என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணன்-செல்லாயி தம்பதியரின் மகள் தனலட்சுமி (வயது 20). இவர் கடந்த 24-ந்தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு திடீரென மாயமாகி விட்டார்.
அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீசில் புகார் செய்ய முடிவு செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (40) என்பவர், தனலட்சுமியின் சகோதரரை தொடர்பு கொண்டு, உனது தங்கை எனது வீட்டில்தான் உள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமியின் சகோதரர் மற்றும் பெற்றோர், உறவினர்கள் சுரேசின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு அறையில் தனலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தனலட்சுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தனலட்சுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் சுரேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. சுரேசுக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஒரே பகுதியில் வசித்து வந்ததால் தனலட்சுமி மீது சுரேசுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24-ந்தேதி இரவு தனலட்சுமி வீட்டை விட்டு தனியாக வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சுரேஷ், தனலட்சுமியின் வாயை பொத்தியதுடன், அவரை தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 2 நாட்களும் உணவு வழங்காமல் தனலட்சுமியை பாலியல் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

உணவு வழங்காமல் 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவனேசன் (வயது 34). பட்டதாரியான இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வீரச்சிபாளையத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீரச்சிபாளையத்தை சேர்ந்த மாகாளி என்பவரின் மகள் தங்கமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சிவனேசன் முதல் திருமணத்தை மறைத்து, ஆலங்குடி அருகே உள்ள குலமங்கலம் தெற்கு பூக்காரன் தெருவை சேர்ந்த மாசிலாமணியின் மகள் பிருந்தாதேவியை(28) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது பிருந்தாதேவி வீட்டில் இருந்து 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. திருமணம் முடிந்து ஒரு வாரகாலம் மனைவியுடன் இருந்த சிவனேசன், பின்னர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீரச்சிபாளையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் ஊருக்கு வரவில்லை.
பிருந்தாதேவி அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, ஊருக்கு வந்து கூட்டிச்செல்வதாக கூறியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து, பிருந்தாதேவியை கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறும், அவருக்கு அரசு அதிகாரி வேலை வாங்கி தரும் நடவடிக்கையை தான் மேற்கொள்வதாகவும் சிவனேசன் கூறியதாக தெரிகிறது. இதை நம்பாத பிருந்தாதேவி, தனது குடும்பத்தினருடன் சிவனேசன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்தவர்கள், சிவனேசனின் வீட்டை காட்டியுள்ளனர். வீட்டிற்கு சென்ற பிறகுதான், சிவனேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது, அவர்களுக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முதல் திருமணத்தை மறைத்து, தன்னை 2-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய சிவனேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிருந்தாதேவி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அப்போது போலீசார், அவரை ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிருந்தாதேவி கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து சிவனேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை:
திராவிடர் கழகம் சார்பில் புதுக்கோட்டையில் நீட் தேர்வு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது தமிழகத்தில் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெரியாரை பற்றி யார் என்ன பேசினாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவர் இன்னமும் வாழ்ந்து வருகிறார். இன்னமும் லைவ் ஆகத்தான் உள்ளார். பெரியார் மின்சாரம் போன்றவர். மின்சாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு தக்க பாடம் கற்று கொடுக்கும் என்றார்.
தஞ்சை பெரிய கோவில் சர்ச்சை தொடர்பாக பேசுகையில், தற்போது குடமுழுக்கு, கும்பாபிஷேகம் என்ற பட்டிமன்றம் நடை பெற்று வருகிறது. இது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் உள்ள பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்றார்.
பின்னர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறுகையில், ரஜினிகாந்த் விவகாரத்தில் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். தந்தை பெரியார் அனைவருக்கும் சொந்தமானவர். அந்த வெளிப்பாடுதான் இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு ஆதரவாக பேசியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூர் நமணராயசத்திரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் விராலிமலையை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி, அவரது மகன் முத்து ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இன்று காலை களமாவூர் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள் திடீரென மூர்த்தியை அரிவாளால் வெட்ட முயன்றனர்.
அதிர்ச்சியடைந்த அவர் கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இருப்பினும் அந்த கும்பல் விரட்டிச் சென்று மூர்த்தியை அரிவாளால் வெட்டினர். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்ட மூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தந்தை- மகன் கொலைக்கு பழிக்குப் பழியாக மூர்த்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரப்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி (70) என்பவருக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே ரூ.1.25 கோடி மதிப்புள்ள நிலம் ஒன்றை மூர்த்தி வாங்கி கொடுத்துள்ளார்.
திடீரென அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிக்காக எடுத்துக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வீராச்சாமி, தனது மகன் முத்துவுடன் (30) சென்று மூர்த்தியிடம் முறையிட்டார். மேலும் நிலத்திற்கு கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு வற்புறுத்தினார்.
ஆனால் மூர்த்தி பணத்தை கொடுக்க மறுத்ததுடன், நமணராயசத்திரத்தில் அவரது தோட்டம் அருகே உள்ள நிலத்தை வைத்து கொள்ளுமாறும், ஆனால் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். இதனை தந்தை- மகன் இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக வீராச்சாமி தரப்புக்கும், மூர்த்தி தரப்புக்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
கடந்த 6.2.2019 அன்று தந்தை-மகன் இருவரையும் பேச்சுவார்த்தைக்காக தனது தோட்டத்திற்கு வருமாறு மூர்த்தி அழைத்துள்ளார். இதையடுத்து வீராச்சாமி, முத்து ஆகிய இருவரும் மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வயலில் வீராச்சாமி, முத்துவை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்றனர். பேச்சுவார்த்தைக்கு முத்துவுடன் அவரது மாமனார் மற்றும் மைத்துனரும் சென்றிருந்தனர். அவர்களையும் மூர்த்தியின் ஆதரவாளர்கள் வெட்டினர். இருப்பினும் காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேரை கைது செய்தனர். கைதான மூர்த்தியை புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்திய போலீசார், பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதையறிந்த வீராச்சாமியின் ஆதரவாளர்கள் நோட்டமிட்டு மூர்த்தியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதையடுத்து கொலையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் இந்த கொலைக்கான காரணம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப்பழியாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கேட்டதில் பல்வேறு இடங்கள் கிடைக்க வில்லை. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் சிலர், தங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாக்களித்து உள்ளனர். இந்த பிரச்சினைக்கு ப.சிதம்பரத்தையோ, கார்த்தி சிதம்பரத்தையோ, கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியையோ குற்றம் சாட்டுவது முறையல்ல.
உள்ளாட்சி தேர்தலில் எழுந்த சிறு சிறு பிரச்சினைகளால் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த பிரச்சினைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் குறித்து விமர்சிக்கும் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. ஒட்டிக்கொண்டு உள்ளதா? உடைந்துவிட்டதா? என்பதை முதலில் விளக்க வேண்டும்.

பா.ஜ.க. ஒரு மூழ்கும் படகு. அந்த படகில் அ.தி.மு.க. சவாரி செய்து வருகிறது. வரும் தேர்தலில் பா.ஜ. க.வோடு சேர்ந்து அ.தி.மு.க.வும் மூழ்கப்போகிறது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்படட்டும். எங்கள் கூட்டணி குறித்து விமர்சனம் செய்ய தேவையில்லை.
தமிழக விவசாயிகளை, விவசாயத்தை பாதிக்கும் வகையிலான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 96 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
நள்ளிரவு 2 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று அந்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த பல மீனவர்கள் கடற்படைக்கு பயந்து தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனாலும் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதனை சிறைப்பிடித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த படகில் இருந்த பாரதி (வயது 30), அசோகன் (28), சக்தி குமார் (30), மணி (33) ஆகிய 4 பேரும், நாங்கள் எங்கள் கடல் எல்லையில்தான் மீன் பிடித்தோம் என்று கூறினர்.
ஆனால் இது இலங்கைக்கு சொந்தமான பகுதி, இங்கு மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றனர். மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
நாளை அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அதன்பின்னரே புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கீழையூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 38). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு உடல் பரிசோதனை செய்ய தனது காரை எடுத்து கொண்டு சென்றார். அப்போது அவரின் உறவினர்கள் சித்ரா (30), ராதிகா (38), கனிமொழி (23), கோபிகா (8), சபரிஷ்வரன் (3), விக்னேஷ்வரன் (11), வரூன் (2) ஆகியோரும் காரில் புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டனர்.
அறந்தாங்கி அடுத்த குரும்பூர் ஒத்தகடை பகுதியில் செல்லும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிவந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






