என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவரது மகன் குணசேகரன். இவரது மகள் நித்யா. இவருக்கும் வேதாரண்யத்தில் உள்ள வனதுர்க்கையம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அன்சாரி- சரோஜா ஆகியோரின் மகன் முருகானந்தத்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் முதல் நித்யாவை காணவில்லை மாப்பிள்ளை வீட்டார் அணிவித்த 2 பவுன் செயின் மற்றும் ரூ.4000 ரொக்கம் காணவில்லை என்று நித்யாவின் தந்தை குணசேகரன் போலீசில் புகார் செய்துள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தாணி கோட்டகம் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் மகேந்திரன் (வயது 32). இவர் கடந்த 18-ந் தேதி கோடியம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் மீன்கள் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மீன்கள் பிடிப்பதற்காக குளத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.
குளத்தில் சேறும், சகதியும் உள்ளதால் குளத்தில் மூழ்கி மயங்கிவிட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் மகேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மகேந்திரனுக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த அன்பரசி சம்பவதன்று வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மாமியார் நாகம்மாள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வாய்மேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்திற்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் அட்டக்குளம் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் அருகில் இருந்த வாய்க்கால் பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயம் இன்றி தப்பினார்கள். பின்னர் அவர்கள் மாற்று பஸ் மூலம் சிதம்பரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் விளைநிலத்தில் கட்டப்பட்டு புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ம.க.வினர் கொண்டல் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் தேனூர் ரவிச்சந்திரன், கொண்டல் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் அருண்குமார், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிச்சாமி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
கொண்டல் கிராமம் குமாரக்குடி சாலையில் வள்ளுவக்குடி ஊராட்சிக்குட்பட்ட விளைநிலத்தில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. விளைநிலங்களில் டாஸ்மாக் கடையை கட்டி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். தற்பொழுது நெற்பயிர்கள் கதிர்வரும் தருவாயில் பயிர்களுக்கு உயிர்நீர் விடுவதற்கு தண்ணீர் இல்லை. ஆனால் பல குடும்பங்களின் குடியை கெடுக்க அரசு டாஸ்மாக் கடைகளை இப்பகுதியில் திறப்பதற்கு முயற்சிக்கிறது. இதனை அனுமதிக்க மாட்டோம்.
கொண்டல் பகுதியில் கால்நடை துறை, நெல் கொள்முதல் நிலையம், மின்வாரிய துணை மின்நிலையம், அமைப்பதற்கெல்லாம் இடம் கிடைக்கவில்லை, டாஸ்மாக் கடை திறப்பதற்கு மட்டும் இடம் எங்கிருந்து வந்தது. கொண்டல் மேல்நிலைப்பள்ளிக்கு மிக அருகாமையிலும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மாணவர்களும், பெண்களும் மிகவும் அவதிக்குள்ளாவார்கள். தினந்தோறும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்துவிட்டு போகும் நிலை ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.
எனவே தமிழக அரசு வள்ளுவக்குடி ஊராட்சி குமாரக்குடி சாலையில் டாஸ்மாக் கடை திறப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார். இதனிடையே வள்ளுவக்குடி ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சீர்காழி ஈசானியத்தெரு டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி பெருந்திரள் போராட்டத்திற்கு கிராம பொதுமக்கள் ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முரளிராஜ், பாலு, தேனூர் காமராஜ், வைத்தீஸ்வரன்கோவில் நேதாஜி, சுசீந்திரன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியை சேர்ந்த காந்தி மகன் மதியழகன் (வயது33). இவர் வேளாங்கண்ணியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 8-ம் வகுப்பு மாணவி தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்தகாரம் செய்துள்ளார்.
இதுபற்றி மாணவியின் பெற்றோர் தலைஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிவு செய்து மதியழகனை கைது செய்தார். இந்த சம்பவம் தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகையில் அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பிறகு இதுவரை 29 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர்.
இந்த வங்கி கணக்குகளில் ரூ 65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் விபத்து காப்பீடு திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் 15.87 லட்சம் பேரும், நாகை மாவட்டத்ல் 1.73 லட்சம் பேரும் சேர்ந்துள்ளனர். ஆயுள் காப்பீடு திட்டத்தில் 3 கோடி பேர். தமிழகத்தில் 22.45 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடப்பாண்டு மத்திய அரசு ரூ. 10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து இருப்பார். கூடங்குளம் பிரச்சினையை அவர் ஒரு வாரத்தில் முடித்து வைத்தார்.
தமிழக முதல்-அமைச்சர் சரியாக செயல்படவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது42). மீனவர். இவர் கடந்த 14-ந் தேதி மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததையொட்டி தனது விசை படகில் மீன் பிடிக்க சென்றார். அவருடன் 14 பேர் சென்றனர்.
அவர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் ஆழ்கடல் பகுதியில் போடப்பட்ட வலையை இழுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முருகன் தவறி கடலில் விழுந்து விட்டார். இதனை பார்த்த சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை கரைக்கு கொண்டுவந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இன்று அவரது உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான முருகனுக்கு இந்திரா என்ற மனைவியும், அபிலாஷ், ஹரிதாஸ் என்ற மகன்களும் அபிநயா என்ற மகளும் உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக கலாப்பூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லங்கடாபுரத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர் ராம்ராஜ்மீனா (வயது 30) என்பவரை தேடி வந்தனர்.
இவர் நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் பதுங்கி இருப்பதாக ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலாப்பூரியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கர்தாசில் ஆகியோர் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்தானை சந்தித்து குற்ற வழக்கில் தொடர்புடைய ராம்ராஜ்மீனாவை கண்டுபிடித்து தர கேட்டுக் கொண்டனர். அதனையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து, ராம்ராஜ் மீனாவை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் சிவா, ராமமூர்த்தி, பாரதி ஆகியோர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் ராம்ராஜ்மீனா தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் சென்று ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பதுங்கி இருந்த ராம்ராஜ்மீனாவை கைது செய்து, ராஜஸ்தான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் ராம்ராஜ்மீனாவை அழைத்து சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் மகன் கதிநிலவன்(18), செல்வம் மகன் கேசவன்(25). இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் நெய்விளக்கு அண்டர்காடு இணைப்பு சாலையில் சென்றனர்.
அப்போது அவ்வழியே வந்த கார் மோதியதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த மீன்பிடி தடைக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டது.
இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்வது தடை செய்யப்பட்டது. அதேநேரம் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கச்செல்ல அனுமதிக்கப்பட்டன. தடைக் காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். நாட்டுப்படகுகள் மட்டுமே கடலுக்கு சென்று வந்ததால் மீன் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்தது.
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதைதொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு முன்பு நாகை கடுவையாறு மற்றும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் ஒருவாரம் தங்கி மீன்பிடிப் பதற்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவு பொருட்களை தயார் நிலையில் வைத்தனர். மேலும், மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் தேசிய கொடிகளை ஏற்றி பூஜைகள் செய்து, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
கீழ்வேளூர்:
கன்னியாகுமரியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ்வேளூர் அடுத்த ராமர் மடம் அருகே பஸ் சென்ற போது நாகையில் இருந்து திருச்சிக்கு மரத்தூள் ஏற்றி சென்ற லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் குமார் (வயது 30) மற்றும் பஸ்சில் பயணம் செய்த வேளாங்கண்ணியை சேர்ந்த ராபின்சன் (30), தூத்துக்குடி மாவட்டம் வகுத்தான் குப்பம் பகுதியை சேர்ந்த பீரில்ஸ் (31), அவரது மனைவி லியின் (21), அதே பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா (45), கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் (36), கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த யோகேஷ் (58), மார்த்தாண்டத்தை சேர்ந்த எலிசா (30) உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழ்வேளூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கதிராமங்கலம் கிராமத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை விரட்டிய போலீசாரை கண்டித்தும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒருநாள் பட்டினி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் கருத்துக்களை கேட்டு அதன்பின்புதான் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் கதிராமங்கலத்தில் மக்கள் கருத்துக்களை கேட்காமல் போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடைபெறுகிறது. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் பொதுமக்களை போலீசார் தாக்குகின்றனர். மீத்தேன் திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும். சோமாலியா, கம்போடியா போன்ற நாடுகள் மீத்தேன் திட்டத்தால் அழிந்து மனிதனை மனிதன் தின்னும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதுபோன்ற ஒருநிலை தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம்.
மீத்தேன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இனிவரும் காலங்களில் புரட்சிக்கர போராட்டத்தை தொடங்குவோம். மலேசியாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பப்பட்டது நாட்டிற்கு அவமானம்.
இவ்வாறு அவர் கூறினார்.






