search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் உள்ள வீடுகளில் மாடியில் இருந்து பட்டம் விடுபவர்களை படத்தில் காணலாம்.
    X
    புதுக்கோட்டையில் உள்ள வீடுகளில் மாடியில் இருந்து பட்டம் விடுபவர்களை படத்தில் காணலாம்.

    144 தடை உத்தரவு எதிரொலி - வீட்டு மாடியில் இருந்து பட்டம் விட்டு பொழுதை கழிக்கும் மக்கள்

    144 தடை உத்தரவு எதிரொலியாக வீட்டு மாடியில் இருந்து வானில் பட்டம் விட்டு மக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தியேட்டர்கள், பூங்காக்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்துமே மூடப்பட்டு உள்ளது.

    மேலும் 144 தடை உத்தரவை மீறி சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு மாணவர்கள், குழந்தைகள் வீட்டில் உள்ள நிலையில் பெற்றோர்கள் அவர்களை சமாளிக்க என்னவெல்லாம் செய்வது என்று யோசித்து புதிய முறையில் பாரம்பரிய விளையாட்டுகளை தற்போது அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து விளையாட வைத்து வருகின்றனர்.

    குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டையில் பல்லாங்குழி, தாயம், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை சொல்லி கொடுக்கும் பெற்றோர்கள் தற்போது மாணவர்களின் எண்ண ஓட்டத்தை நன்றாக வைத்து கொள்ள பட்டம் செய்து மாலை நேரங்களில் வானில் பறக்க விடுகின்றனர். புதுக்கோட்டை காமராஜபுரம், கணேஷ்நகர் குடியிருப்பு, போஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் பட்டம் விட்டு மக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வானில் பட்டம் விட்டு வருகின்றனர். பேப்பர் மூலம் செய்யப்படும் பட்டம், நூல் மூலம் வானில் பறக்க விடப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் மாலை நேரத்தில் வீட்டு மாடிக்கு சென்று வானில் பட்டத்தை அக்கம் பக்கத்து வீடுகளுடன் போட்டி போட்டு கொண்டு பறக்க விட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டங்கள் மாலை நேரங்களில் வானில் பறப்பதால் பார்க்கவே ரசிக்கும் வண்ணம் உள்ளது.
    Next Story
    ×