search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் பாரில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    டாஸ்மாக் பாரில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    புதுக்கோட்டை நகரில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    புதுக்கோட்டை நகரில் 2½ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை நகரில் உள்ள நகராட்சிக்கு வரி பாக்கி, வாடகை பாக்கி மற்றும் கடையின் ஏலத்தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் நகராட்சிக்கு ஏலத்தொகை செலுத்தாத 3 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் பார்களையும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 3 டாஸ்மாக் பாரில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒவ்வொரு டாஸ்மாக் பாருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து, வசூல் செய்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் பாரில் இருந்து 2½ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, நகராட்சி அதிகாரிகள் அழித்தனர். இந்த ஆய்வின்போது நகரமைப்பு அலுவலர் ரமே‌‌ஷ், வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
    Next Story
    ×