என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    விராலிமலை அருகே 3 வைக்கோல் போர்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆவூர்:

    விராலிமலை ஒன்றியம் மாங்குடி களத்துப்பட்டியை சேர்ந்த விவசாயிகளான ராமசாமியின் மகன்கள் காயாம்பூ (55), விஜயமூர்த்தி(47) ஆகியோர் தங்களது வீட்டின் அருகே அடுத்தடுத்து 5 வைக்கோல் போர்கள் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென ஒரு வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்தது. மற்ற வைக்கோல் போர்களுக்கும் தீ பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வைக்கோல் போர்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது.
    நெம்மேலிப்பட்டி அருகே தம்பதியை தாக்கிய தந்தை-மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


    ஆதனக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள நெம்மேலிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ரெங்கராஜ். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு(55). மட்டையன்பட்டியை அடுத்துள்ள தனக்கு சொந்தமான வயல் அருகே புறம்போக்கு இடத்தை கடந்த வாரம் ரெங்கராஜும், அவரது மனைவி சின்னப்பொண்ணும் சுத்தம் செய்தபோது, அங்கு வந்த ரெங்கராஜின் அண்ணன் நடராஜன், அவருடைய மகன் சங்கர் ஆகியோர் சேர்ந்து அந்த இடத்தில் தனக்கும் பங்கு உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவதூறாக பேசி 2 பேரையும் குச்சியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த ரெங்கராஜ், சின்னப்பொண்ணு ஆகியோர் வாராப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில் நடராஜன், சங்கர் ஆகியோர் மீது ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்.
    புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு பலியானவரின் மகனுக்கு தொற்று உறுதியானது. தந்தையின் இறுதிச்சடங்கை முடித்ததும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு 5-ம் வீதியை சேர்ந்த 65 வயதுடைய ஓய்வு பெற்ற நில அளவையர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் தகுந்த பாதுகாப்புடன் மயானத்தில் இரவில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையில் நில அளவையரின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் அவரது 23 வயதுடைய மகனுக்கு தொற்று இருப்பது, நேற்று முன்தினம் மாலை உறுதியானது. இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது மகன் மயானத்தில் இருந்தார். இருப்பினும் இறுதிச்சடங்கை முடித்த பின் அவரிடம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலியானவர் வசித்த பகுதியில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வெளியில் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது. இதில் 19 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டிஸ்சார்ஜ்’ ஆனவர்களில் புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதியை சேர்ந்தவரும் ஒருவர் ஆவார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
    கந்தர்வகோட்டை அருகே உள்ள தைல மரக்காட்டில் 13 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை, உறவினரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தைல மரக்காட்டில் 14 வயது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 55), இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வித்யா (13). தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த அவர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார்.

    மே 18-ந்தேதி அன்று வித்யா அவரது சகோதரியுடன் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிடாரி கோவில் குளத்தில் உள்ள ஊற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். வித்யா முதலில் செல்ல, அதன்பிறகு அவரது சகோதரி சென்றுள்ளார். பிடாரி கோவில் குளத்திற்கு சென்று  பார்த்த  போது அங்கு வித்யாவை காணவில்லை. இதனால் அவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோரும் உறவினர்களும் வித்யாவை தேடினர். அப்போது பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் களைந்து அலங்கோலமான நிலையில் கிடந்தார். முகத்தில் பலத்த காயம் இருந்ததுடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறியபடி கிடந்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய வித்யாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து இவ்வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தை மற்றும் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்ததாக தந்தை பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவான மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் கடந்த 29-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயதான முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பாதுகாப்பான முறையில் எரியூட்டப்பட்டது.

    அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவரது வீடு இருக்கும் புதுக்கோட்டை நகரம் வடக்கு 5-ஆம் வீதி ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதியவர் இறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் முதலில் கொரோனாவின் பிடியில் சிக்காமல் இருந்து வந்தது. அருகில் உள்ள திருச்சி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் யாரும் பாதிக்கவில்லை. தற்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களால் அங்கு பரவல் அதிகரித்துள்ளது. மேலும் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் 6 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

    ஆலங்குடி:

    தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி இயக்குனர் சைலேந்திர பாபு உத்திரவின்பேரில் துணைஇயக்குனர் மத்திய மண்டலம் மீனாட்சி விஜய குமார் அறிவுரையின்படி ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் 6 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

    போட்டியை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர் செழியன் மற்றும் நிலைய அலுவலர் சரவணக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் 25 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அமர்ந்திருந்தனர்.

    முடிவில் மாவட்ட அலுவலர் பானுப்பிரியா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 192 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகளையும் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பஸ் போக்குவரத்து குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற பணிமனைகளிலும் அரசு பஸ்கள் தயாராக உள்ளன.

    பஸ்கள் இயக்கப்படுவது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 டவுன் பஸ்களும், 122 மொபசல் பஸ்களும் என மொத்தம் 192 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு அறிவித்த 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும். இதில் 60 சதவீத பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திற்குள்ளும், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும். மாவட்டத்தில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் முக கவசம் அணிய வேண்டும். பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் ஏறி, முன் பக்க படிக்கட்டு வழியாக இறங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

    இதற்கிடையே தனியார் பஸ்களின் உரிமையாளர்களும் தங்களது பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பஸ் போக்குவரத்து இன்று தொடங்குகிற நிலையில் மதுரை, சிவகங்கை மார்க்கத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் இயங்கி வருகிறது. இதனை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று இரவில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    அறந்தாங்கி அரசு பணிமனையில் இருந்து இன்று முதல் 30 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதில் 8 டவுன் பஸ்களும், 22 மொபசல் பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அறந்தாங்கி பணிமனையில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் இயக்கப்பட உள்ளது. ஒரு பஸ்சில் 35 பயணிகள் அமர்ந்து செல்லவும், 5 பயணிகள் நின்று செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி, மதுரை மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் பாதுகாப்பு அலுவலர் மூர்த்தி தெரிவித்தார்.

    அரிமளம் அருகே மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் ஒன்றியம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த்(வயது 29). இவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவருடைய தாய் அன்னபூரணி கண்டித்து, மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து சாப்பிடும்போது, ஏன் குடித்துவிட்டு வந்தாய் என்று கேட்டு, திட்டி உள்ளார் இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது விஜயகாந்த், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கீரனூர் அருகே பொக்லைன் எந்திரம் மீது கார் மோதியதில் போலீஸ்காரர் மற்றும் அவருடைய தோழி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடியை சேர்ந்தவர் மனோ(வயது 35). இவர் திருச்சியில் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய தோழி கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சமீபா(30). இவர் திருச்சிக்கு வந்து மனோவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று காலை மனோ, சமீபா மற்றும் 5 வயது சிறுமியுடன் ஒரு காரில் திருச்சியில் இருந்து கோட்டைப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை மனோ ஓட்டினார்.

    கீரனூரை அடுத்த கொத்தமங்கலப்பட்டி சாலையில் சென்றபோது, எதிரே வந்த பொக்லைன் எந்திரம் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நசுங்கியது. இதனால் பலத்த காயமடைந்த மனோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சமீபாவுக்கு கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமி காயமின்றி தப்பினாள்.

    அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து சமீபா மற்றும் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சமீபா பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மனோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்த நல்லதங்காள்பட்டியை சேர்ந்த சரவணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் போலீஸ்காரர், அவருடைய தோழி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    லெக்ணாப்பட்டி ஊராட்சியில் 650 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    கீரனூர்:

    லெக்ணாப்பட்டி ஊராட்சியில் 650 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கி, குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை குன்னண்டார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் கே.ஆர்.என்.போஸ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் தாயினிப்பட்டி கண்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குளத்தூர் ஆறுமுகம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    விராலிமலை:

    மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கடந்த 24-ந் தேதி 4 பேர் விராலிமலை தாலுகா நம்பம்பட்டி கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் நம்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அந்த நபரை சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அந்த 4 பேரை அழைத்து வந்த கார் டிரைவர் மற்றும் அவர்களது உறவினர் ஒருவருக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு நேற்று முன்தினம் நம்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இதேபோல் அரிமளம் ஒன்றியம் ராயவரம் அருகே உள்ள கே.செட்டிபட்டி ஊராட்சி ஆனைவாரி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மும்பை சென்று திரும்பினார். மருத்துவ குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்விற்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை ஆனைவாரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைத்து தனிமைப்படுத்தினார்கள். ஆய்வு முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புதுக்கோட்டையில் செயல்படும் கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    1-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் விசைப்படகுகள், வலைகளை சீரமைத்து வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    மீன்வளத்தை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் கடலில் குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடி தடை காலம் அமலாகும். அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதியான தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தமிழக அரசு மீனவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியது. என்றாலும் கடலுக்குள் செல்ல அனுமதித்தால்தான் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுபற்றி மத்திய அரசிடம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மீன்பிடி தடை காலத்தை முன்கூட்டியே முடிக்க கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று மீன்பிடி தடைகாலத்தை மாற்றியமைத்து மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்பிடி தடை காலம் ஜூன் 14-ந் தேதிக்கு பதில் வருகிற 31-ந் தேதியே முடித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது மீன்பிடி தடை கால அளவு 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைந்துள்ளது. இதனால் தமிழகம் உள்பட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜூன் 1-ந்தேதி முதல் கடலுக்குள் செல்லலாம். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் ஜூன் 1-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 650 விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

    மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களது விசைப்படகுகளை மீன்பிடி தளங்களில் நிறுத்தியுள்ளனர். ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்கள் மூலம் கடலில் மீன் பிடித்து வரும் பெரும்பாலான மீனவர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.

    மீன்பிடி தடையால் அவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு திரும்பினர். ஏப்ரல் 14-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் அதற்கு முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் மிக வும் பாதிக்கப்பட்டது.

    மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகளை சீரமைப்பது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் மேற்கொள்வார்கள். ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்துள்ளதால் படகுகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    எப்போதும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து சீரமைப்பு பணிகளைத் தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்தாண்டு மே மாத இறுதியில்தான் சீரமைப்பு பணிகளை தொடங்கினர்.

    தற்போது 1-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் விசைப்படகுகளை விரைவாக தயார்படுத்தி வருகின்றனர். வலைகளை சீரமைத்து வருகின்றனர். மீனவர்கள் கூறுகையில், தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை இந்த ஆண்டு கூடுதலாக வழங்க வேண்டும் என்றனர்.

    விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் வரத்து குறைந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் முதல் மீன் பிடிக்க செல்ல உள்ளதால் மீன்களின் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது.

    ×