என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ரியாஸ், பகுர்லா. இருவரும் நண்பர்கள்.
இவர்கள் டிக் டாக்கில் பதிவிடும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்துள்ளது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து வீடியோக்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், பகுர்லா இறந்துவிட்டதாக அவரது போட்டோவில் ‘கண்ணீர் அஞ்சலி, இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்’ என்று எழுதி, அசுரன் படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வய பூக்கலியே’ என்ற உருக்கமான பின்னணி பாடலுடன் ரியாஸ் டிக் டாக் வீடியோ ஒன்றை விளையாட்டாக பதிவிட்டுள்ளார்.
இவர்கள் டிக் டாக்கில் பிரபலம் என்பதால் இந்த வீடியோ வேகமாக பரவி இருக்கிறது. ஆனால் வீடியோவை பதிவிட்ட ரியாஸ் இரவு தூங்க சென்று விட்டார். அதே சமயம் பகுர்லாவுக்கு விவரம் தெரியவில்லை.
இந்த வீடியோ தீ போல பரவ பகுர்லாவின் வீட்டிற்கு அவரின் உறவினர்கள் துக்கம் விசாரிக்க வரத்தொடங்கி இருக்கிறார்கள்.
அப்போது பகுர்லா உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விசாரிக்க, அப்போது தான் அவருக்கு ரியாஸ் செய்த வேலை என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள பகுர்லா, ‘நான் இறந்து விட்டதாக அவர் பதிவிட்டு இருக்கிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவரை கைது செய்து அவரின் ஐ.டி.யை பிளாக் செய்ய வேண்டும்’ என்று ஆதங்கமாகக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் “டிக் டாக்” செயலியை பயன்படுத்தி வீடியோ தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு “டிக் டாக்” செயலி மூலம் வீடியோ தயார் செய்து வெளியிடும் சிலர் மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சில வாலிபர்கள் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் “டிக் டாக்” செய்து வெளியிட்டு, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், திருச்சி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், சாலையோரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கல்லூரி மாணவர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் “டிக்டாக்” செய்து, அதை வெளியிட்டு உள்ளார். இந்த மாணவர், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது இடிப்பது, அவர்களின் முன்பு முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடுவது, அவர்களை தள்ளி விடுவதுபோல “டிக் டாக்” செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை கைது செய்யுமாறு வடகாடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாஸ் அந்த மாணவரை கைது செய்தார். அவரது பெயர் கண்ணன் (வயது 21). வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்தவர். கைதான அந்த மாணவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம், உப்பிலியக்குடி அருகே உள்ள வடுகப்பட்டியில் மகா சுருளி சுவாமிகளின் 83-ம் ஆண்டு குருபூஜை விழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. முன்னதாக வடுகப்பட்டியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 1000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளையின் உரிமையாளர்கள் என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், குக்கர், மிக்சி, மின்விசிறி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, அன்னவாசல், இலுப்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் வடுகப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பலர் கல்வி மற்றும் தொழில் சம்பந்தமாக சீனாவுக்கு சென்றிருந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்க வேண்டுமென குடும்பத்தினர் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் சீனாவில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பலர், இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினர். விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சீனாவில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த 100-க்கும் மேற்பட்டோரை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊர் திரும்பியவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பெயர், விவரம் தெரிந்தால் வீண் வதந்திகள் பரவி அதன் மூலம் பிரச்சினைகள் ஏற்பட்டு விடும் என்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சீனா சென்றுவிட்டு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவுடையார்கோவில் அருகே உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது 42). இவர் சீனாவில் 2 ஓட்டல்கள் நடத்தி வந்தார். சமீபத்தில் சீனாவில் வைத்து அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. உடனே புதுக்கோட்டைக்கு வந்த அவர் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை.
ஓட்டலில் பணியாட்கள் இல்லாததால் சக்திகுமார் மீண்டும் சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பணியாற்றி வந்த அவருக்கு மஞ்சள்காமாலை நோய் முற்றியதையடுத்து மீண்டும் அவர் கடந்த 4-ந்தேதி புதுக்கோட்டைக்கு திரும்பினார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 14-ந்தேதி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந்தேதி சக்திகுமார் இறந்தார்.
சீனாவில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பிய அனைவரும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். ஆனால் சக்திகுமார் திரும்பிய விவரம் சுகாதாரத்துறைக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அவர் கண்காணிக்கப்படாமலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இறந்துள்ள சம்பவம் சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திகுமார் உண்மையிலேயே மஞ்சள் காமாலை நோயால்தான் இறந்தாரா? அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாரா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 220 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற சின்னப்பாண்டி (வயது 40), அவரது மகன் மணிகண்டன் (23), அந்தோணி (55) ஆகியோர் நேற்றிரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 3 பேரையும் சிறைப்பிடித்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜெகதாப்பட் டினம் மீன்பிடி தளத்தில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர் இதில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் சென்ற மாரியப்பன், அவரது மகன் சக்திபாலன், சிவலிங்கம், ராஜகுரு மற்றும் கிருஷ்ணமூர்த்தி விசைப் படகில் சென்ற கிருஷ்ண மூர்த்தி, தனபால், மாரியப்பன், முத்துக்குமார் ஆகிய 8 பேரும் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்ததுடன், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட 11 பேரையும் 3 விசைப் படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று யாழ்ப்பாணம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்துகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மீனவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அவர்களது குடும்பத்தினர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் தனுஷ் கோடி அருகே இலங்கை மீனவர்கள் 3 பேரை நேற்று இந்திய கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம் 2020-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி, நிருபர்களிடம் கூறிய தாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 682 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 63 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்களும், 85 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 498 வாக்காளர்கள்இடம் பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12 லட்சத்து 78 ஆயிரத்து 598 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை நடைபெற்ற 2020-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 17 ஆயிரத்து 118 ஆண் வாக்காளர்கள், 20 ஆயிரத்து 316 பெண் வாக்காளர்கள் மற்றும் 37 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 37 ஆயிரத்து 471 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் போது 260 ஆண் வாக்காளர்கள், 311 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 571 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்து 537 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர பகுதிகளில் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம பகுதிகளில் 824 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 909 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.
சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களில் 5 ஆயிரத்து 239 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 123 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 367 வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீப காலமாக நடிகர் விஜய்யின் படம் வெளியாகும் போதெல்லாம் அவர் மீதான அரசியல் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற்போல் படம் வெளியாகும் முன்பு நடைபெறும் பாடல் வெளியீட்டு விழாக்களில் அரசியல் நெடி கலந்து விஜய் பேசி வருவது அவரது ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது.

விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிந்து மீண்டும் நெய்வேலியில் படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய், அங்கு வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி நெய்வேலி என்றும் பதிவிட்டு இருந்தார். இதனால் அவரது அரசியல் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட தலைவர் ஒரு பரபரப்பு போஸ்டரை அச்சடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளார். அதில், அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தளபதி அவர்கள் என்றும் ரசிகர்களான எங்களுக்கு மாஸ்டர் ஆக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம், தயவுசெய்து அவரை உங்களுக்கு ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள் என்று வாசகம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யை சீண்டும் அரசியல்வாதிகளை எச்சரிக்கும் வகையிலேயே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.






