search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட மூர்த்தி
    X
    கொலையுண்ட மூர்த்தி

    புதுக்கோட்டை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை

    புதுக்கோட்டை அருகே இன்று காலை ஜாமீனில் வந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூர் நமணராயசத்திரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் விராலிமலையை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி, அவரது மகன் முத்து ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இன்று காலை களமாவூர் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள் திடீரென மூர்த்தியை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

    அதிர்ச்சியடைந்த அவர் கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இருப்பினும் அந்த கும்பல் விரட்டிச் சென்று மூர்த்தியை அரிவாளால் வெட்டினர். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்ட மூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தந்தை- மகன் கொலைக்கு பழிக்குப் பழியாக மூர்த்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரப்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி (70) என்பவருக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே ரூ.1.25 கோடி மதிப்புள்ள நிலம் ஒன்றை மூர்த்தி வாங்கி கொடுத்துள்ளார்.

    திடீரென அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிக்காக எடுத்துக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வீராச்சாமி, தனது மகன் முத்துவுடன் (30) சென்று மூர்த்தியிடம் முறையிட்டார். மேலும் நிலத்திற்கு கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு வற்புறுத்தினார்.

    ஆனால் மூர்த்தி பணத்தை கொடுக்க மறுத்ததுடன், நமணராயசத்திரத்தில் அவரது தோட்டம் அருகே உள்ள நிலத்தை வைத்து கொள்ளுமாறும், ஆனால் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். இதனை தந்தை- மகன் இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக வீராச்சாமி தரப்புக்கும், மூர்த்தி தரப்புக்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    கடந்த 6.2.2019 அன்று தந்தை-மகன் இருவரையும் பேச்சுவார்த்தைக்காக தனது தோட்டத்திற்கு வருமாறு மூர்த்தி அழைத்துள்ளார். இதையடுத்து வீராச்சாமி, முத்து ஆகிய இருவரும் மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வயலில் வீராச்சாமி, முத்துவை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்றனர். பேச்சுவார்த்தைக்கு முத்துவுடன் அவரது மாமனார் மற்றும் மைத்துனரும் சென்றிருந்தனர். அவர்களையும் மூர்த்தியின் ஆதரவாளர்கள் வெட்டினர். இருப்பினும் காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேரை கைது செய்தனர். கைதான மூர்த்தியை புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்திய போலீசார், பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    சிறையில் இருந்து வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதையறிந்த வீராச்சாமியின் ஆதரவாளர்கள் நோட்டமிட்டு மூர்த்தியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதையடுத்து கொலையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் இந்த கொலைக்கான காரணம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப்பழியாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×