என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே பள்ளி வேன் மற்றும் சைக்கிள் மீது லாரி மோதியதில் பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார். 11 குழந்தைகள் காயமடைந்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே சீனமங்கலத்தில் திருவள்ளுவர் நர்சரி பிரைமரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்த பின்னர், பள்ளி வேனில் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். வேனை டிரைவர், அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (42) ஓட்டினார். 

    அறந்தாங்கி- கட்டுமாவடி சாலை மெயின் ரோடு பகுதியில் சென்றபோது, அறந்தாங்கியில் இருந்து கோட்டைப்பட்டினத்திற்கு சென்ற லாரி, பள்ளி வேனின் பின்பகுதியில் மோதியது. அதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த சைக்கிள் மீதும் மோதியது. இதில் சைக்கிளை ஓட்டி வந்த சீனமங்கலத்தை சேர்ந்த பால் வியாபாரி கருப்பையா(வயது 60) படுகாய மடைந்தார்.

    மேலும் லாரி மோதிய வேகத்தில், பள்ளி வேன் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ஆலமரத்தின் மீது மோதியது. இதில் வேனில் இருந்த சீனமங்கலம் பகுதியை சேர்ந்த குணால், முகேஷ்வரன், மோகேஸ்வரன், லோகேஸ்வரன், சாதனா, சுபா, முகமதுஅஜீஸ், மதன், ரோஜனா, சஞ்சய், தாய்மகன் ஆகிய 11 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா மற்றும் காயமடைந்த பள்ளி குழந்தைகளை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் கருப்பையா மற்றும் பள்ளி குழந்தைகள் குணால், முகேஷ்வரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் குணால், முகேஷ்வரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், நாகுடி சப்- இன்ஸ்பெக்டர் நவீன்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆனந்தை(42) கைது செய்தனர்.
    திருவரங்குளம் அருகே கார் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.
    திருவரங்குளம்:

    திருவரங்குளம் அருகே வம்பன் வீரடிபட்டியை சேர்ந்தவர் சிவானந்தன். இவருடைய மகன் அழகியசோழன் (வயது 28). இவர், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சின்னையா மகன் சுதந்திரனுடன்(28) நேற்று முன்தினம் காரில் புதுக்கோட்டைக்கு வந்தார்.

    பின்னர் நள்ளிரவில் அவர்கள், வம்பன் வீரடிபட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை அழகியசோழன் ஓட்டினார். திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் செட்டிபாலன் வனப்பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த சுதந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அழகியசோழன் படுகாயமடைந்தார். கார் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அழகியசோழனை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுதந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் துணிமணிகள் திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளத்தை சேர்ந்த வடிவேல் மகன் மகா கிருஷ்ணன் (வயது 26) விவசாயி. இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வயல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 20  பவுன் நகைகள் மற்றும் துணிமணிகள் திருட்டு போயிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த மகாகிருஷ்ணன் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.  

    இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா தெற்கு மேலக்கோட்டையை  சேர்ந்த வெற்றிவேல் (27), வளச்சேரிப்பட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி (32), மற்றும் பாண்டியன் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசுகையில், புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, இலுப்பூர், விராலிமலை, குளத்தூர் போன்ற பல்வேறு தாலுகாவில் உள்ள கேபிள் டி.வி. சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் 70 ஆயிரத்து 771 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதுடன், 352 ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த புதிய டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லாமல் துல்லியமான ஒளிபரப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் முத்துகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    குன்னம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கி ரூ.1¾ லட்சம் பறித்து சென்ற டவுசர் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ்(வயது 46). அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ்(44). இவர்கள் இருவரும் நல்லறிக்கை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர். இதில் தன்ராஜ் இரவு விற்பனையை முடித்து விட்டு காடூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு செல்வது வழக்கம். அதேபோல் புதுவேட்டைக்குடி கிராமத்தில் அறை எடுத்து தங்கியுள்ளார் அருள்ராஜ். பின்னர் காலையில் விற்பனை தொகையை மேற்பார்வையாளர் ரமே‌ஷிடம் வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நல்லறிக்கை கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடையின் விற்பனையை முடித்து, கடையை பூட்டிவிட்டு மது விற்பனை தொகை ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 490-ஐ பையில் எடுத்துக்கொண்டு தன்ராஜ், அருள்ராஜ் இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வயல் பகுதி வழியாக வந்தனர்.

    அப்போது டாஸ்மார்க் கடையில் இருந்து சிறிது தூரம் வயல் பகுதி வழியாக சென்றபோது டவுசர் மட்டுமே அணிந்திருந்த 4 பேர் வழிமறித்து தன்ராஜ் மற்றும் அருள்ராஜ் இருவரையும் தாக்கினர். நிலை குலைந்த நிலையில் அருள்ராஜிடம் இருந்த பண பையை பறித்துக்கொண்டு 4 பேரும் தப்பி ஓடினர்.

    பின்னர் விற்பனையாளர்கள் தன்ராஜ், அருள்ராஜ் இருவரும் பொதுமக்கள் உதவியுடன் காட்டுப்பகுதியில் டவுசர் கொள்ளையர்களை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் படுகாயமடைந்த விற்பனையாளர்கள் இருவரும் வேப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் மற்றும் குன்னம் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டவுசர் கொள்ளையர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆலங்குடியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சிவக்குமாரன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றுப் பேசினார்.

    14 வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடித்திட வேண்டும். டிஏ உயர்வு நிலுவை தொகையை விரைந்து வழங்கிட வேண்டும். சீருடை தையல் கூலி நிலுவையை உடனே வழங்கவேண்டும். வரவுக்கும் -செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை அரசு ஏற்று நடத்த வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    வருகிற 10-ந் தேதி மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், இதற்குள் உரிய தீர்வு கிடைக்கவிட்டால் அடுத்ததாக மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் கோரிக்கையாக வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பாரதி, பொருளாளர் கணேசன், சிஐடியு. தலைவர் சுந்தர், செயலாளர் மெய்ய நாதன். பொருளாளர் வில்லியம் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
    ஆலங்குடி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே கீழப்பட்டி ராசியமங்களத்தை சேர்ந்தவர் செபஸ்தியான், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கறம்பக்குடி, புதுக்கோட்டை மற்றும் அரசு பள்ளிகளில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஆலங்குடி வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்.

    இவர் வங்கியில் தனது ஓய்வூதியம் ரூ.38 ஆயிரத்தை துணிப்பையில் எடுத்துக் கொண்டு அரச மரம் பஸ் நிறுத்தத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார்.பஸ் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கையில் வைத்திருந்த துணிப்பையில் பணத்தை காணவில்லை.பிளேடால் கிழிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து மர்ம நபர் பிளேடால் பையை கிழித்து திருடப்பட்டதை அறிந்த செபஸ்தியான் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள 5 பஞ்சலோக சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் பஞ்சலோக விநாயகர் சிலையை ரூ.6 கோடிக்கு விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவிற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    மாறுவேடத்தில் சென்ற தனிப்படையினர் புதுக்கோட்டை கீரனூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள கொளத்தூர் என்ற பகுதியில் கல்குவாரி கற்களை விற்கும் வேலை செய்து வரும் கீரனூரை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 29), தொடையூரை சேர்ந்த மதியழகன் (37) ஆகியோரை சந்தித்தனர். அவர்களிடம் 20 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை ரூ.3½ கோடிக்கு பேரம் பேசினார்கள்.

    இதைத்தொடர்ந்து, சிலையை பார்க்க ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (24), லால்குடியை சேர்ந்த குமார் (29) ஆகியோர் தனிப்படை போலீசாரை சிலை மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கு கூட்டிச்சென்றனர்.

    அங்கு சென்று பார்த்தபோது, மேலும் 4 சிலைகள் இருந்தன. அதில், 51 கிலோ எடைகொண்ட சிவன் சிலை, 21 கிலோ எடையுள்ள பார்வதி அம்மன் சிலை, 46 கிலோ எடையுள்ள சிவகாமி அம்மன் சிலை, 26 கிலோ எடைகொண்ட மாணிக்கவாசகர் சிலை மற்றும் 8 கிலோ எடை கொண்ட பஞ்சலோக பீடம் இருந்தது தெரியவந்தது. இந்த பஞ்சலோக சிலைகளை ரூ.20 கோடிக்கு விற்கவும் திட்டமிட்டு இருந்ததை கண்டுபிடித்து அதை மீட்டனர்.

    இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகன், வெள்ளைச்சாமி, அரவிந்த் மற்றும் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட சிவகாமி சிலை அரியலூர் கூவாகம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. மேலும், பஞ்சலோக சிவன், பார்வதி, சிவகாமி அம்மன், விநாயகர், மாணிக்கவாசகர் ஆகிய 5 சிலைகளும் 13-ம் நூற்றாண்டு சோழர் கால சிலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சிலைகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.200 கோடி அளவில் இருக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட்டது என்பது குறித்து எதாவது புகார்கள் உள்ளதா? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ஆலங்குடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற 2 பேரை கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கும்மங்குளம் தைல மரக்காட்டில் ஆலங்குடி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது ஆலங்குடி சத்தியமூர்த்தி நகர்பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 46) என்பவர் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதைபோல ஆலங்குடி அருகே உள்ள மேல நெம்மக்கோட்டை தைல மரக்காட்டில் அனுமதியின்றி மதுவிற்ற மேல நெம்மக்கோட்டை மாரிமுத்து (38)வை கைது  செய்து. அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
    கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைெபற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண் காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சீனாவில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதற்காக தமிழகத்தில் விமான நிலையங்களில் உள்ளே நுழையும் அனைத்து பயணிகளும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளியே அனுப்பப்படுகின்றனர்.

    சீனாவில் இருந்து இதுவரையில் 242 பேர் தமிழகத்திற்கு வந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் பொது சுகாதாரத்துறையின் நேரடி தொடர்பில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. அதே வேளையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் விமல் சீனாவில் இருந்து வந்தவர்தான். ஆனால் அவருக்கு கொேரானா வைரஸ் பாதிப்பு இல்லை. அவரை பரிசோதித்ததில் அவருக்கு இருந்தது சாதாரண சளி தொந்தரவு தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவருக்கும் கொேரானா வைரஸின் பாதிப்பு இல்லை. மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் உள்ள ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை உள்பட அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனிமைபடுத்தபட்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.

    தேவையான மருந்து மாத்திரைகளும் இருப்பில் உள்ளன. கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடு கேரள மருத்துவ உயர் அதிகரிகளோடு தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அது மட்டுமின்றி தமிழக, கேரளா எல்லைகளிலும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் பற்றி முகநூல், வாட்ஸ் அப்பில் வரும் தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதிகார பூர்வமான அரசு தரும் தகவல்களை மட்டும் மக்கள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை தினசரி பொதுமக்களுக்கு இது குறித்து எடுத்துரைத்து வருகின்றது. பொதுமக்கள் கை கழுவும் பழக்கத்தை ஏற் படுத்தி கொள்ள வேண்டும். அந்த பழக்கத்தை ஏற்படுத்தினால் தொற்று நோய் பரவுவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை.

    பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மக்கள் பீதி அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    பெரியார் தொடர்பாக பேசும்போது யாராக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும். பா.ஜ.க.வின் பாராட்டை பெறுவதற்காகவே ரஜினிகாந்த் இப்படி பேசியிருக்கிறார் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரியார் தொடர்பாக பேசும்போது யாராக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும். பா.ஜ.க.வின் பாராட்டை பெறுவதற்காகவே பெரியார் பற்றி ரஜினி பேசியுள்ளார். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பகுதிகளில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, முதலமைச்சர் பழனிச்சாமி ஆகிய 2 பழனிச்சாமிக்கு மட்டும்தான் தெரியும்.

    ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு மவுனமாக உள்ளது. சீனாவில் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 200 மாணவர்களை மீட்பதற்கு தமிழக அரசு எவ் வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    தஞ்சை பெரிய கோவிலில் 2 மொழிகளில் குட முழுக்கு நடைபெறுவது ஏற்புடையதல்ல. தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ராணுவ பயிற்சி பள்ளி நடத்த போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது மிகவும் அபாயகரமானது.

    ரஜினி

    இதற்கு முன்பு முப்படை தளபதி அரசியல் பேசியதால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இப்படி ஒரு பரபரப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஊழல் நடந்துள்ளதால் அத் தேர்வாணையத்தின் மீதான நம்பகத்தன்மையை இளைஞர்கள் இழந்து விட்டனர். எனவே முறைகேட்டில் தொடர்புடைய அலுலர்கள், அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×