என் மலர்
செய்திகள்

நாகை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பலி
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது42). மீனவர். இவர் கடந்த 14-ந் தேதி மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததையொட்டி தனது விசை படகில் மீன் பிடிக்க சென்றார். அவருடன் 14 பேர் சென்றனர்.
அவர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் ஆழ்கடல் பகுதியில் போடப்பட்ட வலையை இழுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முருகன் தவறி கடலில் விழுந்து விட்டார். இதனை பார்த்த சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை கரைக்கு கொண்டுவந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இன்று அவரது உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான முருகனுக்கு இந்திரா என்ற மனைவியும், அபிலாஷ், ஹரிதாஸ் என்ற மகன்களும் அபிநயா என்ற மகளும் உள்ளனர்.






