என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
தமிழ் திரையுலகில் சிறுவர்- சிறுமிகள் குரலில் பாடி அனைவரையும் கவர்ந்தவர் சூலமங்கலம் சகோதரிகள். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் பாடிய பக்தி பாடல்கள் பல சாதனைகளை படைத்துள்ளன.
இவர்களின் கணீர் குரலில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் ஆகியவை பாமரர் முதல் படித்தவர்கள் வரை அனைவரது இதயங்களையும் கவர்ந்தன.
இந்த நிலையில் நாகையை சேர்ந்த 2 சிறுமிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடலை அதே இனிமையுடன் பாடி வலைத்தளங்களில் பெரும் புகழ்பெற்றுள்ளனர்.
இவர்கள் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. முருகா’ திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்.. என்ற பாடல் யூடிப்பில் வைரலாகி உள்ளது.
இதனை உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் மக்கள் கேட்டு நாகை சகோதரிகளாக வலம் வரும் ஸ்ரீசக்தி, ஸ்ரீமதி சகோதரிகளை பாராட்டி வருகின்றனர்.
நாகை மாவட்டம் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கொடிமலர். இவர்களின் மகள்கள் ஸ்ரீசக்தி, 8-ம் வகுப்பும், ஸ்ரீமதி 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இசை குடும்பத்தை சேராத இவர்கள் தமிழிசை பாடல்களில் ஆர்வம் கொண்டு அவைகளை கேட்டதும் அப்படியே பாடி பார்த்து பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு சூலமங்கலம் சகோதரிகளை போல் புகழ்பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அவர்களுக்கு பெற்றோரும் உதவி புரிந்தனர். இதன் எதிரொலியாக ஸ்ரீசக்தியும், ஸ்ரீமதியும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல்களை அதே குரலில் இனிமையுடன் பாடினர்.
தனது மகள்கள் இனிமையான குரலில் பாடுவதால் ஆச்சர்யம் அடைந்த செல்வகுமார் மகள்களின் பாடலை தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து அதை வாட்ஸ்- அப் போன்ற சமூக வலைதளங்களில் முதலில் பதிவிட்டார். சிறுமிகளின் பாடல்கள், மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் இன்று அந்த பாடல்கள் பிரபலமடைந்து வருகிறது.
தற்போது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழார்வலர்கள் நாகை சகோதரிகள் ஸ்ரீசக்தி, ஸ்ரீமதி பாடல்களை கேட்டு பரவசமாகி அவரது தந்தையை செல்போனில் அழைத்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சிங்கப்பூர் தமிழ்சங்கம் நாகை சகோதரிகள் இசை நிகழ்ச்சியை தீபாவளி அன்று சிங்கப்பூரில் நடத்த முன் வந்துள்ளது. இதுபற்றி நாகை சகோதரிகளின் தந்தை செல்வகுமார் கூறியதாவது:- எனது மகள்களுக்கு சினிமாவில் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நான் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு முறையான சங்கீத பயிற்சி அளிக்கவில்லை. இருந்த போதிலும் குயில் தானாக பாடுவது போல் அவர்களும் பாடுகிறார்கள். இசை கற்காததால் அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. முறையாக பயிற்சி பெறாதவர்கள் இனிமையாக பாடுவது இறைவனின் வரம் என்றே நினைக்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பிரின்ஸ் காட்ஸ் குழந்தைகள் நிறுவனம் தலைவர் குமரேசன் என்பவர் என்னை போனில் தொடர்பு கொண்டார். வலைத்தளங்களில் வலம் வரும் ஸ்ரீசக்தி- ஸ்ரீமதி சகோதரிகளின் பாடல்களை கேட்டு லதா ரஜினி காந்த் மகிழ்ந்ததாகவும், அவர்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
எனது மகள்கள் பாடிய பாடல்கள் பிரபலமாகி வருவதால் அவர்கள் விரைவில் சினிமாவிலும் பாடி சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டினம்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என மீனவர்களுக்கு அரசு முன்எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகைக்கு உட்பட்ட சில பகுதிகளில் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்து விற்பனை செய்வதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையிலான அதிகாரிகள் பூம்புகார், நாகை உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து 11 டன் மத்தி மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடற்கரை போலீசார் பாதுகாப்புடன் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்குள்ள மீனவர்களிடம் மத்தி மீன்களை பொது ஏலத்தில் விற்பனை செய்தனர். இதில் மீனவர்கள் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மத்தி மீன்களை ஏலத்தில் எடுத்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொண்டல் செட்டி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர் சீர்காழி கச்சேரி சாலை திருமஞ்சன வீதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரிடம் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். உடனே அவர் கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மர்ம நபர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை போலீசார் ஆய்வு செய்த போது அது சீர்காழி தென்பாதி திட்டைசாலையை சேர்ந்த விக்னேஷ்(19) என்ற வாலிபரின் மோட்டார் சைக்கிள் எண் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவிச்சந்திரனிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து விக்னேசை கைது செய்த போலீசார் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரது நண்பர்கள் 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
நாகையை அடுத்த நாகூர் புதிய பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்பு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தொகுதி செயலாளர் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சாகுல் அமீது, குமாயூன் கபீர், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
நாகூர் கடற்கரை பூங்காவை சீரமைத்து, சுத்தம் செய்ய வேண்டும். சுற்றுலா தளமான நாகூருக்கு என்று எந்த மானியத்தையும் ஒதுக்காத மாநில அரசை கண்டிப்பதும், இனிவரும் காலங்களில் அதற்கான மானியத்தை ஒதுக்கி நாகூர் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது.
நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் மாசு நிறைந்த காற்றாக மாறி நாகூரில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவ காரணமாக இருக்கும் தனியார் துறைமுகத்தை இழுத்து மூட வேண்டும்.
நாகூர் அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தி கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் பொறுப்பாளர்கள் மணிகண்டன், ரியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே இருந்த அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 43), பாண்டியராஜன்(32), லெனின்(35), பாபுராஜ்(40), சரத்குமார்(27), தமிழ்ச்செல்வன்(26), அரவிந்த்ராஜ்(23), மணிகண்டன்(33), விஜயராகவன்(27), கணேஷ்குமார் (24), சாமிநாதன்(43) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையிலும், திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்து வருவதால் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் சுரேஷ்குமார், சிறையில் உள்ள 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவின் நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு, மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவ மழையால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும். இந்த காலங்களில் தான் பாதிப்பு இருக்கும்.
கஜா புயலின்போது மனித உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றியது. அதேபோல் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் முன் எச்சரிக்கையாக ஆய்வு கூட்டம் நடந்தது. புயலால் பாதிக்கும் பகுதிகளை 4 வகைகளாக பிரித்து கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் 4399 இடங்கள் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் இடங்களில் வசிப்பவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிவாரண முகாம்கள், மருத்துவ முகாம்கள் அமைக்கும் பணிகளுக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் தெற்கு குத்தகையை சேர்ந்தவர் வடிவேலு (வயது 38) இவர் தன் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்ததால் அவர் கோபித்து கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த வடிவேலு நேற்று குடிபோதையில் தன் வீட்டிற்கு தீ வைத்தார்.
வீடு தீ பிடித்து எரிந்த நிலையில் அருகில் இருந்த பாலகிருஷ்ணன் என்பவரது வீடும் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.
வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் 2 வீடுகளிலும் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின. இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் வடிவேலிடம் விசாரனை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் கீழையூர் பகுதியில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா(வயது 8) என்ற மாணவி 3-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஆசிரியராக செம்பனார்கோவில் திருநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (43) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சிறுமி பவித்ரா வகுப்பில் விளையாடியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பாஸ்கர், ‘‘படிக்க வந்தாயா? அல்லது விளையாட வருகிறாயா?’’ என்று சத்தம் போட்டார்.
மேலும் பாஸ்கர், தனது கையில் வைத்திருந்த கத்தியால் மாணவி பவித்ராவின் இடதுகையில் குத்தினார். இதனால் கையில் ரத்தம் காயத்துடன், பவித்ரா வீட்டுக்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக மாணவியை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவியின் தாய், செம்பனார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஆசிரியர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைதான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான ஆசிரியர் பாஸ்கர் எப்போதும் சின்ன கத்தியுடன் தான் பள்ளிக்கு வருவதாகவும், மாணவிகளை அடிக்க பிரம்பை பயன்படுத்த மாட்டார். அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.






