search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் செய்யும் மாணவரை படத்தில் காணலாம்
    X
    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் செய்யும் மாணவரை படத்தில் காணலாம்

    புதுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் செய்த கல்லூரி மாணவர் கைது

    புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் “டிக் டாக்” செயலியை பயன்படுத்தி வீடியோ தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு “டிக் டாக்” செயலி மூலம் வீடியோ தயார் செய்து வெளியிடும் சிலர் மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சில வாலிபர்கள் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் “டிக் டாக்” செய்து வெளியிட்டு, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், திருச்சி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், சாலையோரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கல்லூரி மாணவர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் “டிக்டாக்” செய்து, அதை வெளியிட்டு உள்ளார். இந்த மாணவர், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது இடிப்பது, அவர்களின் முன்பு முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடுவது, அவர்களை தள்ளி விடுவதுபோல “டிக் டாக்” செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

    இதைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை கைது செய்யுமாறு வடகாடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாஸ் அந்த மாணவரை கைது செய்தார். அவரது பெயர் கண்ணன் (வயது 21). வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்தவர். கைதான அந்த மாணவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×