search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதியவர் செல்லையா
    X
    முதியவர் செல்லையா

    95 வயதில் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி விற்கும் முதியவருக்கு உதவித்தொகை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, முதியவர் செல்லையாவை அலுவலகம் அழைத்து முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு நகலை வழங்கினார்.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பளுவான் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (வயது 95). இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். செல்லையா தனது தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். பனை மரங்களில் ஏறி நுங்கு வெட்டி விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் உணவு சமைத்து சாப்பிட்டு வருகிறார். மேலும் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்தும் வருகிறார். இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. அதில் முதியவர் செல்லையாவுக்கு முதியோர் உதவித் தொகை கிடைத்தால் அவரது தள்ளாத வயதில் உதவியாக இருக்கும் என்று அப்பகுதியில் உள்ள முதியவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையும் இடம் பெற்றிருந்தது.

    இந்த செய்தி ‘தினத்தந்தி’யில் வெளியான நிலையில் அந்த முதியவர் பற்றிய தகவல்களை வருவாய்த்துறையினர் மூலம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று ஆலங்குடி வட்டாட்சியர் யோகேஸ்வரன் மூலம் முதியவர் செல்லையாவை கலெக்டர் அலுவலகம் அழைத்து வர செய்து முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு நகலை வழங்கினார். அந்த உத்தரவு நகலை பெற்றுக் கொண்டு முதியவர் நன்றி கூறினார்.

    இதுகுறித்து கொத்தமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், முதியவர் செல்லையாவுக்கு தள்ளாத வயதில் உதவித்தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று உறவினர்கள், பொதுமக்கள் கோரிக்கையை பிரசுரம் செய்த ‘தினத்தந்தி’க்கும், அந்த கோரிக்கையை உடனே ஏற்று உதவித்தொகை வழங்கிய கலெக்டருக்கும், மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர். 
    Next Story
    ×