என் மலர்
புதுக்கோட்டை
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை கடைவீதிகளில் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் கடந்த ஓரிரு நாட்களாக அலைமோதியது.
இதற்கிடையில் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வட்டம் வரைதல், கடைகள் முன்பு கயிறு கட்டுதல், கைகளை கழுவ கிருமி நாசினி வைத்தல், கடை ஊழியர்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் சிலர் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் டவுன் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கீழ ராஜ வீதியில் குவிந்தனர். மேலும் தாசில்தார் முருகப்பன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்தனர். கடை வீதியில் ஒவ்வொரு கடையாக பார்வையிட்டனர்.
அப்போது கடைகளில் இருந்த உரிமையாளர், ஊழியர்கள் சிலர் முக கவசம் அணியாமல் இருந்தனர்.
மேலும் சமூக இடை வெளியை பின்பற்ற கடைகள் முன்பு வட்டம் உள்ளிட்டவை எதையுமே வரையவில்லை. மேலும் கைகளை கழுவ கிருமிநாசினி வைக்கவில்லை. இதனை கண்ட அவர்கள் கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து கடைகளை இழுத்து மூட உத்தரவிடப் பட்டது. இதைத்தொடர்ந்து கடைகளில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு கடையின் கதவுகளை போலீசார் இழுத்து மூடினர்.
கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி உள்ளிட்ட கடை வீதிகளில் இந்த சோதனை நடந்தது. இதில் சமூக இடைவெளி உள்பட அரசு விதித்த நடைமுறைகளை பின்பற்றாத பாத்திர கடை, கவரிங் கடைகள், செருப்பு கடைகள் உள்ளிட்ட 40 கடைகளுக்கு வருவாய்த்துறை மூலம் போலீசார் ‘சீல்’ வைத்தனர். மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் கடைவீதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத்தலைவர் அனுப்பிரியா ராமமூர்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வி, ராஜேஷ்வரி, பாரதி ராஜா, வியாக்குளம், தர்மராஜ், சுதா சத்யராஜ், மீனாம்பாள் மற்றும் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் ஊரடங்கு பற்றியும், வைரஸ் பரவல் தடுக்கும் விதம் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
144 தடை உத்தரவால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். அத்தியாவசியமான பொருட்கள் வாங்க ஒருவர் மட்டும் செல்ல வேண்டும். தடையை மீறினால் காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் தெரிவித்ததுடன், வைரஸ் பரவலை தடுக்கும் விதம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தொலைபேசி வழியாக விவசாயிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகள் குழுவாகவும் நிறுவனங்களாகவும் இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியம், அமைப்புகளை உருவாக்க மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிதி ஆதாரங்கள் மற்றும் இதர திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பபயிற்சி மற்றும் ஆலோசனைகள், சந்தை வாய்ப்பு தகவல்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
விவசாயிகள் கேள்விகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் ஜெயஸ்ரீ, வணிகதுறை துணை இயக்குநர் சிவகுமார், வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்கல்லூரி பேராசிரியர் செல்வம், நற்கீரர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத் தலைவர் காமராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொலைபேசி வழியாக கலந்து கொண்டனர்.
கொரானா பரவலை தடுக்கும் வகையில் விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே அலுவலர்களிடம் ஆலோசனைகள் பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலங்குடி தேர்வு நிலை பேரூராட்சி மற்றும் தீயணைப்பு நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 5வது முறையாக இயற்கை வேம்பு, கிருமி நாசினி கரைசல் மருந்து ஆலங்குடி அண்ணாநகர் மற்றும் சில தெருக்களில் தெளிக்கப்பட்டது. ஆலங்குடி தேர்வுநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் செழியன் முன்னிலை வகித்தார்.
மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன், கார்த்திக் மற்றும் மீட்பு குழுவினர்கள் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் சண்முக வள்ளி, ரேவதி, விழி கிராமப்புற அறக்கட்டளையின் தலைவர் மணிகண்டன்,பேரூராட்சி தூய்மை மேற்ப்பார்வையாளர் ராஜேந்திரன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வேங்கி டக்குளம், தெட்சிணாபுரம், கொத்தக்கோட்டை, மழவராயன்பட்டி போன்ற ஆலங்குடி பகுதியில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.
பலா மரங்கள் மாசி மாதத்தில் பூக்காமல் பிஞ்சு விடத்தொடங்குகின்றன. இவை பருத்து சித்திரை, வைகாசி மாதங்களில் சந்தைப்படுத்தப்படுவது வழக்கம். இப்பகுதியில் விளையும் பழங்கள் சதைப்பற்றுமிகுந்தும் சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
இவைகளை மொத்த வியாபாரிகள் அறுவடைக்கு முன்பே விவசாயிகளுக்கு முன் பணம் கொடுத்து வைப்பார்கள். அறுவடைக்குப்பின் மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய பெருநகரங்களுக்கு லாரி மூலம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்வார்கள். இம்முறையால் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வராததால் பலாப்பழங்களை பறிக்க முடியாமல் மரங்களி லேயே விடப்பட்டுள்ளன.பழங்கள் பழுத்து தானாகவே கீழே விழுந்து நாசமாகின்றன. அழுகும் பொருட்களை பாதுகாக்க குளிர்பதனக் கிடங்குகள் போதிய அளவில் இல்லை.
கட்டுப்பாடு முடிவுக்கு வந்து விடும் என எண்ணிய விவசாயிகள் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மனமுடைந்த நிலையில் உள்ளனர். எனவே அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென எதிர் பார்க்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னை நெற்குன்றம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி ஆயிங்குடி கிராமத்தில் கணேசன் என்பவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து அனுமதி பெற்று 3 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் ஆயிங்குடி கிராமத்திற்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13-வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுக்கோட்டை லட்சுமி நகருக்கு வந்த 60 வயதான தொழிலாளி ஒருவர் ராணியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சிறுமி உள்பட 2 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை லட்சுமிநகரில் தொழிலாளி வீடு இருக்கும் பகுதியை அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக அனைத்து பொருட்களையும் நடமாடும் வாகனம் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்பிரமணியன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் மற்றும் போலீசார், மருத்துவ குழுவினர் நேற்று அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் வசிப்பவர்களில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என விசாரித்து பரிசோதனை மேற்கொள்கின்றனர். மேலும் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் சூரணமும் வினியோகிக்கப்படுகிறது. அந்த பகுதியில் திறந்திருந்த ஒரு கடையை அடைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதேபோல ஆயிங்குடி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பெருங்குடியில் இருந்து ராயவரம் செல்லும் பாதை சு.கதி.காந்தி உயர்நிலைப்பள்ளி அருகேயும், கொத்தமங்கலம் ஆயிங்குடி சாலையும் அடைக்கப்பட்டது. ராயவரத்தில் இருந்து ஆயிங்குடி செல்லும் சாலைபொன்னியம்மன் கோவில் அருகேயும், கானாப்பூர் சாலை கே.செட்டிபட்டி அருகேயும் அடைக்கப்பட்டது. இதனால் வெளியில் இருந்து ஆயிங்குடி கிராமத்திற்கும், ஆயிங்குடியில் இருந்து வெளியிலும் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ராயவரம் மற்றும் ஆயிங்குடி கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று காலை 6 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொள்கின்றனர். மேலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதில் மிரட்டுநிலை கிராம வாலிபர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் வாலிபர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மிரட்டுநிலை கிராமத்திற்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மிரட்டுநிலை சுற்றி உள்ள கிராமமக்கள் ஊரடங்கில் தளர்வு செய்தாலும் தேவையற்ற கெடுபிடியால் மிகுந்த மன உளைச்சல் அடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் அரிமளத்தில் இருந்து கே.புதுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள துறையூர் ஊராட்சி கீரணிப்பட்டி கிராமத்தில், ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் பரவுவதைதடுக்கும்விதமாக கிராமமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூங்கில் கம்பு மற்றும் தகரம் கொண்டு அடைத்து உள்ளனர்.
அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது மட்டுமே திறந்து விடுகின்றனர். ஆங்காங்கே வெளி ஆட்கள் உள்ளே வர அனுமதி இல்லை என பேனர் வைத்துள்ளனர். அனைத்து வழிகளும் அடைத்து ஒரு வழியில் மட்டுமே கிராமத்திற்குள் செல்வதால், யார் சென்றாலும் கிராமமக்கள் பிடித்து விசாரணை செய்கின்றனர்.
வெளியூர் நபர்களாக தெரிந்தால் உள்ளே வர அனுமதிப்பதில்லை. எப்போதும் பர பரப்பாக காணப்படும் அறந்தாங்கி- காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ள கே.புதுப்பட்டி கடை வீதி ஊரடங்கு தளர்வு செய்த போதிலும் மதியம் 2 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகளை வியாபாரிகள் திறந்து வைத்திருந்தபோதும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். மதியம் 2 மணிக்கு மேல் பொதுமக்கள் வீட்டில் முடங்கி விடுகின்றனர். கொரோனா வைரசை ஒழிப்பதே லட்சியம் என அந்த கிராம மக்கள் கூறினர்.
புதுக்கோட்டையில் ஏற்கனவே மிரட்டுநிலை பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை திரும்பினார். அவரை பிடித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில் உள்ள கொரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர்.
அவரது ரத்தம், சளி மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர். இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை, வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் ஆகியோர் லட்சுமி நகர் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்ற முடிவு செய்து தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள ஆயங்குடி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை கோயம்பேடு, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 20 பேர் வந்திருந்தனர். அவர்களை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர் ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆயங்குடி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
ஊரடங்கு காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், இலுப்பூர், விராலிமலை உள்பட பல்வேறு தாலுகாக்களில் பாதுகாப்பற்ற கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக லாரிகளில் ஏற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் 7 இடங்களில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் தினமும் மதுவிற்ற பணம் மற்றும் மீதமுள்ள ஸ்டாக் பற்றி அந்தந்த கடை சூப்பர் வைசர்கள், மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதுடன் கணக்கு காட்ட வேண்டும்.
ஊரடங்கு அமலில் வந்த மார்ச் 24-ந்தேதி பெரும் பாலான கடைகளில் மது விற்ற கணக்கு இதுவரை காட்டப்படவில்லை என்றும், சரியான இருப்பும் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இரவு 10 மணி வரை பெரும்பாலான கடைகளில் கள்ள சந்தையில் மது விற்பவர்களுக்கு பெட்டி, பெட்டியாக மது விற்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பல கோடி வரை மது விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் துணையுடன் முறைகேடாக மது விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஊரடங்கு அமலில் வந்த நாளன்று இரவு வரை பெட்டி, பெட்டியாக பிளாக்கில் மது பாட்டில்கள் விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களில் ரூ.4 கோடி வரை மதுபாட்டில் இருப்பு குறைகிறது. நாளை 7-ந்தேதி கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளதால், மது பாட்டில் விவரம் கணக்கெடுத்தபோது இந்த முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பு குறைவதற்கான பணத்தை அந்தந்த கடைகளின் சூப்பர்வைசர்களே கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான (மே) அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,020 ரேஷன் கடைகளில் 4½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவினியோகத் திட்டம் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வீடு, வீடாக டோக்கன் கடந்த 2 நாட்களாக வினியோகிக்கப்பட்டன. அதில் பொருட்கள் வாங்குவதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று வினியோகம் தொடங்கிய நிலையில் அத்தியாவசிய பொருட்களை பெற மக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்தனர். சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்றனர். இந்த மாதத்திற்கான அரசு அறிவித்த தலா ஒரு கிலோ சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தலா 5 கிலோ வீதம் அரிசி ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டன.
அரிசியை ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த தகர தகடு வழியாக ஊழியர்கள் வினியோகித்தனர். இதனை பைகளில் மக்கள் பிடித்துக்கொண்டனர். இதற்கிடையில் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகத்தை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்ட வழங்கல் அலுவலர் பொன்மலர், தாசில்தார் முருகப்பன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் அந்தந்த தேதியில் ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்குரிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவ மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வகுப்பை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார். ஆன்லைனில் நடத்தப்பட்ட வகுப்பில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், “இனிவரும் காலங்களிலும் இந்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். ஒரு நாளைக்கு 1½ மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படும். தமிழகத்தில் இந்த முயற்சியை முன்னெடுத்த முதல் மருத்துவ கல்லூரி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவர்களில் 140 மாணவர்கள் ஆன்லைனில் நேற்று கலந்து கொண்டனர்” என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது உடலியங்கியல் துறை பேராசிரியரும் துணை முதல்வருமான டாக்டர் சுஜாதா, ஹார்மோன்கள் பற்றிய பாடங்களை பயிற்றுவித்தார். தொடர்ந்து உதவிப் பேராசிரியர்கள் டாக்டர் அன்பரசி, சாஜு நிஷா, வெங்கடேஷ் ஆகியோர் பாடங்களை நடத்தினர்.






