என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பணம் வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி வரை மோசடி செய்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த வர் கார்த்திக் (வயது 31). இவர் அறந்தாங்கி பகுதியில் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் பணத்துக்கு வட்டி வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி வரை வசூல் செய்து தலைமறைவானார். இதையடுத்து பணத்தை கொடுத்தவர்கள் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.
    நகை மதிப்பீட்டாளரின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி கிளை மூடப்பட்டது. வங்கி ஊழியர்கள், குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இதில் நகை மதிப்பீட்டாளரின் 8 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    அவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 13 பேருக்கும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    புதுக்கோட்டை:

    மேட்டூர் அணையில் இருந்து இந்தாண்டு குறுவை சாகுபடிக்காக வருகிற ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் காவிரி நீர் கடைமடை வரை செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளும் குடிமராமத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதை கண்காணிக்க புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். குடிமராமத்து பணி நடக்க திட்டமிடப்பட்டுள்ள கவிநாடு கண்மாய் பகுதியில் ஆளில்லா விமானம் மற்றும் டிரோன் கேமரா வாயிலாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    காவிரி நீர் பாயும் பகுதிகளில் 43 சிறு குளங்கள், ஏரிகள் ஆகியவை ரூ.23கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. ரூ.2 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற ஜூன் 10-ந்தேதிக்குள் முடிவடையும் என்ற நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்திலேயே முதல் முறையாக புதுகை மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மற்றும் டிரோன் வாயிலாக தூர்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்படுகிறது.

    வாய்க்கால்கள், கண்மாய்கள் தூர்வாருவதற்கு முன்பும், தூர்வாரிய பின்பும் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கணக்கிடப்படும். மேலும் காவிரி நீர் வந்தவுடன் நிலத்தடி நீர் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து இந்த ஆய்வு பரீட்சார்த்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து பகுதிகளிலும் இதேப்போல் செய்வதற்கு அரசிடம் பரிந்துரைக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் மொத்தம் 20 பணிகள், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள ரூ.1.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 53.24 கி.மீ. நீளத்துக்கு வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரப்பட உள்ளன.

    இதில் ஒரு பணியாக அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மேக்குடியில் உள்ள கோட்டை வடிகால் வாய்க்கால் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 3.60 கி.மீ. நீளத்துக்கு பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாருவதற்கான பணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர்.

    கோட்டை வடிகால் வாய்க்கால் பிச்சாவரம் கிராமத்தில் தொடங்கி மேக்குடி, பழூர் வழியாக சுமார் 4 கி.மீ. தொலைவு சென்று கொடிங்கால் வடிகாலில் கலக்கிறது. ராமவாத்தலை மற்றும் புதுவாத்தலை பிரதான வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்களின் உபரிநீரும், மழைநீரும் ஒன்றாக சேர்ந்து கோட்டை வடிகால் வாய்க்காலில் கிடைக்க பெறுகிறது.

    இந்த கோட்டை வடிகால் வாய்க்கால் மேடுகளாகவும், செடி, கொடிகள் முளைத்தும் உள்ளதால் மழை தண்ணீர் முழுவதும் வடிகாலின் இருபக்கமும் வழிந்து சென்று நெற்பயிர்களுக்கு சேதத்தினை ஏற்படுத்துகிறது. ஆகவே, வடிகாலில் உள்ள மண்திட்டுகள், செடி, கொடிகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி வடிகாலை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் திருச்சி மாவட்டத்திற்கு வருவதற்கு 20-ந் தேதி ஆகிவிடும். அதற்குள் தூர்வாரும் பணி நிறைவடைந்து விடும், என்று கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆலங்குடி:

    கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் கவுசல்யா தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு ரூ.50ஆயிரம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டது.

    வடகாடு அருகே வேகத்தடை அமைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே உள்ள கன்னியாங்கொல்லை பகுதியில் ஒரு தரப்பினர் தாங்கள் வசிக்கும் பகுதி அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைத்தனர். இதற்கு வானக்கன்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வேகத்தடையை அகற்றி உள்ளனர்.

    இதில் இரு தரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினரில் காயமடைந்த 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து இருதரப்பினரும் வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வானக்கன்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் தனியார் மருத்துவமனைகள் தினமும் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடினார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா  தொற்று பரிசோதனை


    அரசு மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நவீனமய மாக்கப்பட்டுள்ளது. தேவையான படுக்கைவசதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசு முயற்சியால் முதல்நிலை பணியாளர்களாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்படுவதால் உலகத்திலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் என்பது 0.7 என்ற அளவில் உள்ளது.

    நம்முடைய சிகிச்சை முறை குறித்தும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது குறித்தும் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசைப் பாராட்டி வருகிறது. தற் போது தமிழக அரசோடு இணைந்து தனியார் மருத்துவமனைகளும் கொரோனா சிகிச்சை அளித்து வருகிறது அவர்களுக்கு தொடர்ந்து தினந்தோறும் ஐ.சி.எம்.ஆர். புரோட்டோகால் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து மருத்துவமனைகளிலும் வீடியோ கால் மூலமாக கொரோனா நோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அரசு சார்பாக முன்னெச்சரிக்கை கவசங்கள் அளிக்கப்பட்டு அவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டுதான் நோயாளிகளை சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இருப்பினும் எதிர்பாராத விதமாக அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் எந்த விதபயமும் இல்லாமல் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது. அரசு அவர்களுக்கு என்றென்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டையில் தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அடப்பனவயல் பகுதியில் கைவண்டி தொழிலாளர் நகரை சேர்ந்த 48 வயதுடையவர் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவர் புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கும், 45 வயதுடைய அவருடைய மனைவிக்கும் சளி, காய்ச்சல் என கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று முன்தினம் சேர்ந்தனர். அங்கு 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் பணிபுரிந்த வங்கியில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வங்கி செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த வணிக வளாகத்தின் அருகே உள்ள தனியார் வங்கி மற்றும் கடைகள் பூட்டப்பட்டன.

    கொரோனா தொற்று உறுதியான நபர் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வங்கி மற்றும் அந்த பகுதி மூலம் நகராட்சி அதிகாரிகள் நேற்று கிருமி நாசினி தெளித்தனர். வளாகத்தின் முன்பு கயிறு கட்டி தடுப்புகள் அமைத்தனர்.

    தம்பதி வசிக்கும் பகுதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தம்பதிக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி? என்பது புதிராக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த கீரனூர் அருகே ஆள்வான்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் ராணியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 18-ந் தேதி ஊருக்கு வந்த அவரது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். மேலும் மகனின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போதும் உறவினர்கள் பலர் வந்து சென்றனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரது மனைவி, தாய், குழந்தைகள் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாவட்ட மலேரியா அதிகாரி சுப்ரமணியன் தலைமையில் சுகாதார அதிகாரிகள், குழுவினர் அந்த பகுதியில் வீடு, வீடாக யாருக்காவது காய்ச்சல், சளி உள்ளதா? என ஆய்வு மேற்கொள்கின்றனர். அந்த பகுதி முழுவதும் தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊருக்குள் செல்லும் பாதைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில் மேலும் 3 பேர் மூலம் 18 ஆக உயர்ந்தது. மாலத்தீவில் இருந்து வந்தவர் உள்பட 7 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களில் 9 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருச்சிற்றம்பலம் அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அரசு பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.
    திருச்சிற்றம்பலம்:

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஏனாதி கரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் விடுமுறையில் உள்ளன. இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

    இதையடுத்து பொதுத்தேர்வை எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் ஏனாதி கரம்பை அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 25 மாணவர்கள் எழுத உள்ளனர். இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தமிழரசன், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது பெற்றோர்களுடன் கலந்து பேசி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்குவதுடன் அவர்களுக்கு பாடங்களையும் நடத்தி வருகிறார்.

    இதனால் மாணவர்களும் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர் கொள்ள தயாராகி வருகின்றனர். இவை தவிர ஏனாதி கரம்பை மற்றும் சுற்றுப்புற பகுதி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் பணியிலும் தமிழரசன் ஈடுபட்டுள்ளார். அரசு பள்ளி ஆசிரியரின் இந்த தன்னலமற்ற சேவையினை அனைத்து தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.
    வடகாடு பகுதியில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர். கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் பச்சை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த வருடம் ஓரளவுக்கு விலை கிடைக்கும் என நினைத்து ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, பச்சை மிளகாய்க்கு உரிய விலை இல்லாமல் கிலோ ரூ.10 முதல் ரூ.12 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கி மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்த சமயத்தில் தான் பச்சை மிளகாய் சீசன் ஆகும். அப்போது பச்சை மிளகாய் கிலோ ரூ.3 முதல் ரூ.4 என்ற விலையிலேயே விற்பனை நடந்தது. இதனால் நொந்து போன விவசாயிகள் நிறைய பேர் பச்சை மிளகாயை பறிக்காமல் செடிகளில் விட்டுவிட்டனர். இதனால் பச்சை மிளகாய் பழுத்து செடிகளிலேயே நாசமாகி விட்டது. இதில் மிஞ்சியுள்ள ஒருசில விவசாயிகள் தான் மிளகாய் செடிகளை பராமரிப்பு செய்து, பச்சை மிளகாய்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையிலும் பச்சை மிளகாய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும், இந்த வருடம் பச்சை மிளகாய் பயிரிட்டிருந்த அனைத்து விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
    அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சினையில் தம்பி மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே அரசர்குளம் வடபாதியை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன்கள் சண்முகசுந்தரம் (வயது 28), கலையரசன் (26). இதில் கலையரசன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்.

    இந்நிலையில் குடும்ப பிரச்சினையின் காரணமாக நேற்றுமுன்தினம் சண்முகசுந்தரம் அவரது தம்பி கலையரசன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீக்காயமடைந்த கலையரசனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் வழக்குப்பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மற்றும் சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 42 பேர் மராட்டிய மாநிலம் மும்பையில் தொழில் செய்தும், வேலை பார்த்தும் வந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், தொழில் மற்றும் வேலைவாய்ப்பை இழந்த அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2 தனியார் பஸ்களில் மும்பையில் இருந்து கறம்பக்குடிக்கு வந்தனர்.

    அவர்களில் 21 பேர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 21 பேர் காட்டாத்தி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 1½ வயது குழந்தை உள்பட 7 பேர் கறம்பக்குடியை சேர்ந்தவர்கள், ஒருவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியையும், மற்றொருவர் தஞ்சாவூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதைத்தொடர்ந்து அந்த 9 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 33 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேர் தங்கி இருந்த அரசு பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து, தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் முகாமில் தங்கி இருந்தவர்களிடம் தொடர்பில் இருந்த வருவாய், பேரூராட்சி, சுகாதார துறையினருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    கறம்பக்குடியை சேர்ந்த 7 பேர் உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    புதுக்கோட்டை அருகே கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சென்னை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கீழ துருவாசகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 16-ந் தேதி திருமயம் அருகே மூங்கிதானப்பட்டி டாஸ்மாக் கடையில் ரூ.200 கள்ளநோட்டுகள் 2-ஐ கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற போது அவர் சிக்கினார். அவருடைய கூட்டாளிகள் திருமயத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30), முகமது இப்ராகிம் (27), முகமது நசுருதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர் கொடுத்த தகவலின்பேரில் கள்ளநோட்டை கொடுத்ததாக சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் 3-வது தெருவை சேர்ந்த சுரேசை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கன்னியாகுமரி மாவட்டம் புத்தனேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் கள்ளநோட்டை அச்சடித்ததாகவும், தன்னிடம் கொஞ்சம் கொடுத்து மாற்ற கூறியதாகவும் கூறினார்.

    இதையடுத்து தனிப்படையினர் நாகர்கோவில் விரைந்து சென்று மணிகண்டனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
    ×