என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு புதுக்கோட்டை நகராட்சி வீதிகளில் விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
    புதுக்கோட்டை:

    பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் ரூ.100 மதிப்புடைய காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வீதிகளில் சென்று விற்பனை செய்யும் பணி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியினை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார்.

    காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வீதிகளில் சென்று விற்பனை செய்யும் பணி கூட்டுறவுத்துறையின் சார்பில் நடமாடும் வாகனத்தின் மூலம் வெங்காயம், தக்காளி, 2 வகை காய்கறிகள், தேங்காய், துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 9 வகையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.100-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் காய்கறிகள் வாங்கும் பொழுது கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். இதேபோல் வாகனங்களில் விற்பனை செய்ய வரும் கூட்டுறவுத்துறை பணியாளர்களும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதுதவிர உழவர்சந்தையில் கூட்டம் சேராத வகையில் ரூ.150-க்கு கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி, வாழை, கீரை, தக்காளி, சின்னவெங்காயம், பெரியவெங்காயம், உருளை, எலுமிச்சை, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் உள்ளிட்ட 13 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று காய்கறி வழங்கப்படுவதால் தேவையின்றி பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் புதுக்கோட்டை அருகே உள்ள கேப்பரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வருகைபுரிந்த பீகார் மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி போன்றவை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று, அங்குள்ள முதியவர்களுக்கு நிலவேம்பு கசாயம், பழங்கள் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    ஆலங்குடி அருகே உள்ள செரியலூர் இனாம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கீரமங்கலம் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செரியலூர் இனாம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கீரமங்கலம் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு செரியலூர் இனாம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ்.முகமது ஜியாவூதின் தலைமை தாங்கி னார். செரியலூர் இனாம் ஊராட்சி செயலாளர் இன்பஜோதி வரவேற்றார்.

    திருவரங்குளம் வட்டார ஆணையர் ஸ்ரீதரன் மற்றும் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சிகள் சங்கர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செரியலூர் இனாம் ஊராட்சி தெக்கிக்காடு மேல் பகுதியிலிருந்து கீரமங்கலம் செரியலூர் சாலைகள் வழியாக செரியலூர் இனாம், கறம்பக்காடு இனாம், காதர் மொகைதீன் நகர் மற்றும் பல்வேறு  கிராமத்திற்கும் சுமார் 5 ஆயிரம் லிட்டர் கொரோனா வைரஸ் தடுப்பு உப்பு கலந்த நீர் சாலைகளிலும், சாலையோர வீடுகளிலும் தீயணைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டைமாவட்டத் தில் ஆலங்குடி தாலுகாவில் முதன் முதலில் செரியலூர் இனாம் ஊராட்சியில் தான் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஊராட்சியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் 144 தடை பற்றியும் ஊராட்சியில் சுகாதாரம் பற்றி திருவரங்குளம் வட்டார ஆணையர் ஸ்ரீதரன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிருமி நாசினி கலந்த நீரை தெளிக்க உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில்  கீரமங்கலம் தீயணைப்பு நிலைய மூத்தியா (முன்னணி தீயணைப்போர்) ராமலிங்கம்,  திருநாவுக்கரசர் மற்றும் கீரமங்கலம் மருத்துவர் சுகாதார ஆய்வாளார் சேகர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மேற்பார்வையாளர், துப்புரவு பணியாளர்கள் பொது மக்கள், செரியலூர் இனாம், தீயணைப்பு நிலைய காவல் மீட்பு குழுவினர் ஆகியோர் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
    கீரனூர் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நார்த்தாமலை ஆறுமுகம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    கீரனூர்:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி மேற்பார்வையில் கிருமி நாசினி மருந்துகளும், பிளீச்சிங் பவுடர் போன்றவைகளும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது.

    கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தா மலை ஆறுமுகம், காந்தி நகர், பள்ளிவாசல் வீதி, சிவன் கோவில் போன்ற பகுதிகளிலும் ஆய்வு மேற் கொண்டு கிருமி நாசினி மற்றும் பவுடர் தூவிய நார்த்தாமலை ஆறுமுகம் எம்.எல்.ஏ. அனைத்து மக்களையும் சந்தித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    எம்.எல்.ஏ.வுடன் செயல் அலுவலர் ஆஷாராணி, துப்புரவு மேஸ்திரி மகேஸ் வரி, நகர அ.தி.மு.க. செயலா ளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் அப்துல் கனி, வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் கருப் பையா ஆகியோர் உடன் சென்றனர்.
    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரசின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் சாலைகளில், அரசு மருத்துவமனைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு வாகனம் மற்றும் நகராட்சி லாரிகள் மூலம் வீதி வீதியாக சென்று குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில், மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் முன்னிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், ஆம்புலன்ஸ் வாகனங்கள், டீன் வாகனம் போன்றவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை நகராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில், ஒரு தீயணைப்பு வாகனம், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் லாரி, 2 மினி ஜெட்ரானிக் வாகனங்கள், 15 பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், கைத்தெளிப்பான் மற்றும் எந்திரத்திரம் மூலம் தெளிப்பான் போன்றவற்றை கொண்டு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

    மேலும் துப்பரவு பணியில் 250 பேரும், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 150 பேரும் ஈடுபட்டு உள்ளதாக நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் தெரிவித்து உள்ளார். இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் ஊராட்சியில் உள்ள பகுதிகளில் ஊராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையில், பாண்டிமான் கோவில் வீதி, சிவசக்தி நகர், அம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    விராலிமலை, வடகாடு பகுதிகளில் தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.
    விராலிமலை:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைப் பகுதிகளும் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் விராலிமலை பகுதிகளில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி மற்றும் விராலிமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமராஜர் நகர் பகுதியில் சில இளைஞர்கள் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பிடித்து தோப்புக்கரணம் போடச்சொல்லி அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை குறித்து விரிவாக எடுத்து கூறினார். பின்னர் அவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாஸ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை அமர வைத்து கொரோனா விழிப்புணர்வு படங்களை காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நூதன முறையில் தண்டனையை வழங்கினார். பின்னர் அவர்களிடம் மீண்டும் சாலைகளில் உத்தரவை மீறி சுற்றுத்திரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். 
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மரமடக்கி கிராமத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த வாலிபர் தனிமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மரமடக்கி கிராமத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த வாலிபர் தனிமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்.

    ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து வந்தவரை, பெற்றோர் தனிமைப்படுத்தியதால் தற்கொலை என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    கந்தர்வகோட்டை அருகே விவசாய வேலையில் ஈடுபட்ட பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குடி:

    கந்தர்வகோட்டை அருகேயுள்ள சிவன்தான்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சகிலா (வயது 60). இவர் வீட்டின் அருகே விவசாய வேலையில் ஈடுபட்ட போது அங்கு வந்த விஷபாம்பு சகிலாவைகடித்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

    இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் கூடுதல் விலைக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி விற்ற மருந்து கடைக்கு கலெக்டர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதுக்கோட்டையில் அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி இன்று காலை ஆய்வு செய்தார்.

    பின்னர் புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள மருந்துக்கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஒரு மருந்து கடையில் கூடுதல் விலைக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைக்கு கலெக்டர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 292 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதில் ஒருவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    வருகிற 22-ந்தேதி பொது மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அன்றைய தினம் பொது மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். மருந்து கடைகளில் கூடுதல் விலைக்கு முகக்கவசம், கிருமி நாசினி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அப்போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் உடனிருந்தார்.
    மணல்மேல்குடியில் வீட்டில் பதுக்கிய 65 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    மணமேல்குடியை அடுத்த யாக்கூப் ஹசன்  பேட்டையைச் சேர்ந்தவர் ஜமால் முகமது. இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அங்கு குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சொந்த ஊருக்கு விஷேச நாட்களில் மட்டுமே ஜமால் முகமது தனது குடும்பத்தினருடன் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் யாக்கூப் ஹசன் பேட்டையில் உள்ள ஜமால் முகமதுவின் வீடு எப்போதும் பூட்டியே கிடக்கும். இந்நிலையில் ஜமால் முகமதுவின் உறவினர் ஒருவர் ஜமால் முகமதுவின் வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே மாடிப்படிக்கு கீழே சில மூட்டைகள் கிடந்துள்ளது. அதை அவர் எடுத்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்துள்ளது. உடனே அவர் இது குறித்து ஜெகதாபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

    தகவலின் பேரில் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு 65 கிலோ கஞ்சா மூடைகளில் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கஞ்சாவை பதுக்கியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் காய்கறி சூப், நண்டு சூப் மற்றும் எலும்பு சூப் போன்றவை புதுக்கோட்டை காந்தி நகர் 1-ம் வீதியில் வழங்கப்பட்டது. இதில் மெஸ் மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சூப் வழங்கி, கொரோனா வைரஸ் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி தலைமை தாங்கினார். இதில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் கை மற்றும் கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல் குறித்தும், பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். தும்மும் போதும், இருமலின் போதும், தொடுதல் மூலமாகத்தான் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதாகவும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் விரிவாக எடுத்து கூறினர்.

    கந்தர்வகோட்டையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் கார்த்தி மழவராயர் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பொது மக்கள் சோப்பு போட்டு கைகளை கழுவு வதன் அவசியம், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஊர்வலத்தில் ஆணையர் காமராஜ், துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) கருப்பையா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்து கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ் குழுவினர் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விளக்கமும், செயல்முறை பயிற்சியும் வழங்கினார்.

    பொன்னமராவதி போலீஸ் நிலையத்தின் முகப்பில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக வாலியில் தண்ணீர், கை கழுவ சோப்பு, கிருமியை அழிக்கும் விதமாக கிருமி நாசினி மருந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள், தங்கள் கைகளை கழுவிவிட்டு வர வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கூறியுள்ளார். 
    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மற்றும் ஷாப்பிங் மால்களை மூட உத்தரவிட்டதோடு பொதுமக்கள் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் அதிக அளவிலான ஜல்லிக்கட்டு நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 29 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று விராலிமலை அருகேயுள்ள ராஜகிரி மற்றும் பொன்னமராவதி அருகே உள்ள பொன்னம்பட்டி ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிட்டவாறு நடத்தப்பட்டது.

    ராஜகிரியில் நடந்த ஜல்லிக்கட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அங்குள்ள திடலில் நடந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    பொன்னம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கும் 5 ஆயிரம் பேர் வரை கூடியிருந்தனர்.

    ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் அவர்கள் தடுக்கப்படவில்லை. மாடு பிடி வீரர்களுக்கு மட்டும் போட்டி தொடங்கு முன்பு அவர்களது கைகளை சானிட்டைசர் எனப்படும் திரவம் மூலம் கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்டனர். பொது மக்களுக்கு எந்தவித முன்னேற்பாடும் செய்து தரப்படவில்லை.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு வரும்போது, இந்த ஜல்லிக்கட்டு போட்டியையும் மற்றொரு நாளுக்கு தள்ளி வைத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தகுந்த ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 15 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். போட்டி நடத்தப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் மட்டும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனாலும் பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியதை தவிர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இனியும் மீதமுள்ள போட்டிகளையாவது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
    அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள காரப்பட்டையை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி (வயது 70). இவரையும், இவரது மகன் முத்து ஆகிய 2 பேரையும் நமணராயசத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி (51) தரப்பை சேர்ந்தவர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் மூர்த்தி கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி களமாவூர் பகுதியில் உள்ள டீக்கடையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் மூர்த்தியை வெட்டிக்கொலை செய்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிள்ளனூரை சேர்ந்த பாக்கியராஜ், வீராச்சாமி மகன் மாரிமுத்து, உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த், கூலிப்படையை சேர்ந்த மதுரை கொட்டக்கூடி பழனிக்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த பிரபு, திடீர்நகரை சேர்ந்த அருள்முருகன், திருச்சி சமயநல்லூர் கண்ணன், ஜெயந்திபுரம் ராஜா, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஆறுமுகம், வானாமாமலை, திம்மராஜபுரத்தை சேர்ந்த மருதுபாண்டி, பாளையங்கோட்டையை சேர்ந்த உடையார், சிவகங்கையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. இதையடுத்து 17 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூலிப்படையை சேர்ந்த கரூர் மாவட்டம், வேலாயுதபாளையம் விக்னேஷ் (23), பரமத்தி வேலூர் சங்கர் (21), சூர்யா (23), கரூர் கோபி (21) ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கீரனூர் குற்றவியல் நீதிபதி பிச்சைராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×