என் மலர்
புதுக்கோட்டை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த் நல்ல நடிகர் என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அதையும் தாண்டி அவரை விட சிறப்பாக நடிப்பதற்கு இளம் நடிகர்கள் வந்து விட்டனர். எனவே ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்யட்டும். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என நடிகர் ரஜினிகாந்த் கூறுவது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உள்ளதுதான்.
ரஜினிகாந்தை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர். அவரை பற்றிய விவரம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். வெற்று அறிவிப்புகளை மட்டுமே ரஜினிகாந்த் வெளியிட்டு வருகிறார். 30 சதவீதம் பேரை வெளியில் இருந்து சேர்க்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அவரின் இயலாமையை காட்டுகிறது.
தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் வழங்காதது அ.தி.மு.க. செய்த சூழ்ச்சி. அ.தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை தே.மு.தி.க.தான் இனி முடிவு செய்ய வேண்டும். த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க.வில் இணையமாட்டார் என நம்புகிறேன். கோவிட்-19 வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏப்ரல் 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருச்சியில் தொடங்கி வேதாரண்யம் வரை சமூக நல்லிணக்க பாத யாத்திரை நடைபெற உள்ளது. பா.ஜ.க.வில் மாநிலத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களை சமாளிக்க முடியாமல் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக அக்கட்சி அறிவித்துள்ளது. அதே சமயம் இதுவரை பட்டியல் இன மக்களுக்காக எந்தஒரு நல்லதையும் பா.ஜ.க. செய்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்த தாண்றீஸ்வரத்தில் சத்ரு சம்கார மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் உறுதி மொழியுடன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 180 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அன்னவாசல், சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் மிக்சி, கிரைண்டர், குத்துவிளக்கு, நாற்காலிகள், வெள்ளி பாத்திரம், வெள்ளி நாணயம், ரொக்கப்பணம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண இலுப்பூர் வட்டாட்சியர் முருகேசன், ஒன்றிய தலைவர் ராமசாமி மற்றும் தாண்றீஸ்வரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இலுப்பூர், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிகாமணி, பிரான்சிஸ் தலைமையில், அன்னவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் தாண்றீஸ்வரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசு உத்தரவின்படி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 5 சதவீத லைசால், 1 சதவீத ஹைப்போ குளோரைடு கரைசல் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கை கழுவும் முறை பற்றி மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் நோய் தொற்று பரவாமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிக அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கொரோனா குறித்து எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகர் நலஅலுவலர் யாழினி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை தாசில்தார்களாக கலெக்டர் உமா மகேஸ்வரி 4 மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்தார். இந்த நியமனத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வரவேற்றது. தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து, துணை தாசில்தார் நியமன உத்தரவை ரத்து செய்யுமாறு கலெக்டருக்கு மாநில வருவாய் நிர்வாக ஆணையரகம் அண்மையில் உத்தரவு வழங்கி உள்ளது. எனினும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட துணை தாசில்தார் நியமன உத்தரவை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியல் வெளியிட வேண்டும். ஆணையரகத்தின் உத்தரவை பின்பற்றாமல் செயல்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதற்கான விவரத்தை ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, ஆணையரகத்தின் அறிவுரைப்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்துவிட்டு 36 பேர் கொண்ட புதிய பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்ததை கண்டித்து கடந்த 7-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கவியரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜபரூல்லா முன்னிலை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் அரசு விதிகளை மீறி போடப்பட்ட துணை தாசில்தார் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அலுவலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ மாக இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா நோய் இருக்கிறது என்று அறிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இன்று வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதால் நோய் இதுவரை வர வில்லை.
பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து எந்தவிதமான பதட்டமும், பீதியும் அடைய வேண்டாம். அதேபோல் வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி, முட்டை ஆகியவை சாப்பிடுவதால் இந்த நோய் பரவும் என்ற கருத்து தவறானது. சீனாவில் இந்த நோய் தாக்கத்தால் 2 சதவீத இறப்பு தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவை தவிர்த்து மற்ற இடங்களில் இறப்பு சதவீதம் என்பது 0.2 சதவீதம்தான்.
கொரோன வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷக்கடி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தஞ்சையில் ரூ.5 கோடி மதிப்பில் ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. சென்னையை அடுத்து மதுரையில் கல்லீரல் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் எலி பேஸ்ட்டால் பலர் பாதிக்கப்படும் நிலையில், மற்ற துறையுடன் கலந்து பேசி அதை தடை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து தினமும் கேட்டறிந்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் புதிதாக பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களையும் பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகிறோம்.
சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் தரக் குறைவாக பேசும் காவலர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை நகரில் உள்ள நகராட்சிக்கு வரி பாக்கி, வாடகை பாக்கி மற்றும் கடையின் ஏலத்தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் நகராட்சிக்கு ஏலத்தொகை செலுத்தாத 3 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் பார்களையும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 3 டாஸ்மாக் பாரில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒவ்வொரு டாஸ்மாக் பாருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து, வசூல் செய்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் பாரில் இருந்து 2½ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, நகராட்சி அதிகாரிகள் அழித்தனர். இந்த ஆய்வின்போது நகரமைப்பு அலுவலர் ரமேஷ், வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.






