search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்தபடம்
    X
    பெண்ணுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்தபடம்

    உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம்

    உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக விராலிமலையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 2522 மனுக்கள் பெறப்பட்டு அதில் 841 மனுக்களுக்கு உடனடி தீர்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, விராலிமலை புதிய பஸ் நிலையத்தில் ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மேற்கூரை திறப்பு, கல்குடி பிரிவு சாலை உள்ளிட்ட 10 இடங்களில் தலா ரூ.5 லட்சம் செலவில் 10 இடங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய எல்.இ.டி. உயர்கோபுர மின்விளக்குகள் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று விராலிமலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பஸ் நிலைய மேற்கூரை மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது-

    விராலிமலை தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன்படி விராலிமலை முருகன் கோவிலுக்கு வெள்ளி ரதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மலை மீது நேரடியாக வாகனங்கள் செல்லும் வகையில் ரூ.4 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து ‘லிப்ட்' அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையான காவிரி-குண்டாறு உபரிநீர் இணைப்பு திட்டம் ரூ.7 ஆயிரத்து 673 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் செழித்து பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். மேலும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்பான செயல்பாட்டால் உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 5-வது முறையாக தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது என்று கூறினார்.

    இதில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை ஒன்றியகுழு முன்னாள் துணைத்தலைவர் திருமூர்த்தி, விராலிமலை அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், தாசில்தார் சதீ‌‌ஷ்சரவணக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமே‌‌ஷ், ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×