search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வகோட்டையில் கொரோனா வைரஸ் குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்த போது எடுத்த படம்.
    X
    கந்தர்வகோட்டையில் கொரோனா வைரஸ் குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்த போது எடுத்த படம்.

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் காய்கறி சூப், நண்டு சூப் மற்றும் எலும்பு சூப் போன்றவை புதுக்கோட்டை காந்தி நகர் 1-ம் வீதியில் வழங்கப்பட்டது. இதில் மெஸ் மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சூப் வழங்கி, கொரோனா வைரஸ் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி தலைமை தாங்கினார். இதில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் கை மற்றும் கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல் குறித்தும், பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். தும்மும் போதும், இருமலின் போதும், தொடுதல் மூலமாகத்தான் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதாகவும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் விரிவாக எடுத்து கூறினர்.

    கந்தர்வகோட்டையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் கார்த்தி மழவராயர் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பொது மக்கள் சோப்பு போட்டு கைகளை கழுவு வதன் அவசியம், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஊர்வலத்தில் ஆணையர் காமராஜ், துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) கருப்பையா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்து கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ் குழுவினர் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விளக்கமும், செயல்முறை பயிற்சியும் வழங்கினார்.

    பொன்னமராவதி போலீஸ் நிலையத்தின் முகப்பில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக வாலியில் தண்ணீர், கை கழுவ சோப்பு, கிருமியை அழிக்கும் விதமாக கிருமி நாசினி மருந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள், தங்கள் கைகளை கழுவிவிட்டு வர வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கூறியுள்ளார். 
    Next Story
    ×