என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
சீர்காழி தாலுக்கா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கிறிஸ்து பேரவை மாநில துணை அமைப்பாளர் தலித்தாஸ், ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து தாண்டவன்குளம், மாதானம், புதுப்பட்டினம், பட்டவிளாகம், காரைமேடு, நாங்கூர், இளையமதுகூடம் ஆகிய ஊர்களில் கட்சி கொடி கம்பத்தை சேதபடுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும், ஆதி திராவிடர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வததை தவிர்க்க வேண்டும், சீர்காழி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்கவேண்டும், விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு வழங்கவேண்டிய பயிர்காப்பீட்டு தொகையினை வழங்கவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கை விட வேண்டும், கொள்ளிடம் ஆறு மற்றும் சீர்காழி உப்பனாறு உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணை அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலு குணவேந்தன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், இளம் சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் அன்புசெல்வன், மகளிரணி நிர்வாகி ஞானவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார்.
மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் நெய்வாசல் கிராமத்தில் தில்லை மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கரக உற்சவம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நேற்று மாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது வாணவெடிகள் வெடிக்கப்பட்டது. அதில் ஒரு வாண வெடி எதிர்பாராதவிதமாக பக்தர்கள் கூட்டத்தில் விழுந்து வெடித்தது.
இதில் மாப்படுகையை சேர்ந்த சிலம்பரசன் மகள் பாவனா (2), ராஜேஷ், புவனேஸ்வரி, செல்வராஜ், செல்வா, துரைராஜ் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். பக்தர்கள் கூட்டத்தில் வாணவெடி விழுந்து காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழகம் முழுவதும் வறட்சி காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டாஸ்மாக் கடைக்கு எதிராக அதிகளவில் பெண்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பெண்கள் மீது தடியடி நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்குவதை கைவிட்டு, தமிழக அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். மேலும், புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதை கைவிட வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ஒப்பந்ததாரர் சேகர்ரெட்டி மட்டுமே எடுத்துள்ளார். தமிழகத்தில் சேகர்ரெட்டியை தவிர ஒப்பந்ததாரர்கள் வேறு யாரும் இல்லையா?, நாகையை அடுத்த வேட்டைக்காரனிருப்பு பகுதியில் கடல்நீர் விளை நிலங்களுக்குள் புகாமல் இருக்க தடுப்பணை அமைப்பதாக கூறி கட்டப்படுகிறது. ஆனால் இந்த தடுப்பணை அதற்காக கட்டவில்லை. இறால் பண்ணைகளுக்கு சாதகமாகவே கட்டப்படுகிறது. வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2015-16-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. பெரும்பான்மை இருந்தும் தமிழக அரசு செயல்பட தயங்குகிறது. அதனால்தான் மத்திய அரசு மிரட்டுகிறது. தமிழக அரசு மிரள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொது மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநிர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடுவதால் பலர் குடிநீர் கிடைக்காமல் அவதிபட்டனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுப்பபடவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆயக்காரபுலம் 2-ம் சேத்தி பகுதி பொது மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை கண்டறிந்து அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக குடிநீர் திருடியவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இதை தொடர்ந்து அங்கு தொழிலாளர்கள் வரவழைக்கபட்டு குடிநீர் திருடும் மின் மோட்டார்கள் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை கண்ட பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை காடம்பாடி மகாலட்சுமிநகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேசமணி (வயது21). இவருடைய மனைவி வினிதா. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சொக்கத்தங்கம் மனைவி சத்தியாவும், வினிதாவும் தோழிகள். இவர்கள் எங்கு போனாலும் ஒன்றாக சென்று வந்துள்ளனர். இது நேசமணிக்கு பிடிக்காததால், சத்தியாவுடன் வெளியில் செல்லக்கூடாது என்று மனைவியை கண்டித்தார். இதனால் வினிதா, சத்தியாவுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார்.
இது குறித்து சத்தியா தனது குடும்ப நண்பரான அதே பகுதியை சேர்ந்த மீனவரான கவியரசன் (35) என்பவரிடம் தெரிவித்தார். இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியாவுடன், வினிதாவை ஏன் பழக கூடாது என கண்டிக்கிறாய் என்று கேட்டு கவியரசன், நேசமணியிடம் தகராறு செய்தார். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவியரசனுக்கும், நேசமணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து கவியரசன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நேசமணி, அவருடைய அண்ணன் ரூபன் (23) மற்றும் நண்பர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் சண்முகம் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து கவியரசனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கவியரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவியரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பியான நேசமணி, ரூபன் மற்றும் சண்முகம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் இருந்து சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறை புஷ்பவனம் வெள்ளப் பள்ளம் வானவன்மகாதேவி கோடியக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் ஆறுகாட்டுத் துறையிலிருந்து நேற்று காலை சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த மணி(20) ராமன் (43) செல்வம்(40) குமரன்(28) குணசீலன்(38) ஆகிய 5 பேரும் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் இன்று காலை திரும்பி இருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை கரை திரும்பவில்லை. காற்று பலமாக வீசியதால் படகு கவிழ்ந்ததா? அல்லது திசை மாறி சென்றறார்களா என்று தெரியமால் உறவினர்கள் பதற்றமடைந்நுள்ளனர்.
மாயமான 5 மீனவர்களையும் தேடும் பணியில் சக மீனவர்கள் 6 படகில் கடலுக்குள் சென்றுள்ளனர். 5 மீனவர்கள் மாயமானது ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் மிகுந்த சோகத்தை பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் தற்போது சூறை காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. தாழ்வான பகுதியில் கடல் நீர் புகுந்துள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி, கடினவயல், தென்னடார் ஆகிய இடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.
கடல் சீற்றம் மற்றும் சூறை காற்று காரணமாக இன்று 3-வது நாளாக பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
ஒரு சில மீனவர்கள் தான் சென்று உள்ளனர். அவர்களும் குறைந்த அளவு மீன்களையே பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூரை அடுத்த அன்னியூர், ஆயனதாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது60). இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த கருணாநிதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள பள்ளவாய்க்கால் பகுதிக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டுள்ளார். இதை அறிந்த பக்கத்தில் இருந்தவர்கள் கருணாநிதியை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சேது சாலையை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது வீட்டில் மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 18 மான் கொம்புகள், நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மேலும் 2 பேரை வனத்துறையினர் தேடி வந்தனர். அவர்களில் வேம்ப தேவன்காடு பகுதியை சேர்ந்த சுனில் குமார் (37) என்பவரை வன அலுவலர் அயூப்கான், வனவர்கள் இளங்கோவன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
ஆண்டு தோறும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக 48 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. இதனால் பைபர் படகு மீனவர்கள் கடலில் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
வேதாரண்யம் ஆறு காட்டுத்துறை பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 29), இவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (20), டெனி (25) 3 பேர் இன்று அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களுடன் மற்ற மீனவர்களும் அவர்களது படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் அருள் முருகன் மீன்பிடித்துக்கொண்டிருந்த பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அப்போது கடலின் அலைகள் வேகமாக படகின் மீது மோதியதில் படகிற்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. படகில் வந்த 3 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்களை அந்த வழியாக மீன்பிடிக்க வந்த சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி, தென்பாதி சங்கர்நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). இவருடைய சகோதரர் ரமேஷ்பாபு. இவர்கள் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரமேஷ்பாபு வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் வீட்டில் இருந்த சீனிவாசனிடம் தான் சி.பி.ஐ. அதிகாரி என்றும், டெல்லியில் இருந்து வந்துள்ளதாகவும், ரமேஷ்பாபு மீது வந்துள்ள புகார்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே அவரை வரசொல்லுங்கள் என்று கூறியதுடன், சி.பி.ஐ. விசாரணையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன், சி.பி.ஐ. அதிகாரி என கூறிய மர்ம நபரை பிடித்துக்கொண்டு சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை செந்தாமரை நகரை சேர்ந்த கணேசன் (49) என்பதும், போலி சி.பி.ஐ. அதிகாரி என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






