என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரணிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை கம்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    கீரணிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை கம்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ள காட்சி.

    ஊரடங்கு தளர்விலும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வரும் கிராமமக்கள்

    ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டபோதிலும் கிராம மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் வாலிபர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மிரட்டுநிலை கிராமத்திற்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மிரட்டுநிலை சுற்றி உள்ள கிராமமக்கள் ஊரடங்கில் தளர்வு செய்தாலும் தேவையற்ற கெடுபிடியால் மிகுந்த மன உளைச்சல் அடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அரிமளத்தில் இருந்து கே.புதுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள துறையூர் ஊராட்சி கீரணிப்பட்டி கிராமத்தில், ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் பரவுவதைதடுக்கும்விதமாக கிராமமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூங்கில் கம்பு மற்றும் தகரம் கொண்டு அடைத்து உள்ளனர்.

    அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது மட்டுமே திறந்து விடுகின்றனர். ஆங்காங்கே வெளி ஆட்கள் உள்ளே வர அனுமதி இல்லை என பேனர் வைத்துள்ளனர். அனைத்து வழிகளும் அடைத்து ஒரு வழியில் மட்டுமே கிராமத்திற்குள் செல்வதால், யார் சென்றாலும் கிராமமக்கள் பிடித்து விசாரணை செய்கின்றனர்.

    வெளியூர் நபர்களாக தெரிந்தால் உள்ளே வர அனுமதிப்பதில்லை. எப்போதும் பர பரப்பாக காணப்படும் அறந்தாங்கி- காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ள கே.புதுப்பட்டி கடை வீதி ஊரடங்கு தளர்வு செய்த போதிலும் மதியம் 2 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகளை வியாபாரிகள் திறந்து வைத்திருந்தபோதும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். மதியம் 2 மணிக்கு மேல் பொதுமக்கள் வீட்டில் முடங்கி விடுகின்றனர். கொரோனா வைரசை ஒழிப்பதே லட்சியம் என அந்த கிராம மக்கள் கூறினர்.
    Next Story
    ×