search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்
    X

    சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்

    சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் விளைநிலத்தில் கட்டப்பட்டு புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ம.க.வினர் கொண்டல் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் விளைநிலத்தில் கட்டப்பட்டு புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ம.க.வினர் கொண்டல் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் தேனூர் ரவிச்சந்திரன், கொண்டல் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் அருண்குமார், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிச்சாமி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    கொண்டல் கிராமம் குமாரக்குடி சாலையில் வள்ளுவக்குடி ஊராட்சிக்குட்பட்ட விளைநிலத்தில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. விளைநிலங்களில் டாஸ்மாக் கடையை கட்டி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். தற்பொழுது நெற்பயிர்கள் கதிர்வரும் தருவாயில் பயிர்களுக்கு உயிர்நீர் விடுவதற்கு தண்ணீர் இல்லை. ஆனால் பல குடும்பங்களின் குடியை கெடுக்க அரசு டாஸ்மாக் கடைகளை இப்பகுதியில் திறப்பதற்கு முயற்சிக்கிறது. இதனை அனுமதிக்க மாட்டோம்.

    கொண்டல் பகுதியில் கால்நடை துறை, நெல் கொள்முதல் நிலையம், மின்வாரிய துணை மின்நிலையம், அமைப்பதற்கெல்லாம் இடம் கிடைக்கவில்லை, டாஸ்மாக் கடை திறப்பதற்கு மட்டும் இடம் எங்கிருந்து வந்தது. கொண்டல் மேல்நிலைப்பள்ளிக்கு மிக அருகாமையிலும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மாணவர்களும், பெண்களும் மிகவும் அவதிக்குள்ளாவார்கள். தினந்தோறும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்துவிட்டு போகும் நிலை ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.

    எனவே தமிழக அரசு வள்ளுவக்குடி ஊராட்சி குமாரக்குடி சாலையில் டாஸ்மாக் கடை திறப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார். இதனிடையே வள்ளுவக்குடி ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சீர்காழி ஈசானியத்தெரு டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி பெருந்திரள் போராட்டத்திற்கு கிராம பொதுமக்கள் ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முரளிராஜ், பாலு, தேனூர் காமராஜ், வைத்தீஸ்வரன்கோவில் நேதாஜி, சுசீந்திரன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×