என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் மங்கநல்லூரில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
இதேபோல் கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு லோடு ஆட்டோவில் தங்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற வேன் இரவு 10.30 மணி அளவில் மங்கநல்லூர்-கோமல் சாலையில் உள்ள அனந்தநல்லூர் என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த கந்தமங்கலத்தை சேர்ந்த விநாயகராஜா (வயது 45), சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த அருள்தாஸ் (38), தனபால் (55) ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் பலியான 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 3 பேர் பலியான சம்பவத்தால் மங்கநல்லூர் கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினியை ஆதரித்து மயிலாடுதுறையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். மீத்தேன் திட்டத்தை தடுப்போம் என்கின்றனர்.
இத்திட்டம் கொண்டு வரப்பட்டது யாருடைய ஆட்சி காலத்தில்? கச்சத்தீவை மீட்போம் என்கின்றனர். கச்சத்தீவு பறிபோனது யாருடைய ஆட்சி காலத்தில்? கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என்கின்றனர். அது யாருடைய ஆட்சி காலத்தில் மத்திய பட்டியலுக்கு சென்றது? விவசாயக்கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்வோம் என்கின்றனர். விவசாயிகளையும், மாணவர்களையும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளியது யார்? என்பதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பதித்துள்ளனர். இதனால் நாங்கள் பொதுமக்களிடம் வாக்கு கேட்கும்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த சின்னம் மங்கலாக தெரிகிறதோ அந்த சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம். மக்கள் இந்த தேர்தலை மாற்றத்துக்கான தேர்தலாக பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Seeman
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியை சேர்ந்தவர் முருகரத்தினம் (வயது 30). தொழிலாளி. இவர் வாய்மேடு கடைத்தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாய்மேடு துணை மின் நிலையம் அருகே சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி முருகரத்தினம் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் கீழப்பிடாகையை சேர்ந்த அன்பழகன் மகன் ராஜ்குமார் (வயது 25) விவசாயி. நேற்று ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் பள்ளம் செம்பிய வேலூர் பகுதியை சேர்ந்த வேதையன் மகன் செந்தாமரை கண்ணன் (வயது 31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரையும், செந்தாமரை கண்ணனையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் செந்தாமரை கண்ணனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது மகள் வலங்கை தேவி (வயது 28) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சித்தமல்லி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் செந்தமிழ். இவர்கள் இருவரும் கடந்த 3-ம் தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தேதி அவர்கள் தங்கியிருந்த அறையை காலி செய்ய சொல்வதாக உதவி மேலாளர் சென்று பார்த்தபோது கதவை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வழங்கை தேவி மின் விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவருடன் வந்த செந்தமிழை காணவில்லை.
இதுகுறித்து உதவி மேலாளர் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வலங்கை தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பெண் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அங்கு வலங்கை தேவி கொண்டு வந்த பையில் அடையாள அட்டை இருந்தது. அதன் மூலம் அவர் ஆம்புலன்சில் உதவியாளராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வலங்கை தேவி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? வலங்கை தேவியுடன் வந்த செந்தமிழ் எங்கே சென்றார்? இருவரும் காதலர்களா? என்று விசாரணை செய்து வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கைலவணம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் பார்த்திபா (வயது 19). இவர் பி.இ. படித்துள்ளார்.
கடந்த 3-ந் தேதி காலை தமிழ்ச்செல்வியும், பார்த்திபாவும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைச்செல்வன், சரவணன், மாரிமுத்து, புகேழேந்தி, சுப்பிரமணியன், தங்கம்மாள், சங்கீதா, மாதவன் ஆகிய 8 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து பார்த்திபாவை கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் தடுத்துள்ளார். ஆனால் அவரை தள்ளிவிட்டு பார்த்திபாவை கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து தாயார் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ் பெக்டர் ஜெகதீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் ஆகியோர் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகூரை அடுத்த பனங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவர் கடந்த 2-ந் தேதி வாஞ்சூரில் உள்ள சாராயக்கடைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நாகூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கீழவாஞ்சூர் பகுதியில் சந்திரசேகர் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக குடித்து இறந்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளதால் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாகை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் திறந்த வேனில் நின்று பேசியதாவது:-
டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதித்த மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராடிய மக்களின் தலையில் இடி விழுகிற மாதிரி பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருக்கிறார் மோடி. நாகையில் 20, கடலூரில் 25 என மொத்தம் 45 இடங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு தாரை வார்த்து கொடுத்து இருக்கிறது.
கார்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டாக தமிழக அரசு மாறி விட்டது. கார்பரேட் கம்பெனிகளுக்கு மோடி அரசு ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கி இருக்கிறது. ரூ.8.42 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் கல்விக்கடனையும், பயிர் கடனையும் மோடி அரசு ரத்து செய்யவில்லை.
மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க கூடிய நெஞ்சுரம் இல்லாத அரசு, நீட் தேர்வை எதிர்க்க முதுகெலும்பில்லாத அரசு தமிழக அரசு. தற்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.
18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று தி.மு.க.வின் ஆட்சி மலரப்போகிறது. கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் சின்னாபின்னமானபோது மோடி நேரில் பார்வையிடவில்லை. டெல்டா மாவட்ட மக்கள் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவாரூர் பழைய பஸ் நிலைய பகுதியில் திருவாருர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட் பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் .நாகை பாராளுமன்ற வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.
அப்போது வைகோ பேசியதாவது:- திமுக சுட்டிக் காட்டிய அனைத்து அம்சங்களையும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது விவசாய கடன் தள்ளுபடி, 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72,000 போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இது சாத்தியமற்றது என பலரும் கூறுகின்றனர்.
ஆனால் திட்டமிட்டு செயல்படுத்தினால் சாத்தியப் படும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒரு அனுதாபம் கூறியிருக்கிறாரா? 89 பேர் பலியானார்கள். அவர்களுக்கு ஒரு ஆறுதல் கூறினாரா? இவை வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி தாய் நாட்டிற்கு வர முடியாதா
இவ்வாறு வைகோ பேசினார். #vaiko #dmk
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இதில் தொடர்புடைய பெரிய குத்தகை பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் முனீஸ்வரன் (வயது 30) என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி முனீஸ்வரனை நேற்று கைது செய்தார். #tamilnews
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் மது கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாகை வெளிப்பாளையம் கூக்ஸ் சாலை பகுதியில் நேற்று தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் காரில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் சாலை பகுதியை சேர்ந்த தென்னரசு மகன் பிரபாகரன் (வயது28) என்பது தெரியவந்தது. இது குறித்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். காரில் இருந்த 600 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மீனவர்களின் படகுகள் உடைந்து சேதமாகின. இதனால் பெரும்பாலான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடந்த 4 மாதங்களாக முடங்கி கிடந்தனர். சில மீனவர்கள் சேதமான படகை சீரமைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் கோடியக் கரையில் தங்கி மீன்பிடித்து வந்தனர். சீசன் முடிந்ததால் பல மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
தற்போது கோடியக்கரையில் பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை ஆகிய இடங்களை சேர்ந்த மீனவர்கள் மட்டும் தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றனர்.
கோடியக்கரையில் இருந்து நேற்று 25 படகுகளில் 100 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் கோடியக்கரை மீனவர்களிடம் நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறீர்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்து அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீன்பிடிக்காமல் இன்று காலை கரை திரும்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மீன்பிடிக்காமல் மீனவர்கள் கரை திரும்பியதால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






