என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.
    கீரனூர்:

    புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றையும், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

    இதில், ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.வெங்கடாசலம், ஒன்றிய பெருந்தலைவர் கே.ஆர்.என்.போஸ் , மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஊராட்சி மன்றத்தலைவர் எம்.ஜெயராணி மாயகிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மணிராஜன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஓ.ஆறுமுகம், அத்திரிவயல் பிரபாகரன், ஜி.வி.முருகன் உள்ளிட்டோர் பாதுகாப்பு இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
    ஆலங்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாரத்தில் ஆலங்காடு, பள்ளத்தி விடுதி, சிக்கப்பட்டி, காட்டுப்பட்டி, ராசியமங்கலம் போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். சோளக்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் பயிரிட்டுள்ள கதிர்களை கடந்த மார்ச் மாதமே அறுவடை செய்திருக்க வேண்டும் ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சோளக்கதிர் அடிக்கும் எந்திரங்கள் கிடைக்கவில்லை. மேலும் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சப்பட்டு வேலைக்கு வரவில்லை. ஏப்ரல் 14-ந் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிந்து விடும். பின்னர் சோளம் அறுவடை செய்யலாம் என்று விவசாயிகள் காத்திருந்தனர்.

    இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சோளப்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் விளைந்த கதிர்களை மயில், காகம் போன்றவை தின்று அழித்து வருகிறது. கதிர்களை பாதுகாக்க வழியில்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். மேலும் விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ஊரடங்கு உத்தரவு காரணமாக ரூ. 100-க்கு அனைத்து காய்கறிகள் அவரவர் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை

    மக்களை கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியில் வருவதை தவிர்க்கும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆலோசனையின் பேரில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் ஏற்பாட்டில் நகர் முழுவதும் நகராட்சி வாகனம் மூலம்  ரூபாய் 100/-க்கு அனைத்து காய்கறிகள், தேங்காய் முதற்கொண்டு அவரவர் இல்லப்பகுதிகளுக்கே சென்று துணிப்பையில் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இதனை அந்தந்த பகுதி மக்கள் ரூபாய் 100/-கொடுத்து வாங்கி செல்கிறார்கள். 
    காய்கறிகள்
    இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் நகராட்சி நிர்வாகத்தின் இப்பணியை பாராட்டுவதோடு மட்டுமின்றி நன்றியும் தெரிவித்துள்ளனர்.
    ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் பொதுமக்கள் மற்றும் பார்வையற்றோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலம் வடக்கு வட்டப்பகு தியில் உள்ள அறிவொளி நகரில் பொதுமக்கள் மற்றும் பார்வையற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் 144 ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடக்கப்பபட்டுள்ளவர்களுக்கு ஆலங்குடி தாசில்தார் கலைமணி தலைமையில் அரிசி பை, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர்கள் குணசேகரன், கீரமங்கலம் முருகேசன், வல்லநாடு வெண்ணிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் சரண்யா, புஷ்பராஜ் மற்றும் கிராம உதவியாளர் செந்தில், கோகிலா, மகேஸ்வரன், அப்பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
    பொன்னமராவதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த 4 பேரை கைது செய்தனர்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மறித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் நடத்திய விசாரணையில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த சுபாஸ்சங்கர் (20), அஜீத்குமார் (22), பொன்னமராவதி பகு தியை சேர்ந்த வினோத் (22) ஆகிய 3 பேரும் திண்டுக்கல் மணக்காட்டூர் ஆலம்பட்டியில் பொன்னன் (52) என்பவரிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்வதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலங்குடி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி குளத்தில் மீன் பிடித்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகேயுள்ள அனவயல் கிராமத்தில் உள்ள தானாண்டி அம்மன் கோவிலில் குளம் உள்ளது. இந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த 12 பேர் ஊரடங்கு தடை உத்தரவை மீறி மீன் பிடித்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாசன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த 12 பேரையும் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    அறந்தாங்கி அருகே மது கிடைக்காத விரக்தியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42) டிரைவர். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர். ஊரடங்கு அமலில் இருப்பதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மது கிடைக்காத விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கருப்பையா நேற்று அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுவுக்கு அடிமையான லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அறந்தாங்கி பகுதியில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
    அறந்தாங்கி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் குடிமகன்கள் பலர் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டனர்.

    இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மது பாட்டில்கள் கிடைக்காமல் மாற்று வழியில் போதையை தேடி உயிரை இழந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நண்பர்கள் அன்வர் ராஜா, அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் மதுவுக்கு அடிமையானவர்கள். அவர்கள் மது கிடைக்காததால் போதைக்காக ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்து உயிரிழந்தனர். இந்தநிலையில் அறந்தாங்கி பகுதியில் மேலும் ஒருவர் மதுவுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 57). லாரி டிரைவரான இவரது மனைவி இறந்து விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆனாலும் வீட்டை விட்டு வெளியேறிய கருப்பையா, தான் வேலை பார்த்து வரும் லாரி செட்டிலேயே தங்கியிருந்தார்.

    ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மதுவுக்காக அலைந்த கருப்பையா கிடைக்காததால் மிகவும் விரக்தியடைந்தார். நேற்று லாரி செட் அருகிலேயே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    அரசு உத்தரவை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள இறைச்சி கடைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு உத்தரவை மீறி புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதியில் உள்ள ஒரு இறைச்சி கடையை திறந்து கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் யாழினி தலைமையிலான அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இறைச்சி கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இறைச்சி கடை திறக்கப்பட்டு கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் கடையில் இருந்த கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கடையின் உரிமையாளர் நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் அதை அவர்கள் எடுத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆலங்குடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விதிகளை மீறி விற்பனை செய்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

    ஆலங்குடி:

    மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவால் அரசின் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் மது குடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு பலர் மது பாட்டில்களை வாங்கி, அதை பதுக்கி வைத்து விற்று வருகிறார்கள். போலீசார் அதனை கண்காணித்து தடுத்து வருகிறார்கள்.

    புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமாரின் உத்தரவுபடி ஆலங்குடி மது விலக்கு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையில் போலீசார் ஆலங்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆலங்குடி ஆண்டிக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த மேலநெம்மக்கோட்டை கணேஷ் நகர் சேர்ந்த கனக ராஜ் மற்றும் ஆலங்குடி காமராஜர் தெருவை கருப்பையா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,985 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும். பின்னர் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மதுபானம் கிடைக்காததால் சேவின் லோசனை குளிர்பானத்தில் கலந்து கடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபான பிரியர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் போதைக்காக மாற்று வழியை கையாள்கின்றனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா என்பவர் தனது நண்பர்களான அருண் பாண்டி, அசன் மைதீன் ஆகியோருடன் அடிக்கடி டாஸ்மாக் சென்று மது அருந்துவது வழக்கம். தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடந்த சில தினங்களாக மது கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளனர்.

    இந்நிலையில், சோடாவில் சேவிங் லோசனை கலந்து குடித்தால் போதை வரும் என அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் நேற்று இரவு சோடாவில் சேவிங் லோசனை கலந்து குடித்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் மூன்று பேரும் மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, பழமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருண் பாண்டி, அசன் மைதீன் இருவரும் உயிரிழந்தனர்.

    அன்வர் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

     இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    144 தடை உத்தரவு எதிரொலியாக வீட்டு மாடியில் இருந்து வானில் பட்டம் விட்டு மக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தியேட்டர்கள், பூங்காக்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்துமே மூடப்பட்டு உள்ளது.

    மேலும் 144 தடை உத்தரவை மீறி சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு மாணவர்கள், குழந்தைகள் வீட்டில் உள்ள நிலையில் பெற்றோர்கள் அவர்களை சமாளிக்க என்னவெல்லாம் செய்வது என்று யோசித்து புதிய முறையில் பாரம்பரிய விளையாட்டுகளை தற்போது அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து விளையாட வைத்து வருகின்றனர்.

    குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டையில் பல்லாங்குழி, தாயம், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை சொல்லி கொடுக்கும் பெற்றோர்கள் தற்போது மாணவர்களின் எண்ண ஓட்டத்தை நன்றாக வைத்து கொள்ள பட்டம் செய்து மாலை நேரங்களில் வானில் பறக்க விடுகின்றனர். புதுக்கோட்டை காமராஜபுரம், கணேஷ்நகர் குடியிருப்பு, போஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் பட்டம் விட்டு மக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வானில் பட்டம் விட்டு வருகின்றனர். பேப்பர் மூலம் செய்யப்படும் பட்டம், நூல் மூலம் வானில் பறக்க விடப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் மாலை நேரத்தில் வீட்டு மாடிக்கு சென்று வானில் பட்டத்தை அக்கம் பக்கத்து வீடுகளுடன் போட்டி போட்டு கொண்டு பறக்க விட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டங்கள் மாலை நேரங்களில் வானில் பறப்பதால் பார்க்கவே ரசிக்கும் வண்ணம் உள்ளது.
    ×