என் மலர்
புதுக்கோட்டை
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மற்றும் துணைத்தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடந்துது. இதில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து கூறினார்.
பின்னர் எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இரவு சென்னைக்கு புறப்பட்டார். அவரை திருச்சி விமான நிலையத்தில் அமைச்சரின் உதவியாளர் வெங்கடேசன் விட்டு விட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காரை இடையபட்டியை சேர்ந்த டிரைவர் செல்வம் (38) ஓட்டினார்.
நள்ளிரவு நேரம் என்பதால் டிரைவர் செல்வம் காரை அதிகவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. அவர்களது கார் கிளிக்குடி வீர பெருமாள்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் கார் டிரைவர் செல்வம் இருவரும் காருக்குள்ளேயே பலியானார்கள். இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேசன் மற்றும் செல்வம் இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், டிரைவர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான வெங்கடேசனின் தாயார் இந்திரா அம்மாள் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. இதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 13 வார்டுகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மறைமுகத்தேர்தலில் தி.மு.க. சார்பில் கலைமணி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ஜெயலட்சுமி நிறுத்தப்பட்டார்.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயலட்சுமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கலைமணி 10 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தி.மு.க. கூட்டணி 13 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்ததால் கலைமணி எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மை இருந்தும் தி.மு.க. தோல்வியடைந்து விட்டது.
தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு அளித்திருக்கலாம் என தெரிகிறது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் அதிர்ச்சியடைந்த தி.மு.க. மற்றும் கலைமணியின் ஆதரவாளர்கள் தோல்விக்கு காரணமான 3பேர் யாரென்று கேட்டு உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் டெய்சிகுமார், குணசேகரன், தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமை வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக நடத்தப்படுவதை கண்காணிக்கும் வகையில் கோட்ட அளவில் 6 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு விழாக்களுக்கான ஏற்பாடுகளை தணிக்கை செய்யும் வகையில் 10 பேர் கொண்ட தணிக்கை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள் முன்னரே தெரிவித்து முன் அனுமதி பெறுவதுடன் காளைகளின் உடல் தகுதி சான்றிதழை காளை உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் காளைகளுக்கு எவ்வித ஊக்கமருந்துகளோ மற்றும் எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களை கண்டிப்பாக செலுத்தக்கூடாது.
மேலும் பொதுப்பணித் துறையினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், விழா மேடை, பார்வையாளர் அமையும் இடம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்வதுடன் கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் பரிசோதனை செய்து அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போலீசார் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதுடன், வருவாய் துறையினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இதர பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டு கடந்த 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்த முள்ள 25 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் தி.மு.க. வில் 14 பேர், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவர் என தி.மு.க. கூட்டணியில் 17 பேர் வெற்றிபெறுள்ளனர். அ.தி.மு.க.வில் 6 பேரும், 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் தி.மு.க. கூட்டணியில் 15-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கரிகாலன் போட்டியிட்டார். ஆனால் தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட தி.மு.க. பிரமுகர் கருப்பையா வெற்றி பெற்றுள்ளார். இது தி.மு.க. கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.
அதில், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தோர் சார்பில் மாவட்டத்தில் 26 இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை நாங்கள் திரும்ப பெற்றோம்.
ஆனால் எங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் (15-வது வார்டில்) கருப்பையா என்ற போட்டி வேட்பாளரை நிறுத்தி, அவருக்கு ஆதரவாக தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி செயல்பட்டு 250 வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு கூட்டணி தர்மத்தை கொலை செய்த தி.மு.க.வுக்கு 2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் தோல்வியை பரிசாக அளிப்போம் என கவிவர்மன் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி,:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் சுரேஷ் (வயது 35). இவர் அதே ஊரில் உள்ள கடைத்தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். சுரேசின் சகோதரர்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.
தினமும் காலையிலேயே தனது ஓட்டலுக்கு செல்லும் சுரேஷ் இரவில்தான் வீடு திரும்புவார். நேற்று காலை வழக்கம்போல் மனைவியிடம் கூறிவிட்டு ஓட்டலுக்கு சென்ற அவர் இரவில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
ஓட்டலில் இருந்து கிளம்பி நீண்ட நேரம் ஆகியும் கணவர் வீட்டுக்கு வராததால் பதட்டம் அடைந்த அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் சுரேஷ் போனை எடுக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவர் தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு கணவரை தேடிச்சென்றார்.
இந்தநிலையில் வீட்டின் அருகேயிருந்த கடலை பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் சுரேஷ் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்றுபார்த்த போது, சுரேசின் முகத்தில் வெட்டுக் காயங்களும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. அவருக்கு அருகிலேயே செல்போனும் கிடந்தது.
இதுகுறித்து உடனடியாக கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சுரேசை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேசின் மூத்த சகோதரர் முருகேசின் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக இதே ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை காமராஜபுரத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ., நார்த்தாமலை ப.ஆறுமுகம், அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர் உள்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சருடன் மேடையில் இருந்த ஆறுமுகம் எம்.எல்.ஏ., திடீரென தனக்கு அருகில் நின்ற மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலியிடம் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.விடம் பணம் வாங்கி கொண்டு கொண்டு வெற்றியை அறிவித்து விட்டதாக ஒருமையில் பேசியதுடன், அக்பர் அலியிடம் மேடையை விட்டு இறங்கும்படி கூறினார்.
எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரும், பணத்தை வாங்கி கொண்டு தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து விட் டாய், உன்னால் அரசுக்கு கெட்டப்பெயர் என்று பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்பர் அலி விழா மேடையை விட்டு கீழே இறங்கி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரித்த போது உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி மாவட்ட வழங்கல் அதிகாரியை ஒருமையில் பேசியது தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்துசுப்பிரமணியன் என்பவரும், தி.மு.க. சார்பில் செல்வம் என்பவரும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கையில் முத்து சுப்பிரமணியத்தை விட செல்வம் 1,780 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் செல்வம் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கூடாது என்று கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ., ஆறுமுகம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் வெற்றி பெற்ற வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட வழங்கல் அலுவலரான அக்பர் அலி, தி.மு.க. வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார். இதில் ஏற்பட்ட விரக்தியில்தான் அரசு விழாவில் எம்.எல்.ஏ., ஆறுமுகம் உள்ளிட்டோர் அதிகாரியை வசை பாடியதாக கூறப்படுகிறது.
அமைச்சர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகியை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பட்டம்மாள் விடுதியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி புஷ்பம் (வயது 55). இவர் கடந்த ஒரு மாதமாக வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும், இருமல் நிற்கவில்லை. இதனிடையே இருமல் வரும்போது, சளியுடன் ரத்தம் வந்தது. இதனையடுத்து அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்கு செல்லும் மூச்சுக் குழாயில் ஒரு சிறிய ஆணி போன்ற பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர் பரிசோதித்ததில், அது தங்க மூக்குத்தியில் உள்ள திருகாணி என்பதும், நுரையீரல் சுருங்கி இருப்பது தெரியவந்தது. அந்த தங்க திருகாணியை எடுப்பதற்காக மூச்சுக்குழாயில் அகநோக்கி (லேப்ராஸ் கோப்பி) செலுத்தி டாக்டர்கள் ஆராய்ந்தனர். அப்போது திருகாணியின் தலைப்பகுதி கீழேயும், நுனிப்பகுதி மேலேயும் இருப்பதை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து லேப்ராஸ் கோப்பி மூலம் ஒரு சிறிய இடுக்கி போன்ற கருவி செலுத்தப்பட்டு அந்த திருகாணியின் நுனிப்பகுதியை பிடித்து வெளியே எடுக்கப்பட்டது. தற்போது, புஷ்பம் நலமாக உள்ளார். இந்த சிகிச்சையினை மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர் தமிழ் (வயது 26). இவர் சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தமிழ்நாட்டில் 8 வருடத்திற்கு பிறகு தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தகவல் தமிழுக்கு உறவினர்கள் மூலம் தெரியவந்தது.
உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் முடிவு செய்தார். வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என்பதை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் புறப்பட்டார்.
இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது . இதற்காக கடந்த 28-ந் தேதி வடகாடு கிராமத்திற்கு தமிழ் வந்தார். நேற்று வடகாடு வாக்குச்சாவடியில் தனது வாக்கினை அவர் பதிவு செய்தார். உள்ளாட்சித்தேர்தலில் ஓட்டுப்போட சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த தமிழை கிராம மக்கள் பாராட்டினர்.
அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் எனக்கூறினர். பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து தமிழ் வாக்களிக்க வந்த நிலையில் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சில வாக்காளர்கள் சோம்பலால் வாக்குச்சாவடிக்கு வராமல் இருப்பது தவறு, இது ஜனநாயக கடமை என்று கூறும் தமிழ், கடந்த 2019 மே மாதம் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்கவும் விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை சிலர் வாங்கும் நிலையில் தமிழ், சிங்கப்பூரில் இருந்து வந்து செல்ல விமான கட்டணம் ரூ.50 ஆயிரம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






