search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சை மிளகாய்"

    • பச்சை மிளகாயில் கேப்சைசின் என்ற சேர்மம் உள்ளது.
    • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை பச்சை மிளகாய்க்கு உண்டு.

    சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் காரமான உணவுகளை சாப்பிட ஆசைப்படுவார்கள். ஆனால் அதிக காரம் சளி, இருமலை அதிகப்படுத்திவிடும் என்று கருதி சாப்பிட தயங்குபவர்களும் இருக்கிறார்கள். சமையலில் காரம் சேர்க்க வேண்டும் என்றாலே இல்லத்தரசிகளுக்கு பச்சை மிளகாய்தான் நினைவுக்கு வரும். அது காரத்திற்காக மட்டும் சமையலில் சேர்க்கப்படவில்லை. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை பச்சை மிளகாய்க்கு உண்டு.

    சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். சளியின் வீரியத்தை குறைப்பதற்கு அது உதவும்.

    குறிப்பாக பச்சை மிளகாயில் கேப்சைசின் என்ற சேர்மம் உள்ளது. அது சளியை வெளியேற்றவும், சுவாச பாதையை சீராக்கவும் உதவும். மேலும் பச்சை மிளகாயில் இருக்கும் பைட்டோநியூட்ரியண்ட்கள் சுவாச பாதையை தளர்த்தவும் துணை புரியும்.

    வெட்டுக்காயம் உள்ளிட்ட காயங்களால் அவதிபடுபவர்களும் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளை முடுக்கி விடுவதற்கு உதவும். வலியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். மன நிலையை மேம்படுத்தும் ஆற்றலும் பச்சை மிளகாய்க்கு இருக்கிறது.

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும், நெஞ்செரிச்சல் தொடர்பான வலியை குறைக்கவும் உதவும். அதேவேளையில் பச்சை மிளகாயை அதிகம் சேர்க்கக்கூடாது.

    • பல ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளைவிக்கக் கூடிய பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு அதிக விலையும் கிடைத்து வருவதால் விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில் அவ்வப்பொழுது பச்சை மிளகாய் திருட்டு போய் வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்ட தோட்டத்தில் காவல் காத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிவன், மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை வேளையில், விளை நிலங்களில் புகுந்து செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களை பறித்துக் கொண்டு அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு திருடி செல்ல முயன்றனர்.

    அப்போது தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்த விவசாயிகளில் சிலர், 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருடிய மிளகாய்களுடன் இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில் அவர்கள் திருடிய மிளகாய்களுடன், 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் 2 பேரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பச்சை மிளகாய் திருடிய வாலிபர்களை கட்டி வைத்து அடித்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 100 டன் அளவுக்கு பச்சை மிளகாய் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • இஞ்சியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது.

    தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சீசன் முடிந்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசனில் மட்டுமே தற்போது பச்சை மிளகாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்து உள்ளது.

    இதன்காரணமாக கடந்த சில நாட்களாக பச்சை மிளகாய் விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 3 மடங்கு வரை விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை ஆகிறது.

    வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.150வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பச்சை மிளகாய் மொத்த வியாபாரி ராம்மோகன் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 100டன் அளவுக்கு பச்சை மிளகாய் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அதன் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று 80 டன் பச்சை மிளகாய் விற்பனைக்கு வந்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பச்சை மிளகாய் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு பச்சை மிளகாய் விலை அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் இஞ்சியின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று அதன் விலை மேலும் எகிறி உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.220-க்கும் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.250- வரையும் விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவால் பச்சை பட்டாணி விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.200-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.250 வரையும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தைக்கு ஊட்டி, கொடைக்கானல், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பச்சை பட்டாணி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது டெல்லியில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே பச்சை பட்டாணி விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பச்சை மிளகாய் இல்லத்தரசிகளின் கண்களை கசக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
    • காந்தி மார்க்கெட்டில் இன்று பெங்களூரு பச்சை மிளகாய் கிலோ ரூ.120 க்கு விற்கப்பட்டது.

    திருச்சி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சில்லறை கடைகளில் கிலோ ரூ. 120 வரை விற்கப்படுகிறது. தற்போது இந்த ட்ரெண்டிங் செய்தி மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து வருகின்றன. இல்லத்தரசிகளும் கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியின் அளவை பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளனர்.

    திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று தக்காளியின் விலை ரூ.100 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கத்தரிக்காய் கிலோவுக்கு ரூ. 60, பீன்ஸ் ரூ. 100, கேரட் ரூ.70 மல்லி கட்டு ரூ. 50, புதினா ரூ. 50 விலைக்கு விற்கப்பட்டது. இதற்கிடையே சத்தம் இல்லாமல் பச்சை மிளகாய் இல்லத்தரசிகளின் கண்களை கசக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் இன்று பெங்களூரு பச்சை மிளகாய் கிலோ ரூ.120 க்கு விற்கப்பட்டது.

    இது வரலாறு காணாத விலை உயர்வு என காந்தி மார்க்கெட் காய்கறி சந்தையின் வியாபாரி கமலக்கண்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, முந்தைய காலகட்டங்களில் அதிகப்பட்சமாக ரூ. 60- 70 வரை மட்டுமே பச்சை மிளகாய் விலை உயர்ந்தது. ஆனால் இப்போது ரூ.120 தொட்டுள்ளது. பொதுவாக சமையலில் பச்சை மிளகாயின் பங்களிப்பு சிறிய அளவிலே இருக்கும். பொதுமக்களும் 100 கிராம், 200 கிராம் மட்டுமே வாங்குவார்கள். ஹோட்டல்களுக்கு மட்டுமே அரை கிலோ, ஒரு கிலோ என வாங்குவார்கள். பச்சை மிளகாய் போன்று இஞ்சி விலையும் உச்சம் தொட்டுள்ளது. காந்தி மார்க்கெட்டில் இன்று இஞ்சி ரூ.200க்கு விற்கப்பட்டது. உள்ளூர் பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு பச்சை மிளகாய் ரூ.10-க்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதிகளில் மிளகாய் பயிரிட்டவர்கள் அதனை பழுக்க விட்டு காய வைத்து வரமிளகாயாக மாற்றி விற்பனை செய்தனர். இது அவர்களுக்கு அதிக லாபத்தை தருவதாக இருந்தது. காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் விற்பனையும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் அதனை ரூ.35 முதல் ரூ.40 வரை என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
    • கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தே அதிகளவில் வருகிறது.

    இதில் பச்சைமிளகாய், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகின்றன.

    இந்த ஆண்டு துவக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பல கிராமங்களில் பச்சை மிளகாய் சாகுபடி ஓரளவு இருந்தது. இதனால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என சில மாதமாக அறுவடை செய்யப்பட்ட பச்சை மிளகாய் வரத்து மார்க்கெட்டுக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டது.

    வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் அதனை ரூ.35 முதல் ரூ.40 வரை என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் சுற்று வட்டார கிராமங்களில் புதிதாக சாகுபடியால் வெளியிடங்களிலும் பச்சை மிளகாய் சாகுபடி சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    பச்சை மிளகாய் வரத்து குறைந்ததால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100 முதல் ரூ.110 வரை என கூடுதல் விலைக்கு போனது. வரும் நாட்களில் பச்சை மிளகாய் வரத்து இன்னும் குறைந்தால், அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மிளகாய் செடியில் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.
    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மிளகாயின் விலையானது வெகுவாக அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுரண்டை, சாலைப்புதூர், நாகல்குளம், மேல பட்டமுடையார்புரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், செட்டியூர், நாட்டார்பட்டி, அரியப்பபுரம், குறுங்கா வனம், வெள்ளக்கால், இடையர்தவணை, குறும்பலாபேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

    அவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு மிளகாய் செடியில் அதிக வைரஸ் நோய் பாதிப்புகள் ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.

    இதனால் மார்க்கெட்டுக்கு சுற்று கிராம பகுதிகளில் இருந்து விவசா யிகள் கொண்டு வரும் மிளகாய் வரத்து குறைந்து உள்ளதால் கடந்த 15 நாட்க ளுக்கும் மேலாக மிளகாயின் விலையானது வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையானது.

    தமிழகம் முழுவதும் மட்டுமன்றி மைசூர் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மிளகாய் கொள்முதல் விலையும் ஒரே விலை யாகவே உள்ளது. வைரஸ் நோயில் இருந்து தப்பிய மிளகாய் செடிகளின் காய்கள் நல்ல விலைக்கு செல்வதால் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் மிளகாய் விலை விற்பனையாகி வருவதாக விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

    • பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
    • ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது.

    வீரபாண்டி :

    பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

    பல்லடம் வட்டம், கரைப்புதூர் ஊராட்சி அக்கணம்பாளையத்தை சேர்ந்த அரசன் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி வயது (55) மிளகாய் சாகுபடி செய்து வருகிறார். அவர் இது குறித்து கூறுகையில்; மிளகாய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை பச்சை மிளகாய் நாற்று நட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது காய் பிடிப்பதற்கு. பச்சை மிளகாய் செடியில் வெள்ளை விழுவதால் இலைகள் சுருங்கி பூக்கள் பாதிப்பை ஏற்பட்டு காய்கள் சரியாக பிடிப்பதில்லை. ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது. 20-25 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம். வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து விற்பனைக்கு எடுத்து செல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 1500கிலோ வரை கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு உயர்ந்துள்ளது.

    பராமரிப்புக்கும் அதிக செலவாகிறது. ஒரு கிலோ குறைந்த பட்சமாக 35 முதல் 40வரை விலை விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைக்கும்.ஆனால் ஒரு கிலோ 20 முதல் 25வரை மட்டுமே விலை போகிறது. இதனால் தொடர்ந்து மிளகாய் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.

    • “ஆடி அமாவாசை”யை முன்னிட்டு 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

    ஸ்ரீசித்தர் பீடத்தில் "ஆடி அமாவாசை"யை முன்னிட்டு பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன் தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும்,

    உலகை கடந்த காலங்களில் உலுக்கிய கொரோனா போன்ற கொடியநோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.

    கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக தொடங்கி மதியம் வரை நடந்தது.

    இதில், பங்கேற்ற பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.

    யாக வழிபாடுகளைத் தொடர்ந்து ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×