search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு முத்தரையர் சமூக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்ற காட்சி.
    X
    தமிழ்நாடு முத்தரையர் சமூக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்ற காட்சி.

    அபர்ணா கொலை வழக்கு- குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து உண்ணாவிரதம்

    அபர்ணா கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு முத்தரையர் சமூக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கலைக்குமாரின் மகள் அபர்ணா (வயது 14) என்ற மாணவி கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து கணே‌‌ஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அபர்ணா கொலை வழக்கில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததை கண்டித்தும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட அபர்ணா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முத்தரையர் சமூக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று புதுக்கோட்டை திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். இதில் தமிழ் மாநில முத்தரையர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆண்டியப்பன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். இதில் மாணவியின் தந்தை கலைக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், மாணவி அபர்ணாவின் கொலைக்கு நீதி கிடைக்காவிட்டால், வருகிற உள்ளாட்சி தேர்தலை தங்கள் சமூக மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க போவதாக கூறினார்.
    Next Story
    ×