என் மலர்
செய்திகள்

கீழ்வேளூர் அருகே பஸ்-லாரி மோதல்: வேளாங்கண்ணி சென்ற 13 பேர் படுகாயம்
கீழ்வேளூர்:
கன்னியாகுமரியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ்வேளூர் அடுத்த ராமர் மடம் அருகே பஸ் சென்ற போது நாகையில் இருந்து திருச்சிக்கு மரத்தூள் ஏற்றி சென்ற லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் குமார் (வயது 30) மற்றும் பஸ்சில் பயணம் செய்த வேளாங்கண்ணியை சேர்ந்த ராபின்சன் (30), தூத்துக்குடி மாவட்டம் வகுத்தான் குப்பம் பகுதியை சேர்ந்த பீரில்ஸ் (31), அவரது மனைவி லியின் (21), அதே பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா (45), கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் (36), கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த யோகேஷ் (58), மார்த்தாண்டத்தை சேர்ந்த எலிசா (30) உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழ்வேளூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






