, தங்கள் உரிமையை இழக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, பொது இடங்களிலும் வீட்டு சுவர்களிலும் விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டி இருக்கிறோம். இது மட்டுமின்றி மக்கள் செயல் இயக்கம் சார்பில் ஒரு மது பாட்டிலுக்கு மயங்கி ஓட்டு போடாதே! குடிக்க தண்ணீர் கொடுப்பவருக்கு ஓட்டு போடு..! என்று வீடியோ விழிப்புணர்வு பிரசாரமும் சமூக வலைத்தளங்கள் மூலம் செய்து வருகிறோம் என்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் கூட்டணி தர்மம் அடிப்படையில் கூட்டணி கட்சி எந்த வேட்பாளரை அறிவித்துள்ளதோ? அவரை வெற்றி பெற வைக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் வன்முறை குறித்து பேசியது சரியானதுதான். வன்முறையை யாரும் அனுமதிக்க முடியாது. குடியுரிமை சட்டம் குறித்து என்ன சொல்ல வருகிறார் என்பதை ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி சட்ட திருத்தங்களை செய்து மீண்டும் அமல்படுத்தலாம்.

இந்த போராட்டத்தை தி.மு.க.வும், காங்கிரசும்தான் தூண்டிவிடுகின்றன என்று சொல்வது தவறு. தன்னெழுச்சியாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை பிசுபிசுக்க வைப்பதற்காக இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பலனில்லை.
போராட்டத்தை திசை திருப்பவே இது போன்ற செயல்களில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. அடிமை அரசான அ.தி.மு.க.வும் துணை போயுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது சாத்தியமா? என்று தெரியவில்லை. ஆனால் தமிழக முதல்வர் சட்டம் தெரியாமல் இரட்டை குடியுரிமைக்கு வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் இன்று அனைத்து ஜமாத் உலமாக்கள் சபை சார்பில் சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க. அரசில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. முத்தலாக் தடை சட்டம், காஷ்மீரை பிரித்தது ஆகியவைதான் பா.ஜ.க. அரசின் சாதனை. குடியுரிமை சட்ட போராட்டமானது இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போராட்டம். குடியுரிமை சட்டம் குறித்து அ.தி.மு.க.வுக்கு மனச்சாட்சி உறுத்தவில்லை. மனச்சாட்சி இருந்தால்தானே உறுத்தும். குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






