என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு ரூ.1,769 கோடி வழங்கியுள்ளது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.







    அறந்தாங்கி:

    அறந்தாங்கியில் பா.ஜ.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அவற்றை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு எந்த தொழில் அதிபர்களுடைய கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அந்த வழக்கை நிலுவையில் வைக்க மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
    இதை தவறாக புரிந்துகொண்டு, வதந்தி பரப்பப்படுகிறது. கொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வரும் இந்த நேரத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என மு.க.ஸ்டாலின் நாடகம் போடுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,769 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது, என்றார்.
    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் 12 இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்டுகைகளை சுத்தம் செய்யும் சானிடைசர், கிருமி நாசினி மருந்து உள்ளிட்டவை விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

    அதனை இலுப்பூர் அரசு மருத்துவமனை முன்புறம் மற்றும் பேருந்து நிலைய த்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க் கெட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார், இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்துறை, பேரூராட்சித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் ஒரே சராசரி அளவிலேயே இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுக்கோட்டை நகராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் தடுப்புப்பணியில்


    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருக்கும் 1.5 லட்சம் பேருக்கு இந்திய மருத்துவதுறை சார்பில் கபசுரக் குடிநீரும் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செலிலியர்கள் தங்குவதற்கும் மற்றும் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் வழங்கவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் ஒரே சராசரி அளவிலேயே இருக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளது. மேலும் எல்லா பகுதிகளில் கொரோனா தொற்று சிகிச்சை மையங்களையும் அதிகப்படுத்தி வருகிறோம்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதற்கு எல்லா விதமான கருவிகளும் போதுமான அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை அவ்வப்போது மத்திய சுகாதார குழுவினர் வந்து ஆய்வு செய்து நாம் அளிக்கும் சிகிச்சை முறை மற்றும் தொற்று நோய் பாதித்தவர்கள் நாம் வழங்கும் ஆரோக்கியமான உணவு முறைகளையும் பார்த்து அவர்கள் பாராட்டி சென்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் பெறலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரசை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது.

    அதாவது 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் மற்றும் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தலா 5 கிலோ வீதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரை 3 மாத காலத்திற்கு கூடுதல் அரிசி பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அளவு விலையின்றி வழங்கப்படும்.

    கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்கும் வகையில் டோக்கன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வீடு, வீடாக டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த ரேஷன் கடை பகுதியில் உள்ள வீடுகளுக்கு ரேஷன் ஊழியர்கள் டோக்கன்களை வழங்கினர். அந்த டோக்கனில் கடைக்கு வர வேண்டிய நேரம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தேதியில் வந்து பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெறலாம். டோக்கன் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு, வீடாக வினியோகிக்கப்பட உள்ளது.

    தினமும் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தலா 150 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கடைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்ல மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் டோக்கன் வினியோகிக்கப்படும் பணியை புதுக்கோட்டை அருகே குளத்தூர் காந்திநகரில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல மிரட்டுநிலை கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரி அக்பர் அலி ஆய்வு மேற்கொண்டார்.
    ஆலங்குடி அருகே மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகிலுள்ள வாரப்பூர் கரையப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 60). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

    மகன்கள் முருகேசன், சரவணப்பாண்டி இருவரும் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தனர். சரவணப்பாண்டி ஓராண்டுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் சின்னத்தம்பி மூத்தமகன் முருகேசனுக்கு திருமணம் செய்து வைக்க ஊருக்கு வரச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன் முருகேசன் வரவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த சின்னதம்பி பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டு வயலில் மயங்கி கிடந்தார். தந்தையை காணவில்லை என்று சரவணபாண்டி தேடியபோது அவர் வயலில் மயங்கி கிடப்பது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதம்பி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ஊரடங்கால் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்த முடியாததால் பெற்றோர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
    கறம்பக்குடி:

    திருமணமாகி முதல் முறையாக தாய்மை அடைய போகும் பெண்களுக்கு பிறந்த வீட்டார் சார்பில், வளைகாப்பு விழா நடத்தப்படுவது வழக்கம். கலாசாரம் சார்ந்து நடத்தப்படும் இந்த விழாக்கள் 7 அல்லது 9-வது மாதத்தில் நடைபெறும். உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி சீர்வரிசை பொருட்களுடன் சென்று கர்ப்பிணி பெண்ணை அலங்காரம் செய்து வளைகாப்பு விழா நடத்துவார்கள்.

    இதில் 9 வகையான சாதத்துடன் விருந்து பரிமாறப்படும். சமீப காலமாக கிராம பகுதியில் கறிவிருந்தும் பரிமாறப்படுகிறது. வசதிக்கு ஏற்றாற் போல் நடத்தப்படும் இந்த விழாவானது, சிலர் பத்திரிகை அச்சடித்து நூற்றுக்கணக்கானோருக்கு அழைப்பு விடுத்து திருமண மண்டபங்களில் நடத்துவது உண்டு. பொதுவாக வளைகாப்பு விழா பெண்களுக்கு திருமண நாளை விட மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். இதனால் வளைகாப்பு விழாவை ஒவ்வொரு பெற்றோரும் கடன் வாங்கியாவது சிறப்பாக நடத்துவார்கள்.

    இந்த விழாக்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்து ஆரோக்கியம் தரக்கூடியது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில், அரசே சமுதாய வளைகாப்பு விழாக்களை நடத்தி முதல் முறையாக தாய்மை அடைய போகும் பெண்களை மகிழ்விக்கும்.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவை நடத்த முடியாமல் பெற்றோர்கள் வருத்தமடைந்து உள்ளனர். கர்ப்பிணிகளுக்கு அந்த ஏக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர்களில் திருமணம் செய்து கொடுத்த பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களை வைத்து வளைகாப்பு விழாவை பெற்றோர்கள் நடத்தி விட்டனர்.

    ஆனால் வெளியூர்களில் உள்ள பெண்களுக்கு பெற்றோர்கள் சென்று வளைகாப்பு விழாவை நடத்த முடியாத நிலை உள்ளதால் வருத்தமடைந்து உள்ளனர். இது குறித்து கறம்பக்குடி பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், வெளியூர்களில் உள்ள பெண்களை அழைத்து வருவதற்கோ, அங்கு சென்று வளைகாப்பு விழா நடத்துவதற்கோ முடியாத நிலை உள்ளது. தட புடலாக நடத்த எண்ணியிருந்த வளைகாப்பு விழாக்கள் நான்கைந்து பேருடன் நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால் வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, முதியவர் செல்லையாவை அலுவலகம் அழைத்து முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு நகலை வழங்கினார்.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பளுவான் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (வயது 95). இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். செல்லையா தனது தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். பனை மரங்களில் ஏறி நுங்கு வெட்டி விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் உணவு சமைத்து சாப்பிட்டு வருகிறார். மேலும் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்தும் வருகிறார். இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. அதில் முதியவர் செல்லையாவுக்கு முதியோர் உதவித் தொகை கிடைத்தால் அவரது தள்ளாத வயதில் உதவியாக இருக்கும் என்று அப்பகுதியில் உள்ள முதியவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையும் இடம் பெற்றிருந்தது.

    இந்த செய்தி ‘தினத்தந்தி’யில் வெளியான நிலையில் அந்த முதியவர் பற்றிய தகவல்களை வருவாய்த்துறையினர் மூலம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று ஆலங்குடி வட்டாட்சியர் யோகேஸ்வரன் மூலம் முதியவர் செல்லையாவை கலெக்டர் அலுவலகம் அழைத்து வர செய்து முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு நகலை வழங்கினார். அந்த உத்தரவு நகலை பெற்றுக் கொண்டு முதியவர் நன்றி கூறினார்.

    இதுகுறித்து கொத்தமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், முதியவர் செல்லையாவுக்கு தள்ளாத வயதில் உதவித்தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று உறவினர்கள், பொதுமக்கள் கோரிக்கையை பிரசுரம் செய்த ‘தினத்தந்தி’க்கும், அந்த கோரிக்கையை உடனே ஏற்று உதவித்தொகை வழங்கிய கலெக்டருக்கும், மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர். 
    புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கயிறு தயாரிக்கும் தொழில் முடங்கியது.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், மறமடக்கி, அரையப்பட்டி போன்ற ஊர்களில் தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.150 கூலிக்கு வேலை பார்த்து அன்றாட வாழ்க்கையை ஓட்டி வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் மற்றும் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் அன்றாட செலவுகளுக்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.

    தேங்காய் மட்டைகளில் இருந்து நார்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் ஆலங்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், கறம்பக்காடு மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலும் அதிகளவில் உள்ளது. தேங்காய் மட்டைகளில் இருந்து வருகின்ற நார்களை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் மூலமாக, பிரித்தெடுத்து, தேங்காய் நார், மஞ்சிக் கட்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு, 35 கிலோ கட்டு ரூ.700 முதல் ரூ.800 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னர் அவை சரக்குவேன்கள் மூலமாக, கயிறு தயாரிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 2 வகையான கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கை ராட்டைகள் மூலமாக அதிக தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி ஆகும் கயிறுகள், வெற்றிலை கொடி, கப்பல் கட்டுமான தொழில், பந்தல்கள் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    ஏற்றுமதி தரம் வாய்ந்த மெஷின் கயிறுகள் சிறுகுறு முதலீட்டாளர்கள் மூலமாக, சுமார் ரூ.7 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு, குறைந்த தொழிலாளர்கள் மூலமாக, தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கை ராட்டைகள் மூலம் தயாரிக்கப்படும் கயிறுகள் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரையிலும், எந்திர கயிறுகள் கிலோ ரூ.27 முதல் ரூ.28 என வியாபாரிகளால் வாங்கப்பட்டு, வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கயிறுகளை சேலம், பட்டுக்கோட்டை, ஆலங்குடி போன்ற ஊர்களில் இருந்து வரும் வியாபாரிகள் மூலம் மும்பை, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கும் மேட் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படும்.

    இந்தநிலையில், தற்போது ஊரடங்கால், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விலையுள்ள உற்பத்தி செய்யப்பட்டுள்ள கயிறுகள் தேங்கி உள்ளதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் மகளிர் சுய உதவிக்குழு கடைகளில் ஒரு குழுவினர் முழு கவச உடைகள் தயாரித்து விற்கின்றனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரசால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முக கவசம் அணிய வேண்டும் என்பதால் அதனை மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சில முக கவசம் தயாரிப்பில் ஈடுபட்டு விற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா தனிவார்டில் பணியாற்றும் டாக்டர்கள் உள்பட தூய்மை பணியாளர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முழு கவச உடை அணிந்து பணியாற்றுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த கவச உடைகள் தயாரிக்கும் பணியில் ஒரு சில மகளிர் சுய உதவிக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் மகளிர் சுய உதவிக்குழு கடைகளில் ஒரு குழுவினர் முழு கவச உடைகள் தயாரித்து விற்கின்றனர். இதுகுறித்து குழுவின் தலைவி இன்பவள்ளி கூறுகையில், “நாங்கள் முதலில் நாப்கின் தயாரித்து விற்று வந்தோம். இதனை தர்மபுரி மாவட்டத்திற்கு அரசு மூலம் வினியோகித்தோம். கொரோனா வைரஸ் தொடங்கிய பின் நாப்கின் தயாரிப்பை நிறுத்திவிட்டோம். இதனையடுத்து முக கவசம் தயாரிப்பில் ஈடுபட்டு விற்று வந்தோம். தற்போது முழு கவச உடைகள் தயாரித்து விற்று வருகிறோம். இதற்கான மூலப்பொருட்கள் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக முழு கவச உடைகளை தயாரித்து விற்று வருகிறோம். ரூ.150 முதல் ரூ.290-வரைக்கும் முழு கவச உடை விற்கப்படுகிறது. அவ்வப்போது டாக்டர்கள் ஆர்டர் கொடுத்து முழு கவச உடையை பெற்று செல்கின்றனர். இந்த முழு கவச உடையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்” என்றார்.


    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் கொரோனா ரத்த பரிசோதனை நடத்திய போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கபடுகிறதா என்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம் திருவோணம் சாலையில் ஜவுளிக்கடை ஒன்று விதிகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் அப்துல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் ஜவுளி கடையில் ஆய்வு நடத்தினர் .

    அப்போது கடை திறக்கப்பட்டு இருந்ததுடன் வியாபாரம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்தனர். இதனிடையே கறம்பக்குடி திருவோணம் சாலை செட்டித்தெரு அருகில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் பொதுமக்களுக்கு வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தாசில்தார், செயல் அலுவலர் மற்றும் ஆர்.ஐ. ஸ்டெல்லா, வி.ஏ.ஓ. ராஜகுமாரி சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ரத்த பரிசோதனை நிலையம் போலியாக செயல்பட்டு வந்ததும் அதனை நடத்தி வந்த அன்பழகன் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு வைரஸ் அறிகுறி இருக்கிறதா இல்லையா என்று போலியாக பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி கோவிலுர் ஊராட்சியில் கொரோனாவை தடுக்க ஒவ்வொரு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆலங்குடி:

    ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கோவிலுரில் ஊராட்சி மன்றத்ததலைவர் பவுலினா எட்வர்ட் மரிய ஜோசப் தலைமையில் ஊழியர்கள் கொரோனாதடுப்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி ஒவ்வொரு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் வீடுகள், தெருக்கள், கடை வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழை, எளியவர்களுக்கு தினந்தோறும் மதிய உணவு கொடுக்கப்படுகிறது. 

    மேலும் கொரோனா வைரசால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றி ஊராட்சி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மராட்டிய மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை வந்த 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவாமல் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மிரட்டுநிலை கிராமத்தில் டெல்லி சென்று வந்த 23 வயதுடைய வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரும் நல்ல நிலையில் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மேலும் பரவாமல் தடுக்க மிரட்டுநிலை கிராமத்தை சுற்றி 8 கி.மீ. அளவுக்கு வீடு, வீடாக கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மராட்டியத்தில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்கள் 15 பேர் தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு திரும்பினர். அவர்கள் அங்கிருந்து பொருட்கள் வரும் லாரியில் மாறி, மாறி வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 10 பேருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. மீதம் 5 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் ஏற்கனவே வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    ×