என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஊரடங்கு நேரத்திலும் வயிற்று பிழைப்பிற்காக 95 வயதில் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி முதியவர் விற்பனை செய்கிறார்.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பளுவான் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 95). இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். செல்லையா தனது தோட்டத்தில் தனியாக வசிக்கிறார். தன் தேவைகளுக்காக தானே உழைத்து சம்பாதித்துக் கொள்கிறார். மகன்கள் உணவு கொடுத்தாலும் உழைப்பை விட முடியாது என்கிறார். இப்போது நுங்கு சீசன் என்பதால் உயரமான பனைமரங்களில் ஏறி நுங்கு இறக்கி தனி ஆளாக மூட்டையில் கட்டி சைக்கிளில் ஏற்றி வந்து கொத்தமங்கலம் வாடிமாநகரில் விற்பனை செய்து வருகிறார்.

    இதுகுறித்து செல்லையா கூறுகையில், எனக்கு 95 வயது ஆகிறது. எனக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர். 15 வயதில் இருந்து பனை மரம் ஏறி நுங்கு, பனை ஓலை வெட்டும் வேலை செய்து வருகிறேன். பனை ஓலை வெட்டி காயவச்சு வீடுகள் கட்டிக் கொடுப்பேன். பனை மரம் ஏறி நுங்கு வெட்டி கொண்டு வந்து கடைவீதியில் விற்கிறேன். ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை வருமானம் வரும். அதேபோல இந்த சீசன் முடிஞ்சதும் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பேன். தென்னை மரம் சுத்தம் செய்வேன். இப்ப எனக்கு வயதாகிவிட்டதால் யாரும் தென்னை மரம் ஏற அழைப்பதில்லை. நுங்கு சீசன் முடிந்ததும் என்னிடம் உள்ள 6 தென்னை மரங்களில் காய்க்கும் தேங்காய்களின் வருமானத்தில் தான் ஒரு வருட வாழ்க்கை. யாரிடமும் உணவுக்காக போய் நிற்கமாட்டேன்.

    இப்போது கொரோனா வைரஸ் பரவுகிறது என்று கடைகளை எல்லாம் மூடி வீட்டனர். கடைவீதியும் வெறிச்சோடிக் கிடப்பதால் நான் கொண்டு போகிற நுங்குகளை சாலை ஓரம் வைத்து விற்பேன். இதுவரை அரசு உதவித் தொகை வாங்கவில்லை. உடலில் தெம்பு இருக்கும் வரை உழைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய இறுதி காலம் வரை உழைத்து பிழைக்க வேண்டும் என்றார். 95 வயதிலும் உழைப்பே முக்கியம் என்று உழைத்துக் கொண்டிருக்கும் முதியவர் செல்லையாவை பாராட்டும் அப்பகுதி மக்கள், அவருக்கு மாவட்ட நிர்வாகம் கருணை உள்ளத்தோடு முதியோர் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கறம்பக்குடி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தென்னகரைச் சேர்ந்த மனோகரன் மகள் பானுப்பிரியா (வயது 20). இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (26) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் மனோகரனுக்கு தெரிய வந்தது.

    மனோகரன் பானுப்பிரியை உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று வைத்துள்ளார். மேலும் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பானுப்பிரியா வீட்டை விட்டு வெளியேறி காதலன் முருகானந்தம் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

    இது குறித்து அறிந்ததும் மனோகரன் தனது உறவினர்களுடன் முருகானந்தம் வீட்டிற்கு சென்றார். இதனால் உயிருக்கு பயந்த காதல் ஜோடி கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஆலங்குடி டி.எஸ்.பி. முத்து ராஜா தலைமையில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஹேமலதா, கறம்பக்குடி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் இரு வீட்டார் சார்பிலும் விசாரணை நடந்தது. இதில் பானுப்பிரியா காதலன் முருகானந்துடன்தான் செல்வேன் என்று கூறினார்.

    அதன்பேரில் இருதரப்பு பெற்றோர்களிடம் போலீசார் சமரசமாக பேசினர். தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கறம்பக்குடி வடக்குத்தெரு மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின் காதலர்களுக்கு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.
    தனது எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்டு இறுதியில் தனது உயிரைவிட்ட நாயை நினைத்து அப்பகுதியில் உள்ளவர்கள் சோகமடைந்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் நவநீதன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் அறந்தாங்கியில் அரிசி மில் நடத்தி வருகிறார்.

    ஊரடங்கால் நவநீதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வந்தனர். இவர் வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் வாசலில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு வந்து உள்ளது.

    இதைப்பார்த்த நாய், தனது எஜமானரை காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்டு பாம்பை கொன்றது. பாம்பு கடித்ததில் சிறிது நேரத்தில் நாயும் இறந்தது. வீட்டு எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்ற தனது உயிரைவிட்ட நாயை நினைத்து அப்பகுதியில் உள்ளவர்கள் சோகமடைந்தனர்.
    புதுக்கோட்டையில் ஊரடங்கை ஹெலி கேமரா மூலம் போலீசார் கண்காணித்த போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த 4 வாலிபர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வீடியோவில் சுவாரசியமான காட்சிகள் பதிவானது.
    புதுக்கோட்டை:

    ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹெலி கேமரா மூலம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கணேஷ்நகர் பகுதியில் ஹெலி கேமரா சென்ற போது ஆங்காங்கே கூடியிருந்தவர்கள் அதனை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

    இதேபோல அப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நோக்கி ஹெலி கேமரா சென்றது. அப்போது அதன் மேல் பகுதியில் 4 வாலிபர்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹெலி கேமரா அவர்களை நோக்கி போலீசார் இயக்கினர். இதனை கண்டதும், நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதியில் இருந்த 4 பேரும் அலறி அடித்து ஓடி வேக, வேகமாக படிக்கட்டில் இறங்கி ஓட்டம் பிடித்தனர். ஹெலி கேமராவும் அவர்களை பின்னால் விரட்டி சென்றது. அவர்கள் அருகில் உள்ள ஒரு மைதானத்திற்கு சென்றனர். அங்கு சிறுவர்கள், வாலிபர்கள் பலர் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். ஹெலி கேமராவை கண்டதும் அவர்களும் தலைதெறிக்க ஓடினர். மைதான சுற்றுச் சுவரை ஏறி குதித்து தப்பியோடினர்.

    மேலும் வீடுகளுக்கு வெளியே தெருக்களில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களும் தெறித்து ஓடினர். ஹெலி கேமரா வீடியோவில் பல சுவாரசிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனை புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விழிப்புணர்வு வீடியோவாக நேற்று வெளியிட்டுள்ளனர். அதன் பின்னணியில் சூரியன் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பூக்குழி இறங்க செல்லும் காட்சியில் இசைக்கப்படும் இசையும், ஒரு மனுஷன் வீடு வந்து சேருவதற்குள் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு... தினமும் காலையில... காலையில... 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டியிருக்கு... ஊருக்குள்ள மொத்தமே 4 தெருவு தானே இருக்கு... என நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்களும் இடம் பெற்றுள்ளது. சமூக இடைவேளி மற்றும் ஊரடங்கை கடைபிடிக்க அறிவுறுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
    திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லத்திராகோட்டை, வாண்டாக்கோட்டை, மணியம்பளம், மாசான் விடுதி ஆகிய நான்குஊராட்சி மன்றங்களில் உள்ள பொதுமக்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லத்திராகோட்டை, வாண்டாக்கோட்டை, மணியம்பளம், மாசான் விடுதி ஆகிய நான்குஊராட்சி மன்றங்களில் உள்ள பொதுமக்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கன்சல்பேகம், வனஜா, கலைமணி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் அரிசி 5 கிலோ, காய்கறிகள், பாமாயில் வழங்கப்பட்டது.

    ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவமெய்யநாதன், திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் உஷா செல்வம், விஜயன், வல்லாத்திராக்கோட்டை துணைத்தலைவர் ஆறுமுகம், மணியம்பளம் முன்னாள் ஊ ராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் விஸ்வநாதன், மாஞ்சான் விடுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அயூப்கான், துணைத்தலைவர் சாந்தி மயில்வாகனம், வாண்டாக் கோட்டை துணைத்தலைவர் கலைவாணி ரமேஷ் மற்றும் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மாமுண்டிமட வீதியை சேர்ந்த சிவராமனின் மனைவி தமிழ்செல்வி (வயது 36). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக ஒரு பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செல்போனில் தமிழ்செல்வியிடம் பேசியுள்ளார். அப்போது அவரிடம் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க தங்களின் கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிவிக்கும் படி அந்த பெண் கேட்டுள்ளார். இதனை நம்பிய தமிழ்செல்வி தனது வங்கியின் ஏ.டி.எம்.கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணையும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். உடனே எதிர் முனையில் பேசிய பெண் செல் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இந்த நிலையில் தமிழ்செல்வியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரத்து 907 எடுக்கப்பட்டதாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பெண் பேசிய செல்போன் எண்ணை பல முறை தொடர்பு கொண்டார். ஆனால் பதில் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதைத்தொடர்ந்து வங்கி மேலாளர் பேசுவது போல பேசி விவரங்களை பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி விசாரித்து வருகிறார்.
    ஊரடங்கால் கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    கறம்பக்குடி:

    ஊரடங்கால் கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை, புதுப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, வாண்டான்விடுதி ஆகிய ஊர்களில் புளி வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் விளையும் புளியம் பழங்களை வாங்கி அவற்றில் ஓடு, விதைகளை நீக்கி புளியை விற்பனை செய்வது வழக்கம். பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை புளி விற்பனை மும்முரமாக நடைபெறும்.

    வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கறம்பக்குடி பகுதிக்கு வந்து புளியை வாங்கி செல்வர். இதைத்தவிர சிறு வியாபாரிகள் இரு சக்கர வாகனங்களில் கொண்டு சென்று கிராமம், கிராமமாக புளி விற்பனை செய்வதும் உண்டு.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வருமானம் இழந்து சிறு வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பல்லவராயன்பத்தையை சேர்ந்த புளி வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘தமிழர்களின் அன்றாட உணவு தயாரிப்பில் புளி இன்றியமையாதது.

    சீசன் காலங்களில் புளியை ஒரு ஆண்டுக்கு தேவையான அளவிற்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் வாங்கி வைத்து கொள்வர். புளி சீசன் நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாங்கிய புளியை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

    புளி நிறம் மாறி விட்டால் பொதுமக்கள் வாங்க தயங்குவார்கள், விலைபோகாது. ஊரடங்கால் ஒரு ஆண்டிற்கான மொத்த வருமானத்தையும் இழந்து புளி வியாபாரிகள் தவித்து வருகிறோம். சிறு வியாபாரிகளான எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும், என தெரிவித்தார்.
    ஊரடங்கால் கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை, புதுப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, வாண்டான்விடுதி ஆகிய ஊர்களில் புளி வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் விளையும் புளியம் பழங்களை வாங்கி அவற்றில் ஓடு, விதைகளை நீக்கி புளியை விற்பனை செய்வது வழக்கம். பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை புளி விற்பனை மும்முரமாக நடைபெறும்.

    வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கறம்பக்குடி பகுதிக்கு வந்து புளியை வாங்கி செல்வர். இதைத்தவிர சிறு வியாபாரிகள் இரு சக்கர வாகனங்களில் கொண்டு சென்று கிராமம் கிராமமாக புளி விற்பனை செய்வதும் உண்டு.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வருமானம் இழந்து சிறு வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பல்லவராயன்பத்தையை சேர்ந்த புளி வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘தமிழர்களின் அன்றாட உணவு தயாரிப்பில் புளி இன்றியமையாதது.

    சீசன் காலங்களில் புளியை ஒரு ஆண்டுக்கு தேவையான அளவிற்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் வாங்கி வைத்து கொள்வர். புளி சீசன் நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாங்கிய புளியை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

    புளி நிறம் மாறி விட்டால் பொதுமக்கள் வாங்க தயங்குவார்கள், விலைபோகாது. ஊரடங்கால் ஒரு ஆண்டிற்கான மொத்த வருமானத்தையும் இழந்து புளி வியாபாரிகள் தவித்து வருகிறோம். சிறு வியாபாரிகளான எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும், என தெரிவித்தார்.
    புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கு ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட குலமங்கலம் வடக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாஞ்சாலி செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் அந்த பகுதியில் உள்ள காய்கறி வியாபாரிகள், காய்கறி வாங்க வந்தவர்கள் மற்றும் பொது மக்கள் கபசுர குடிநீர் வாங்கி பருகினர். மேலும் வீடு வீடாக சென்றும் கபசுர குடிநீர் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    ஆலங்குடி அருகே ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 447 குடும்பம் வசித்து வருகிறது.

    முகாமில் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் 144 தடை உத்தரவால் வீட்டை விட்டு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்கு கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வி குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான குருதனசேகரன் தலைமையில் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி அகதிகளுக்கு அரிசி பைகளை வழங்கினார்.

    கல்வி நிறுவன துணைத் தலைவர் சரவணன், முகாம் தலைவர் கமலநாதன், திருவ ரங்குளம் அகதிகள் முகாம் வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, வல்லநாடு வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா, நிறுவனத் தாளாளர்கள் கன கராஜன், லியோ பிலிக்ஸ் லூர்துஸ், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் உள்ள 447 குடும்பத்திற்கு சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கினர்.

    பொருளாளர் வரதராஜ், செயலாளர் ஜெபமாலை குருஸ், துணைத் தலைவர் விஜயராஜா, உபத்தலைவர் ரவிச்சந்திரன், திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, நிறுவன அறங்காவலர்கள் கான் அப்துல் பார்கான், கிருஷ்ணமூர்த்தி, சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    காயம்பட்டி ஊராட்சி சார்பில் பொது மக்களுக்கு அரிசி பையுடன் 12 வகையான காய்கறிகள் வழங்கப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட காயாம்பட்டி ஊராட்சியில் 450 குடும்பங்களுக்கு வீடு, வீடாக சென்று ரூ.2 லட்சம் மதிப்பிலான அரிசி பையுடன் 12 வகையான காய்கறிகள் மற்றும் உப்பு பாக்கெட்டுகளுடன் பையுடன் வழங்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.செல்வி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது .

    நிகழ்ச்சியில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ மெய்யநாதன், திருவரங்குளம் ஒன்றிய குழுத்தலைவி வள்ளியம்மை தங்கமணி மற்றும் ஒன்றிய தலைவி வெள்ளையம்மாள் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துணைத்தலைவர் கலா கருப்பையா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், இளைஞர் மன்றம், அன்னதான குழு முக்கியஸ்தர்கள் நிதி நிறுவனங்களின் மூலம் உதவித் தொகை வழங்கியவர்களுக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    அறந்தாங்கியில் 144 தடையை மீறி குதிரை பயிற்சி அளித்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குதிரை வண்டி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அறந்தாங்கி:

    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144தடை உத்தரவு அமலில் உள்ளது, தடை உத்தரவை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அறந்தாங்கியை அடுத்த மருதங்குடி பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சிலர் குதிரைவண்டி பயிற்சி நடத்துவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அறந்தாங்கி களப்பக்காடு பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (18), ராகவன் (18), பரணி (19), ராதாகிருஷ்ணன் (21), மணிகண்டன் (20) ஆகியோர் குதிரை வண்டியில் குதிரைக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

    உடனே போலீசார் 144 தடையை மீறி குதிரை பயிற்சி அளித்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் குதிரை வண்டி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×