search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோரம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்கள்.
    X
    சாலையோரம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்கள்.

    வடகாடு பலாப்பழங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின

    ஊரடங்கிலும் வடகாடு பலாப்பழங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கி விட்டன. கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    முக்கனிகளில் ஒன்றானது பலாப்பழம். தேன் போல சுவை மிகுந்த பலாப்பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. குற்றாலம், பண்ருட்டி ஆகிய இடங்களுக்கு அடுத்தப்படியாக புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, ஆலங்குடி பகுதியில் விளையக்கூடிய பலாப்பழங்கள் பெயர் பெற்றது. புதுக்கோட்டையில் இருந்து பக்கத்து மாவட்டங்களை சுற்றி விற்பனைக்காக இங்கிருந்து பலாப்பழங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலின்போது வடகாடு, ஆலங்குடி பகுதியில் பலா மரங்கள் பல முறிந்து விழுந்தன. சில மரங்களின் கிளைகள் முறிந்தன. அதன்பின் படிப்படியாக மரம் வளர்ந்து பழம் காய்க்க ஆரம்பித்தது.

    தற்போது கொரோனா எனும் கொடிய வைரசால் ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைந்த பலாப்பழங்கள் விற்பனைக்காக வெளியூர் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் பழங்களை விற்பனை செய்ய முடியாமல் வீணாகின. இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் விற்பனைக்காக பலாப்பழங்கள் கடந்த ஓரிரு நாட்களாக அதிகமாக வரத்தொடங்கி உள்ளன.

    கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருவப்பூர் செல்லக்கூடிய சாலையோரம் வடகாடு பலாப்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று வடகாட்டில் இருந்து பலாப்பழங்களை விற்பனைக்காக சரக்கு வேன்களில் தினமும் புதுக்கோட்டைக்கு விவசாயிகள் சிலர் கொண்டு வருகின்றனர்.

    ஊரடங்கால் தற்போது காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை பலாப்பழங்களை விற்பனை செய்துவிட்டு தங்களது ஊருக்கு திரும்பி விடுகின்றனர். பின்னர் மறுநாள் வியாபாரம் செய்ய வருகின்றனர்.

    மேலும் பலாப்பழங்களை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை காணும் பொதுமக்கள் வாயில் ருசி ஊறுகிறது. இதனால் சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தாலும் தங்களது வண்டியை நிறுத்தி விட்டு பலாப்பழத்தின் விலையை விசாரித்து விட்டு வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் பலர் முழுப்பழமாகவும், சிலர் பாதிப்பழம் எனவும், எடை கணக்கிலும் வாங்குகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.20 வரைக்கும் பலாப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆங்காங்கே பலாப்பழங்கள் சில்லரை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. சைக்கிளிலும் பலாப்பழத்தை வெட்டி சுவையாக விற்பனை செய்கின்றனர். இதனையும் மக்கள் வாங்கி ருசித்து சாப்பிடுகின்றனர்.

    ஊரடங்கில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறபோது பலாப்பழத்தை வெட்டி குடும்பத்தில் உள்ள அனைவரும் சுவைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பலாப்பழம் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். அதே நேரத்தில் விற்பனையாகாத பழத்தை திருப்பி எடுத்து சென்று மறுநாள் வரும்போது கொண்டு வருவதாக கூறினார்.

    Next Story
    ×