search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை
    X
    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை

    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் - கலெக்டர்

    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசு உத்தரவின்படி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 5 சதவீத லைசால், 1 சதவீத ஹைப்போ குளோரைடு கரைசல் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கை கழுவும் முறை பற்றி மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் நோய் தொற்று பரவாமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிக அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கொரோனா குறித்து எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகர் நலஅலுவலர் யாழினி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×