என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகியால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
    X
    விஜய் ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகியால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

    ‘மாஸ்டராக இருக்க விரும்புகிறோம், ஹெட்மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்’- விஜய் ரசிகர் எச்சரிக்கை

    ‘மாஸ்டராக இருக்க விரும்புகிறோம் ஹெட்மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்’ என்று அரசியல்வாதிகளை எச்சரிக்கும் வகையில் விஜய் ரசிகரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை:

    சமீப காலமாக நடிகர் விஜய்யின் படம் வெளியாகும் போதெல்லாம் அவர் மீதான அரசியல் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற்போல் படம் வெளியாகும் முன்பு நடைபெறும் பாடல் வெளியீட்டு விழாக்களில் அரசியல் நெடி கலந்து விஜய் பேசி வருவது அவரது ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது.

    இதற்கிடையே நெய்வேலியில் நடைபெற்று வந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென அழைத்து சென்று விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிகில் படத்தில் அவர் வாங்கிய சம்பளம் தொடர்பான சர்ச்சையே இந்த வருமான வரி சோதனைக்கு காரணமாக கூறப்பட்டாலும், அதற்கு பின்னால் அரசியல் காரணங்களும் இருப்பதாக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ரசிகர்களுடன் செல்பி எடுத்த விஜய்

    விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிந்து மீண்டும் நெய்வேலியில் படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய், அங்கு வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி நெய்வேலி என்றும் பதிவிட்டு இருந்தார். இதனால் அவரது அரசியல் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட தலைவர் ஒரு பரபரப்பு போஸ்டரை அச்சடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளார். அதில், அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தளபதி அவர்கள் என்றும் ரசிகர்களான எங்களுக்கு மாஸ்டர் ஆக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம், தயவுசெய்து அவரை உங்களுக்கு ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள் என்று வாசகம் இடம்பெற்றுள்ளது.

    நடிகர் விஜய்யை சீண்டும் அரசியல்வாதிகளை எச்சரிக்கும் வகையிலேயே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×