என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தைல மரக்காட்டில் நேற்று மதியம் 14 வயது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மயங்கி கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மயங்கி கிடந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் என தெரியவந்தது. மேலும் அவர் பாப்பான்குளம் பகுதியில் தண்ணீர் எடுக்க சென்றதும், அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தைல மரக்காட்டில் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. அவரை மர்மநபர்கள் தைல மரக்காட்டிற்குள் கடத்தி சென்றிருக்கலாம் எனவும், அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மார்சல் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 229 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 2,939 உறுப்பினர்களுக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு திட்ட நிதியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 255 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 572 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் என மொத்தம் 827 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.5 கோடியே 47 லட்சம் கொரோனா சிறப்பு கடன் தொகைக்கான காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
இத்திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5 ஆயிரமும், அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்வைப்பு தொகை, காப்பு தொகை, சேவை கட்டணம், நடைமுறை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும், தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை மகளிர் சுயஉதவி குழுவினர் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் கூறினார். மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
இதில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சின்னதம்பி, அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சாம்பசிவம், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் திறக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையொட்டி மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்தனர். நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரத்தில் ரூ.4 கோடியே 73 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்படவில்லை. குறிப்பிட்ட அளவில் மதுப்பிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிக அளவில் விற்பனையால் மதுபாட்டில்கள் காலியாகின. இதனால் குடோனில் இருந்து மதுபாட்டில்கள் எடுத்துவரப்பட்டு கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டன. அதனை டாஸ்மாக் கடைகளில் அடுக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை திறப்பினால் பெட்டி கடைகளில் சிகரெட், பாட்டில் தண்ணீர், தின்பண்டங்கள், கிளாஸ் உள்ளிட்டவை விற்பனை சற்று அதிகரித்துள்ளது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பெரியாலூர் கிராமத்தில் சாராய ஊரல் இருப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து ஆலங்குடி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் லதா தலைமையில் தலைமைக்காவலர் பால்ராஜ், அமுதவள்ளி மற்றுமபோலீசார் பெரியாலூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 38) என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் 55 லிட்டர் கள்ளசாரயம், 600 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ராம்குமாரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆலங்குடி மது விலக்கு போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லக்கண்ணன முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் சில நடைமுறைகளை பின்பற்றி கடைகள் திறக்க அறிவிக்கப்பட்டன. அதன்அடிப்படையில் கடந்த 11-ந் தேதி முதல் டீக்கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து புதுக்கோட்டையில் டீக்கடைகள் உள்ளிட்ட அரசு அனுமதித்த கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் டீக்கடைகளில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் இருத்தல், பார்சல் டீயை தவிர கடை முன்பு நின்று வாடிக்கையாளர்கள் குடிக்க அனுமதித்தல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் தாசில்தார் முருகப்பன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று புதுக்கோட்டை நகர பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமலும், டீக்கடைகள் முன்பு வாடிக்கையாளர்கள் நின்று டீ குடிக்க அனுமதித்த மற்றும் அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றாத டீக்கடைகளை இழுத்து பூட்டினர். மேலும் அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். கீழ ராஜ வீதி, மச்சுவாடி, திருவள்ளுவர் சிலை அருகே உள்பட என மொத்தம் 5 டீக்கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. டீக்கடைகளில் போடப்பட்டிருந்த பலகாரங்களை விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் நிதியையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டு விட்டது. வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. எம்.பி.க்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் நிதி திருப்பி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
கொரோனா வைரசுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுவது ஏற்க கூடியது அல்ல. இவ்வாறு கூறுவதற்கு எதற்கு அரசாங்கங்கள் இருக்க வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மதுக்கடையை திறந்தது தவறு. கோர்ட்டு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க மேல்முறையீடு செய்ததும் தவறு. ரஜினிகாந்த் டாஸ்மாக் விவகாரம் குறித்து கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியை பெற வேண்டும். தமிழக அரசு ரூ.5 ஆயிரம் ஒரு குடும்ப அட்டைக்கு வழங்க வேண்டும். மத்திய அரசும் பொதுமக்களுக்கு போதிய நிதியை நேரடியாக வழங்க வேண்டும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது தேவையற்றது. அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்பொழுது மாவட்டத்தில் ஆடு, கோழி இறைச்சிகள் மற்றும் சில அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை மிகுதியாக விற்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளது.
எனவே மாவட்டத்தில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட எவற்றையும் வணிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தொழிலாளர் நல அலுவலர் மாவட்ட காவல்துறை, நகராட்சி அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைகாரர்கள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வழங்குவதையும் கடையில் பணிபுரியும் பணியாளர்கள், முகக்கவசம், கையுறைஅணிந்து பணிபுரிவதையும் உறுதி செய்யவேண்டும்.
பொதுமக்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வணிகர்கள் அதிக விலைக்கு விற்றால் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் 99449 59595 என்ற அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் ஆடு, கோழி, மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட எவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடக்க நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று எதுவும் ஏற்படவில்லை. கடந்த மாதம் 20-ந்தேதி முதல் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு நகரில் ஒருவருக்கும், ஆயிங்குடியில் ஒருவருக்கும் என 2 பேருக்கு தொற்று ஒரே நாளில் அறிவிக்கப்பட்டது. இந்த இருவரும் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ச்சியாக விராலி மலை சுற்று வட்டாரத்தில் 2 பேருக்கு ஒரேநாளில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இலுப்பூர் வட்டாரத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 3 பேரும் புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் இந்த சிகிச்சை மையத்திற்கு பொறுப்பு வகிக்கின்றனர். சுழற்சி அடிப்படையில் தொற்றாளர்களை டாக்டர்கள் சந்தித்து அவர்களின் உடல் நலனில் உள்ள முன்னேற்றம் குறித்து கேட்டறிகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் இஞ்சிச்சாறு வழங்கப்படுகிறது. 3 பேரும் நலமுடன் இருப்பதாக டாக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் பரவல் தடுக்கப்பட்டு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொருவராக பாதிக்கப்பட்டு வருவது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலிருந்து வாரியப்பட்டி செல்லும் சாலையில் உள்ள புதிய கோர்ட்டு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை குடியிருப்பு பகுதியில் இருந்து சற்றுதூரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி இக்கடை திறக்கப்பட்டது. அதன்பின் கோர்ட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை தொடர்ந்து இக்கடையும் மூடப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலையில் அக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியினர் திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இது பாதுகாப்பற்ற பகுதியில் இருந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






