search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசர்
    X
    திருநாவுக்கரசர்

    இலங்கை தமிழர் பாதுகாப்பை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்- திருநாவுக்கரசர்

    ராஜபக்சே சகோதரர்கள் பொறுப்பேற்றுள்ளதால் இலங்கை தமிழர் பாதுகாப்பை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுப்பதற்கு புதுக்கோட்டையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை திருநாவுக்கரசர் எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகராஷ்டிரா மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்த பிறகு தனது கோரப்பசியின் காரணமாக ஒரு கட்சியை பா.ஜ.க. உடைத்து ஆட்சி அமைத்துள்ளது கண்டனத்துக்குரியது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர் பதவிகள் நேரடித் தேர்தல் என்று தமிழக முதல்வர் கூறிவந்த நிலையில் திடீரென்று மறைமுகத்தேர்தல் என்று அறிவித்துள்ளது அவர்களது குழப்பம் மற்றும் பயத்தை காட்டுகிறது.

    நேரடித் தேர்தல் வைத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்பதற்காக மறைமுக தேர்தல் நடத்தி கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி தலைவர் பதவியை பிடிக்கலாம் என்ற நப்பாசையில் தமிழக அரசு இது போன்ற நிலையை எடுத்துள்ளது.

    தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடப்பது கிடையாது.

    இலங்கையில் தற்போது அதிபராகவும், பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ராஜபக்சே சகோதரர்கள், கடந்த காலங்களில் தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள். தற்போது அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய அரசு தொடர்ந்து இது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    அதிமுக

    இடைத்தேர்தல் வெற்றியை கணக்கிட்டு அ.தி.மு.க. அரசுக்கு செல்வாக்கு மிகுந்து உள்ளது என்று கருத முடியாது. பொதுத்தேர்தல் நடந்த பிறகுதான் அ.தி.மு.க.வின் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ளமுடியும்.

    விடுதலைப்புலிகள் வளர்வதற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் உதவி செய்தார்கள் என்பது அது ஒரு சகாப்தம். ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு மக்களும் சரி, அரசியல் கட்சித் தலைவரும் சரி அங்கீகரிக்கவில்லை. தற்போது விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நீர்த்துப் போயுள்ளதாக யாரும் நினைக்க முடியாது. உலக அளவிலும் தமிழகத்திலும் அவருடைய ஆதரவாளர்கள் இருக்கலாம்.

    தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை ஒரு காலத்தில் வைத்துக்கொள்ள பயந்தனர். ஆனால் தற்போது பலரும் அவருடைய படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொள்கின்றனர். அதனால் விடுதலை புலிகள் ஆதிக்கம் நீர்த்துப் போய்விட்டது என்று கூற முடியாது

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளிவருகிறதா? இல்லையா? என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய இறப்பு குறித்த சந்தேகம் இன்னும் மர்மங்களாகவே உள்ளன. இதுகுறித்து கவலைப்பட வேண்டிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கவலைப்படாமல் உள்ளனர். இதற்காக அமைக்கப்பட்ட குழு என்ன ஆனது என்றே தெரியவில்லை. திரைப்படம் வெளிவந்த பிறகு அது எவ்வளவு உண்மை உள்ளது, பொய் உள்ளது என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×