search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
    X
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

    சட்டசபை தேர்தலில் ஆலங்குடியில் தி.மு.க.வை தோற்கடிப்போம்- மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகி பதிவால் பரபரப்பு

    கூட்டணி தர்மத்தை மீறியதால் சட்டசபை தேர்தலில் ஆலங்குடியில் தி.மு.க.வை தோற்கடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகி பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டு கடந்த 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்த முள்ள 25 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் தி.மு.க. வில் 14 பேர், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவர் என தி.மு.க. கூட்டணியில் 17 பேர் வெற்றிபெறுள்ளனர். அ.தி.மு.க.வில் 6 பேரும், 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதில் தி.மு.க. கூட்டணியில் 15-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கரிகாலன் போட்டியிட்டார். ஆனால் தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட தி.மு.க. பிரமுகர் கருப்பையா வெற்றி பெற்றுள்ளார். இது தி.மு.க. கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை உறுதி செய்யும் விதமாக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.

    அதில், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தோர் சார்பில் மாவட்டத்தில் 26 இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை நாங்கள் திரும்ப பெற்றோம்.

    ஆனால் எங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் (15-வது வார்டில்) கருப்பையா என்ற போட்டி வேட்பாளரை நிறுத்தி, அவருக்கு ஆதரவாக தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி செயல்பட்டு 250 வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

    சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு கூட்டணி தர்மத்தை கொலை செய்த தி.மு.க.வுக்கு 2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் தோல்வியை பரிசாக அளிப்போம் என கவிவர்மன் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×