என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ஜாகீர் உசேன் (வயது 38). இவர் வல்லத்திராகோட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை தாக்கியதாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குடும்ப தகராறில் ஜாகீர் உசேன் தனது மனைவி பர்வீனை தாக்கியதாகவும், மாமனாரை அரிவாளால் வெட்டியதாகவும் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலும் போலீஸ்காரர் ஜாகீர் உசேனை கணேஷ்நகர் போலீசார் கைது செய்தனர். கைதான அவரை திருச்சி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கிடையே போலீஸ்காரர் ஜாகீர் உசேன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த வித்யா(வயது 13) கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக அவளது தந்தை பன்னீர் (41), உறவினர் குமார் ஆகியோரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்தனர். குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவையை சமாளிக்க பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு வித்யாவை, பன்னீர் நரபலி கொடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தியை (46) போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான அவரிடம் இருந்து ஒரு கார், செல்போன், மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய், கருப்பு மை, வெள்ளி தாயத்து, வெள்ளி ருத்ராட்ச மாலை, பாசி மாலை, 13 கோழிகள், 56 பக்கம் கொண்ட மாந்திரீக கையேடு, எரித்த மரத்துண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைதான மந்திரவாதி வசந்தி பற்றி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
மந்திரவாதி வசந்தி வசியம் செய்வதை தொழிலாக கொண்டு செயல்பட்டுள்ளார். பிறரை முடக்குவது, தொழில்களில் நஷ்டமடைய செய்வது, கை, கால்களை இழக்க வைப்பது, பெண்களை ஆண்களுக்கு வசியம் செய்ய வைப்பது உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு செயல்பட்டுள்ளார். ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வசியம் செய்வாராம். அவரிடம் இருந்து பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படங்கள் நிறைய கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்களில் உள்ளவர்களை தனது மாந்திரீகம் மூலம் வசியம் செய்துள்ளார்.
பெண் மந்திரவாதியுடன் பன்னீருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. நீண்டநாட்களாக தொடர்பில் இருந்ததால் தனக்கு பணத்தேவையை தீர்க்க ஆலோசனை கேட்டபோது நரபலி விவரத்தை கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்டுள்ளாள். இதேபோல் வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனரா? என்பது புலன் விசாரணையில் உள்ளது. வெவ்வேறு ஊர்களிலும் இதேபோல மாந்திரீக தொழிலில் மந்திரவாதி வசந்தி வசியம் செய்துள்ளார். மந்திரவாதி வசந்தியை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், 8 தனிப்படைகளை அமைத்து நேரடி விசாரணையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான வசந்தியை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு நடைகள் சாத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கோவில்களை 8-ந் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்படுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் தடை தொடருகிறது.
இதற்கிடையே மத்திய அரசு கோவில்களை திறக்க அனுமதி அளித்திருந்ததால் நேற்று புதுக்கோட்டையில் கோவில்கள் திறந்திருக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று தரிசனம் செய்ய பக்தர்கள் சிலர் வந்திருந்தனர். ஆனால் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை தொடருவதாக கோவில் தரப்பில் தெரிவித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். கோவில் நுழைவுவாயில் அருகே வாசலில் நின்று அம்மனை வேண்டி வழிபாடு நடத்தினர். மேலும் கோவில் முன்பு உள்ள சூலாயுதத்திற்கு மாலை அணிவித்து, சூடம் மற்றும் விளக்கேற்றி வழிபட்டனர்.
கோவிலையொட்டி உள்ள தேங்காய், பழம், பூக்கடைகள் திறந்திருந்தன. கோவில் நடை திறக்கப்படாததால் பக்தர்கள் அதிகம் வரவில்லை. பூ மாலைகளை கட்டி வைத்திருந்த கடைக்காரர்கள், பக்தர்கள் வருகையை எதிர்பார்த்திருந்தனர்.
இதேபோல் பிரகதாம்பாள் கோவில், சாந்தாரம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஆண்டாள் கோவில், கொன்னையூர் முத்து மாரியம்மன் கோவில் உள்பட பிரசித்தி பெற்ற கோவில்களும் திறக்கப்படவில்லை. ஆகம விதிகளின் படி பூஜை மட்டும் நடந்து வருகிறது. இதேபோல மற்ற வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதித்த மக்களிடம் கடன்களை திருப்பிக்கேட்டு நிதி நிறுவனங்கள் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடனை கட்ட மத்திய மாநில அரசுகள் அவகாசம் வழங்கிய பிறகும் மக்களை துன்புறுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் வரும் ஜூன் 9ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகளும் இணைந்து நிதி நிறுவனங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.
09.06.2020 அன்று நடைபெற உள்ள போராட்டத்தின் சுவரொட்டியை நேற்று இரவு ஒட்டும்போது அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல்துறை.
இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று சென்று முறையிட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் தனிப்பிரிவு அலுவலகத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டரிடம் போராட்டத்தின் கோரிக்கையின் உண்மை நிலைகளை எடுத்து உரைத்தார்கள்..
அப்போது பொது இடத்தில் சுவரொட்டி ஒட்டுவது குற்றமான செயல் அதனால் உங்களை தடுத்து நிறுத்தினோம் என்று சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

இந்நிலையில் திட்டமிட்டபடி அறிவித்த 9ம் தேதியில் போராட்டம் நடைபெறுமென்று அனைத்துக் கட்சிகளும் உறுதிபட தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் மற்றும் மக்களுக்கான போராட்டக்களத்தில் திருநங்கைகளும் களமிறங்குகிறார்கள் என்று போராட்டக்காரர்கள் உறுதியாக தெரிவித்தார்கள்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் (வயது52) மற்றும் இளையராஜா(32).
உறவினர்களாகிய இவர்களிடையே குடும்பதகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்பினர்க்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் மோதிக்கொண்ட னர். இதில் இளையராஜா மற்றும் சுப்பிரமணியன்ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துஇரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்தோஷ், கார்த்திகாதேவி, வைஷ்ணவி, கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்துச் செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு அறிவித்த பொது முடக்கம் முழு தோல்வி அடைந்து விட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு விவகாரத்தில் தமிழக அரசு சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. தற்போதைய இக்கட்டான சூழலில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயமாக தேவையில்லை. இது மாணவர்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
புதுக்கோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 21-ம் நூற்றாண்டு கால கட்டத்திலும் இது போன்ற மூடநம்பிக்கைகள் நடப்பது வேதனை அளிக்கிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்களையும் ஈடுபட தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோதிமணி விவகாரத்தில் நான் உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளோம். என்னைப் பொறுத்தவரையில் டி.வி. விவாதத்தில் பங்கேற்பது தேவையற்றது.
கேரளாவில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி குண்டு வைத்து கொடுத்ததாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந் தப்பட்ட நபர்கள் மீது விலங்குகள் நலவாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசுடன் தமிழக அரசு நட்புறவுடன் உள்ளது. எனவே தமிழகத்திற்கு தேவையான நிதியை அவர்களே கேட்டு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதியை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு எந்தவித நிதியையும் வழங்கவில்லை என்றார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன்(வயது 60). இவர் வன்னியம்பட்டியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜம்மாள்(55). இவர்களுக்கு 2 மகள்களும், ரமேஷ்(28) என்ற மகனும் உள்ளனர். ரமேஷ், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், வன்னியம்பட்டியை சேர்ந்த பிரதீபாவுக்கும்(23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தீயில் உடல் கருகிய நிலையில் ராஜம்மாள் கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த வல்லத்திராகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரதீபாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜம்மாள் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், ராஜம்மாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் பேசுவதை தடுத்ததாகவும், அதனால் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும், பிரதீபா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து வல்லத்திராகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்பாள் வழக்குப்பதிவு செய்து பிரதீபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாமியாரை எரித்துக்கொன்றதாக மருமகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் தைல மரக்காட்டில் 13 வயதான வித்யா கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிரடி திருப்பமாக அவளது தந்தை பன்னீர் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவைக்காக பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு, மகளை நரபலி கொடுத்ததாக போலீசாரிடம் பன்னீர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். பெற்ற மகளை தந்தை நரபலி கொடுத்தது போலீசாருக்கு மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசார் தங்களது புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த முருகாயி ஆகியோர் மீது கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த பெண் மந்திரவாதி உள்பட 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முருகாயி ஆகியோரை கைது செய்துள்ளனர்.






