என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் நகர செயலாளரை தாக்கிய சீர்காழி நகர தேமுதிக. செயலாளர் கைது செய்யப்பட்டார்.
    சீர்காழி:

    சீர்காழி ரெயிலடி தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது40). தே.மு.தி.க. நகர செயலாளராக உள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு இன்று மாலை பிரேமலதா விஜயகாந்த மயிலாடுதுறை பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். 

    இதன் தொடர்பாக நேற்று மாலை சீர்காழியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் செந்தில் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இது குறித்து மாவட்ட செயலாளர் கேட்டபோது முறையான எந்த தகவலும் கூறாமல் தாமதம் பற்றி எப்படி கேட்கலாம் என்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது அங்கிருந்த சீர்காழி கோவிந்தராஜ் நகரை சேர்ந்த மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சேகர்(48), வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்திலை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நகர செயலாளர் செந்தில், சேகரை தாக்கியுள்ளார்.

    இது குறித்து சீர்காழி போலீசில் சேகர் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகர செயலாளர் செந்திலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வேதாரண்யம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர் விஜயகுமார்(வயது30). அதே ஊரை சேர்ந்த காளியப்பன் (45), செல்வராஜ் (55), விஜி (38) ஆகிய 4 பேரும் ஆறுமுகம் என்பவருக்கும் சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். வெள்ளபள்ளம் கடற்கரையில் இருந்து 6 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது விஜயகுமார் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமானார். இதை பார்த்த சக மீனவர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி வந்தனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விஜயகுமாரை தேடும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    வேளாங்கண்னி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் அத்தை-மருமகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகேசன் (வயது 26) மீனவர். இவரது அத்தை மணிமேகலை (60). நேற்று மணிமேகலையும் முருகேசனும் மோட்டார் சைக்கிளில் வெள்ள பள்ளம் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வேளாங்கண்ணி அருகே செருதூர் பாலம் அருகில் வந்தபோது சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன், மணிமேகலை இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    படுகாயமடைந்த மணிமேகலையை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிமேகலையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    முன்னதாக விபத்து நடந்த இடத்தை பார்வையிட வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கிய முருகேசனை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்ப வில்லை என்று கூறி நம்பியார் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் சேர்ந்து செல்லூர் பாலம் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொள்ளிடம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மகள் சங்கீதா (வயது 40). இவர் கணவனை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கொள்ளிடம் அருகே சாமியம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சங்கர் (36) என்பவருக்கும், சங்கீதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கருக்கு திருமணமானது. அதன்பின்னரும் சங்கர், சங்கீதா ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கீதா வீட்டிற்கு சங்கர் சென்றார். அப்போது 2 பேருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே சங்கீதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
    வேதாரண்யம் அருகே வயிற்று வலி காரணமாக 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம் காவல் சரகம் கத்தரிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ராதிகா (வயது 25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை, 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    ராதிகா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    கீழ்வேளூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    நாகப்பட்டினம்:

    நாகை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருக்குவளை தாசில்தார் இளங்கோவன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நாகை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்ற ஒரு வேனை மடக்கி சோதனை செய்தனர்.

    அப்போது பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி கீழ்வேளூர் தாசில்தார் கபிலனிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியின் காதில் வி‌ஷம் ஊற்றி மீனவர் கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது55). மீனவர் இவருடைய முதல் மனைவி மல்லிகா 2004- ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு ஆறுமுகம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த செல்வி(40) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக செல்வி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி ஆறுமுகத்துக்கும் செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் நோயால் அவதிப்படும் உனக்கு என்னால் அடிக்கடி மருத்துவச் செலவு செய்ய முடியாது என கூறி செல்வியின் காதில் வி‌ஷத்தை ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதில் உயிருக்கு போராடிய செல்வியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மனைவியின் காதில் வி‌ஷம் ஊற்றி மீனவர் கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குளத்தில் மூழ்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி பூவன்தோப்பை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவருடைய மகன் மணிமாறன்(வயது3). இவரது வீட்டின் அருகே குளம் உள்ளது.

    நேற்று மாலை குருமூர்த்தியின் மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த மணிமாறன் அருகே உள்ள குளக்கரைக்கு சென்று குளத்தில் இறங்கினான். இதை யாரும் கவனிக்கவில்லை. இதனால் குழந்தை மணிமாறன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். சிறிது நேரம் கழித்து மகனை காணாமல் தவித்த குருமூர்த்தியின் மனைவி மகனை அனைத்து இடங்களிலும் தேடினார். ஆனால் மணிமாறன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் அருகே உள்ள குளத்தில் ஒரு குழந்தை உடல் மிதப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குரு மூர்த்தியின் மனைவி மற்றும் உறவினர்கள் குளத்துக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது குளத்தில் குழந்தை மணிமாறன் பிணமாக மிதந்து கொண்டிருந்தான். குழந்தையின் உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்திய அரசிடம் தமிழக அரசை குறைந்த விலையில் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது. அதனை மீட்க வேண்டும் என்று கி. வீரமணி பேசியுள்ளார். #veeramani #tngovt #federalgovernment

    நாகப்பட்டினம்:

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை அவரி திடலில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் இருக்கக் கூடிய ஆட்சியை  காலி செய்ய நேரம் வந்துவிட்டது. மத்திய அரசிடம் தமிழக அரசை குறைந்த விலையில் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது. தமிழ் நாட்டை மீட்கவும், இந்தியாவை காக்கவும் அனைத்து மக்களும் மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    மோடி வித்தைக்கு முடிவு கட்டுவதற்குதான் இந்த தேர்தல் வந்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2017-2018 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரூ,4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நடக்காது.

    வறட்சி உள்ளிட்ட பிரச்சினையால் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டு 2015-ம் ஆண்டில் 12,602 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 2016 - ம் ஆண்டு கணக்கெடுப்பில் 16,400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல்கள் நடக்காது. இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும் .

    இவ்வாறு அவர் கூறினார். #veeramani #tngovt #federalgovernment

    மயிலாடுதுறையில் மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை வேதன் பிள்ளை காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கொத்தனார். இவரது மனைவி லலிதா (28). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுரேஷ், அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வாராம்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் மகளிர் குழு நிறுவனத்திடம் லலிதா ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக தெரிகிறது.

    இதற்கிடையே கணவர் சுரேசுக்கு , கடந்த சில நாட்களாக வேலை சரிவர இல்லாததால் வருமானம் இல்லாமல் இருந்து வந்தார். இதனால் மகளிர் குழுவுக்கு கட்ட வேண்டிய கடன் தவணையை லலிதாவால் கட்டமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மகளிர் குழுவை சேர்ந்த சிலர் , லலிதா வீட்டுக்கு வந்தனர். கடன் தவணை பணம் கட்டாததால் லலிதாவை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    பிறகு அவரை வீட்டு வாசலில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது லலிதாவை போட்டோ எடுத்த போது அதை அக்கம்பக்கத்தினர் பார்த்ததால் அவர் மிகவும் அவமானம் அடைந்தார்.

    தாய் லலிதாவை இழந்து தவிக்கும் குழந்தைகள்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லலிதா, அதே பகுதியில் உள்ள தனது தாய் முருகேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு திடீரென மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் அலறி கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி லலிதாவின் தாய் முருகேஸ்வரி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லலிதா தற்கொலை செய்து கொண்டதால் அவரது 3 வயது மகளும், 6 மாத ஆண் குழந்தையும் அனாதையாகி விட்டனர். தாயை இழந்த 2 குழந்தைகளையும் பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது.
    சீர்காழியில் பெட்ரோல் டோக்கன் வினியோகம் செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #ADMK

    சீர்காழி:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வினர் சீர்காழியில் பிரசாரம் செய்தனர்.

    இந்த நிலையில் சீர்காழியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கட்சி கொடிகளுடன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் பறக்கும்படை மண்டல துணை தாசில்தார் சுவாமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு நடத்தினர்.

    இதில்அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி பெயர் ரப்பர் ஸ்டாம்பு மூலம் அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100க்கு பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ.10 ஆயிரத்து 870-ஐயும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன்பேரில் போலீசார் அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்கள் தங்கராசு, தினேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #ADMK

    வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன்- கார் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தென்னார் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (வயது32), அவரது மனைவி சுகன்யா (26), இவர்களது குழந்தை மோஷிதா(7), ராஜா (35), அவரது மனைவி தேவி(28), பாலமுரளி (36) ஆகியோர் ஆம்னி வேனில் திருவண்ணாமலையில் இருந்து வேளாங்கண்ணி அருகே உள்ள காடன்தேத்தி அய்யனார் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை வந்தவாசி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி ஓட்டிவந்தார்.

    அப்போது நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி எதிரே வந்த கார் திடீரென ஆம்னி வேன் மீது மோதியது.

    இதில் பாலமுரளி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ஆம்னி வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரம் புதுமனை இரண்டாம் தெருவைசேர்ந்த பெரியண்ணா(51), பர்மா காலனியை சேர்ந்த கோதை (74), காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அனைவரையும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோதை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×