என் மலர்
புதுக்கோட்டை
முக்கனிகளில் ஒன்றானது பலாப்பழம். தேன் போல சுவை மிகுந்த பலாப்பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. குற்றாலம், பண்ருட்டி ஆகிய இடங்களுக்கு அடுத்தப்படியாக புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, ஆலங்குடி பகுதியில் விளையக்கூடிய பலாப்பழங்கள் பெயர் பெற்றது. புதுக்கோட்டையில் இருந்து பக்கத்து மாவட்டங்களை சுற்றி விற்பனைக்காக இங்கிருந்து பலாப்பழங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலின்போது வடகாடு, ஆலங்குடி பகுதியில் பலா மரங்கள் பல முறிந்து விழுந்தன. சில மரங்களின் கிளைகள் முறிந்தன. அதன்பின் படிப்படியாக மரம் வளர்ந்து பழம் காய்க்க ஆரம்பித்தது.
தற்போது கொரோனா எனும் கொடிய வைரசால் ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைந்த பலாப்பழங்கள் விற்பனைக்காக வெளியூர் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் பழங்களை விற்பனை செய்ய முடியாமல் வீணாகின. இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் விற்பனைக்காக பலாப்பழங்கள் கடந்த ஓரிரு நாட்களாக அதிகமாக வரத்தொடங்கி உள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருவப்பூர் செல்லக்கூடிய சாலையோரம் வடகாடு பலாப்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று வடகாட்டில் இருந்து பலாப்பழங்களை விற்பனைக்காக சரக்கு வேன்களில் தினமும் புதுக்கோட்டைக்கு விவசாயிகள் சிலர் கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கால் தற்போது காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை பலாப்பழங்களை விற்பனை செய்துவிட்டு தங்களது ஊருக்கு திரும்பி விடுகின்றனர். பின்னர் மறுநாள் வியாபாரம் செய்ய வருகின்றனர்.
மேலும் பலாப்பழங்களை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை காணும் பொதுமக்கள் வாயில் ருசி ஊறுகிறது. இதனால் சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தாலும் தங்களது வண்டியை நிறுத்தி விட்டு பலாப்பழத்தின் விலையை விசாரித்து விட்டு வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் பலர் முழுப்பழமாகவும், சிலர் பாதிப்பழம் எனவும், எடை கணக்கிலும் வாங்குகின்றனர்.
ஒரு கிலோ ரூ.20 வரைக்கும் பலாப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆங்காங்கே பலாப்பழங்கள் சில்லரை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. சைக்கிளிலும் பலாப்பழத்தை வெட்டி சுவையாக விற்பனை செய்கின்றனர். இதனையும் மக்கள் வாங்கி ருசித்து சாப்பிடுகின்றனர்.
ஊரடங்கில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறபோது பலாப்பழத்தை வெட்டி குடும்பத்தில் உள்ள அனைவரும் சுவைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பலாப்பழம் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். அதே நேரத்தில் விற்பனையாகாத பழத்தை திருப்பி எடுத்து சென்று மறுநாள் வரும்போது கொண்டு வருவதாக கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு சேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபு (வயது 24). இவரும் அதே பகுதி வடக்குப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் மகள் புனிதா (20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.
இருவரும் வரம்பு மீறி பழகியதால் புனிதா 4 மாத கர்ப்பிணியானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புனிதா பிரபுவை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு பிரபுவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கடந்த மாதம் பிரபு தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை தேடி வந்தனர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் தன்னால் தான் புனிதா கர்ப்பமானார் என்பதையும், தான் செய்த தவறை உணர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து வடகாடு காவல் நிலையத்தில் அக்கிராமத்தினர் முன்னிலையில் வடகாடு காவல் இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாஸ் மற்றும் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள கீழப்புலவன்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் செல்லக்கண்ணு, விவசாயி. இவரிடம் இருந்து கொரோனா நிவாரண நிதி வந்துள்ளதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:-
சென்னை அண்ணாநகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து பேசுவதாக எனது தம்பி ஈஸ்வவரனுக்கு நேற்று மாலை செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்களுக்கு கொரோனா வைரஸ் நிவா ரணநிதி வந்துள்ளது. அத னால் உங்கள் ஏ.டி.எம். கார்டு எண்ணைக் கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஈஸ்வரன் என்னிடம் கார்டு இல்லை என்று கூறி, அண்ணன் செல்லக்கண்ணுவிடம் செல்போனைக் கொடுத்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய செல்லக்கண்ணு அடையாளம் தெரியாத நபரிடம் தன்னுடைய ஏ.டி.எம். எண், ரகசிய எண், வங்கி கணக்கு எண் என எல்லாவற்றையும் கூறிவிட்டார்.
அவர் கூறிய சிறிதுநேரத்தில் அவரது கணக்கிலிருந்து ரூ.9,500 எடுத்ததற்கான மெசேஜ் வந்துள்ளது. அடுத்ததாக ரூ.9,000 எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. மொத்தம் ரூ.18,500 அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
அழைத்த எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட போது செல் அணைக்கப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் செல்லக்கண்ணுதான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
பின்னர் இதுதொடர்பாக சம்பட்டி விடுதி போலீசில் செல்லக்கண்ணு புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சம்பட்டிவிடுதி சப்- இன்ஸ்பெக்டர் அப்துல் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் மிரட்டுநிலை கிராமத்தில் 23 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மிரட்டுநிலையில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மிரட்டுநிலை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறைகளும் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று ஒருவருக்கு வந்ததால் 8 கி.மீ. சுற்றளவு 48 கிராமங்கள் மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 522 வீடுகள், 45 ஆயிரம் பேரை முழுமையாக கண்காணிக்கிறார்கள். இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் முடியாது.
நடமாடும் மருத்துவ குழுக்கள், கிருமிநாசினி தெளிப்பு உள்பட கண்காணிப்பு பணிகள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன். கண்காணிப்பு, தொடர் கண்காணிப்பு, முழுமையான கட்டுக்குள் என இந்த கிராமங்களை மாவட்ட நிர்வாகம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் மேலும் பரவல் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிற இந்தநிலை போல தான், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கண்காணிப்பு திட்டத்தில் செயல்படுத்துகிறோம். மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்போடு கிராமங்களில் எளிதில் செய்ய முடிகிறது. சென்னை போன்ற 1½ கோடி மக்கள் தொகை இருக்கிற பெரு நகரங்களில் இப்பணி சவாலாக இருக்கிறது. இருந்தாலும் கூட முழுமையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு 300 மாதிரிகளை பரிசோதனை செய்யக்கூடிய அளவிற்கு வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளது. இதில் 30 அரசு மருத்துவமனைகளிலும், 11 தனியார் மருத்துவமனைகளிலும் என 41 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த ஆய்வின் போது கலெக்டர் உமாமகேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மண்டபங்களில் நடைபெறாமல் அவர்களது வீடுகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 2 இடங்களில் வீடுகளில் எளிமையாக திருமணங்கள் நடந்தன.
திருமயம் அருகே விராச்சிமலை கிராமத்தில், பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கடேஸ்வரனுக்கும், தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் பூரணி என்கிற புவனேஸ்வரிக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் மட்டும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். மேலும் மணமக்களும், உறவினர்களும் முக கவசம் அணிந்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வந்தனர். மேலும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.20 ஆயிரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புதுமண தம்பதியினர் திருமணக்கோலத்தில் வழங்கினர். மேலும் அவரிடம் ஆசி பெற்றனர். அப்போது அவர், மணமக்களை வாழ்த்தினார். மேலும் திருமண ஜோடிகளுக்கு கபசுர குடிநீரை அவர் வழங்கினார். அதனை 2 பேரும் வாங்கி குடித்தனர். கலெக்டர் உமாமகேஸ் வரியும் மணமக்களை வாழ்த்தினார். இதேபோல அன்னவாசல் அருகே உள்ள தச்சம்பட்டியை சேர்ந்த முருகேசன்-விஜயா ஆகியோரது திருமணம் மணமகனின் வீட்டில் வைத்து எளிய முறையில் நடந்தது. இதில் மணமகன், மணமகள் தரப்பில் மொத்தம் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மணமக்கள் உள்பட திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது. இப்படி ஒரு வைரஸ் வந்து மனிதர்களை தாக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனா என்ற பெயரை கேட்டாலே உலகம் முழுவதும் மக்கள் நடுங்கி வருகின்றனர்.
புதுக்கோட்டையை பொறுத்தவரை மிரட்டுநிலை கிராமத்தில் 23 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று கடந்த 20-ந் தேதி உறுதியானது. இது மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பாகும். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
மிரட்டுநிலை கிராமத்தை சுற்றி 8 கி.மீ. அளவில் உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல கிருமி நாசினி தெளிப்பு பணிகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீரும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையை பொறுத்தவரை கடைகளில் பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் புதுக்கோட்டை பஸ் நிலைய தற்காலிக மார்க்கெட்டில் சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்ததாகவே உள்ளது. இங்கு அதிகாலை முதல் மார்க்கெட் இயங்குகிறது. மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் அதிகாலை 4.30 மணிக்கு மேல் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அதிகாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் பலர் காய்கறிகள் வாங்க வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிந்தபடி வருவதை காணமுடிகிறது. ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வருகின்றனர். அவர்களை நுழைவுவாயிலேயே போலீசார் தடுத்து எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர். சிலர் கைக்குட்டைகளையும், துண்டுகளையும் முகத்தில் மூடியபடி வருகின்றனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து மார்க்கெட் உள்ளே அனுமதிப்பதில்லை.
இந்த நிலையில் பஸ்கள் நிற்குமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்கும் போது சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை. ஒருவருக்கொருவர் அருகில் நின்றுக்கொண்டு தான் காய்கறிகள் வாங்குவதை காண முடிந்தது.
இதேபோல வியாபாரிகளும் அருகருகே அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். பொதுமக்கள் சிலர் முக கவசங்களை கழற்றிவிட்டு வியாபாரிகளிடம் பேசி காய்கறிகள் வாங்குகின்றனர். இதுபோன்ற நபர்களை போலீசார் கண்டதும், ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகளும் ஒலிபெருக்கியில் அவ்வப்போது அறிவுரைகளை வழங்குகின்றனர். மேலும் முக கவசம் அணியாதவர்களை போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் திருப்பி அனுப்பினர்.
உழவர் சந்தையில் பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பஸ் நிலைய தற்காலிக மார்க்கெட்டில் அதுபோன்ற வசதி எதுவும் இல்லை. அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் கடைவீதியில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
சமூக இடைவெளி, தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு என விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சிலர் கடைபிடிப்பதில்லை. இதனை அனைவரும் கடைபிடித்தால் கொரோனாவை முற்றிலும் விரட்டி விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
ஆலங்குடி அருகே உள்ள வல்லத்திராகோட்டை ஊராட்சி மன்றத்தின் சார்பில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பாமாயில், 12 வகையான காய்கறிகள் கொரோனா வைரசால் வீட்டில் முடங்கியுள்ளவர்களுக்கு உணவு பொருட்களை ஊராட்சி மன்ற வளாகத்தில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்ப்பட்ட வல்லத்திராக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் கன்சல் பேகம் தலைமை தாங்கினார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படியும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படியும், அ.தி.மு.க. வர்த்தக அணி மாநில துணைச்செயலாளர் புதுக்கோட்டை ஜாபர்அலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 450 குடும்பத்தினர்களுக்கு வீடு, வீடாகச் சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வல்லத்திராக் கோட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், வல்லாத்திராகோட்டை காவல் துறை உதவி ஆய்வாளர் பால சுப்பிரமணியன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேசன், அப்பகுதி பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மட்டும் நடைபெற வேண்டி உள்ளது. அதேபோல பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தேர்வும் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில் சில தனியார் பள்ளி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்த தொடங்கி உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டையிலும் சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை தற்போது நடத்த தொடங்கி உள்ளனர். இதற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர். அந்த செயலியை மாணவ-மாணவிகள் தங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் அந்த செயலி வழியாக தினமும் ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்தபடி பாடம் நடத்துகிறார். ஒரே நேரத்தில் 60 முதல் 70 மாணவர்கள் வீட்டில் இருந்தபடி பாடம் கற்றுக்கொள்கின்றனர். மாணவர்களின் செல்போன் திரையில் ஆசிரியரின் முகம் தெரிகிறது. மேலும் அவர் கூறுவதை மாணவர்கள் கேட்டு குறிப்பெடுத்துக்கொள்கின்றனர். மேலும் சந்தேகங்கள் இருந்தால் மாணவ-மாணவிகள் கேள்வி கேட்கின்றனர். தினமும் ஒரு மணி நேரம் இந்த வகுப்பு நடைபெறுவதாக பள்ளி வட்டாரத்தில் தெரிவித்தனர்.
பள்ளிகள் திறக்கப்படும் தேதி எப்போது? என தெரியாத நிலையில் தனியார் பள்ளிகள் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது போன்ற செயலியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறையை தொடங்கி விட்டனர். புதுக்கோட்டை மட்டுமின்றி, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தருகின்றனர்.
அரசு பள்ளிகளில் உள்ள நிலை குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் தொடர்பு கொண்டு செல்போனில் அவ்வப்போது பேசி வருகின்றனர். மாணவர்களை தினமும் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையதளம் தனியாக தொடங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் தற்போது வரத்தொடங்கி உள்ளன. இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை’ என்றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆலங்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட செயல் அலுவலர் கணேசன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் அனைவரையும் ஆலங்குடி நகர பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.
தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் வருகைப்பதிவு செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், வீடுகள் தோறும், தெருப்பகுதிகள், ஆகியவற்றில் கிருமிநாசினி லைசால் கரைசல், பிளிச்சிங் பவுடர் தெளித்தல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பேரூராட்சி பகுதிக்குள் வெளி மாவட்டம் மற்றும் வெளி ஊர்களிலிருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைசாவடியில் கிருமி நாசினி அடித்தல் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஹேண்ட் சானிடைசர் திரவம் கைகளில் அடிக்கப்பட்டு முக வசம் அவசியம் அணிய வேண்டும் என வலியுறுத்தல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மேலும் வணிக கடைகள், மார்க்கெட் பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடித்தல் உறுதி செய்தல், வெளியே வரும் போது மாஸ்க் அணிவிக்க அறிவுறுத்தல், ஆட்டோவில் விழிப்புணர்வு விளம்பரம் செய்தல் மற்றும் நடமாடும் காய்கறி கடைகள் ஆய்வு செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மிகச்சிறப்பாகும்.
இந்த நடவடிக்கைகளை பாராட்டும் வகையில்ஆலங்குடி வர்த்தக சங்கதலைவரும் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான மோகன், அலுவலர்களை பாராட்டியும், தூய்மை பணியாளர்களை பாராட்டியும், உணவின்றி தவித்த முதியோர்களுக்கு 10 மூட்டை அரிசியும் வழங்கினார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி நகராட்சியில் குப்பை சேகரிக்க 4 லாரிகள் மற்றும் பேட்டரியில் இயங்கும் 10-க்கும் மேற்பட்ட வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு பொது மக்களுக்கு நேரடியாக காய்கறிகள் கிடைக்கும் விதமாக நடமாடும் காய்கறி வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான வாகனம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு பின்னர் எப்.சி. எடுத்து அம்மா உணவகத்திற்கு உண்டான பொருட்களை ஏற்றுவதற்கு பயன்படுத்தி வரப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் குப்பை வண்டியில் காய்கறிகள் விற்பதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகணேஷ் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. நடமாடும் காய்கறி விற்பனைக்கு நகராட்சி வாகனம் பயன்படுத்தப்பட்டது. அது அம்மா உணவகத்திற்கு பொருட்கள் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டது. அறந்தாங்கி நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சமூக வலை தளங்களில் சிலர் குப்பை அள்ளும் வாகனத்தில் காய்கறி விற்பனை செய்வதாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர். இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றார்.
ஆலங்குடி:
ஆலங்குடி பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதாக வந்த தகவல்படி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் துரை சிங்கம், பாஸ்கர் மற்றும் போலீசார் குலப்பெண் பெட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் வீட்டை சோதனை செய்தனர். அப்போது பெருமாள் தோட்டத்தில் இருந்த 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். மேலும் தோட்டத்தில் 50 லிட்டர் கள்ளச்சாராய ஊரலையும் அழித்தனர்.
அதுபோல் கறம்பக்குடி தாலுகா கருக்காக்குறிச்சி தாழக்கொல்லை முத்தையா என்பவரது கரும்பு தோட்டத்தில் இருந்த 105 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்குடி தாசில்தார் கலைமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீரமங்கலம் வருவாய் ஆய்வளர் முருகேசன், குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி ஆகியோர் சோதனை செய்தனர். இதில் வசந்த் கைதானார்.






