search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுருக்குமடி வலை"

    • நேற்று முதல் தரங்கம்பாடி மீனவர்கள் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பிரச்சினை தொடர்பாக நேற்று தரங்கம்பாடியில் 18 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலமிடப்பட்டது.

    இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று முதல் தரங்கம்பாடி மீனவர்கள் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சுருக்குமடி வலை பிரச்சினை தொடர்பாக நேற்று தரங்கம்பாடியில் 18 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஆறு மாவட்டங்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் அடுத்த கட்டமாக நடத்த இருப்பதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோ யில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300 மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    இந்த தொழில் மறியல் காரணமாக கடலோர கிராமங்களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    • சுருக்கு மடி வலை பயன்படுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா என்றும் சோதனையிட்டனர்.
    • போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    சுருக்கு மடிவலை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 12 நாட்டிகல் மைல் தாண்டியே வலையை பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடிக்கிறார்களா? என கடலோர காவல் நிலைய போலீசார் இன்று சோதனை செய்தனர்.

    புதுவை தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து வீராம்பட்டினம், புதுகுப்பம், நல்லவாடு, பனித்திட்டு, நரம்பை, மூர்த்திகுப்பம் வரை 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரை போலீசார் சென்று சோதனையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட நாட்களை தாண்டி சுருக்குமடி வலை பயன்படுத்தப்பட்டால் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தினார்கள்.

    சுருக்கு மடி வலை பயன்படுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா? என்றும் சோதனையிட்டனர்.

    இந்த சோதனை அடிக்கடி மேற்கொள்ளப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

    • சுருக்குமடி வலைக்கு அனுமதி அளித்ததால் அறந்தாங்கி நாட்டுப்படகு மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
    • வாரத்திற்கு 2 முறை மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை சுமார் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடல் பரப்பில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், பகுதிகளில் சுமார் 600 விசை படகுகளும், மற்ற பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன் பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனத்தை பெருக்கவும் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாரத்திற்கு 2 முறை மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து நாட்டுப்படகு சங்கத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட மீனவர்கள் கூறுகையில், சுருக்குமடி, இரட்டைமடி, ஒற்றைமடி, அறிவலைகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் கடல் வளம் முற்றிலும் அழிக்கப்படுகிறது.

    பாசிகள், பவளப்பாறைகள் போன்றவைதான் மீன்களின் ஆகாரமாக உள்ளது. ஆனால் இது போன்ற சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதால் மீன் உணவுகள் அழிக்கப்பட்டு மீனினத்தின் பெருக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் மீன்கள் இனமே அழிந்து போகும். அதோடு மட்டுமல்லாது கடல் தொழிலை நம்பி மட்டுமே வாழும் இத்தனை ஆயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம்கேள்விக் குறியாகி விடும்என்று வேதனையுடன் தெரிவித்தனர். எனவே சுருக்குமடி உள்ளிட்ட அறிவலைகள் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


    • தமிழக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
    • மீனவர்கள் தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தியிருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க மீனவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு தடை விதித்தது.

    அரிய வகை உயிரினங்கள், மீன் குஞ்சுகள், பவளப்பாறைகள் சிக்கி கொள்வதால் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசின் உத்தரவு சரியானது என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. அப்போது மீனவர்கள் தரப்பில் கூறும்போது, தாங்கள் 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி சுருக்குமடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் என்று தெரிவித்தனர்.

    தமிழக அரசு சார்பில் கூறும்போது, தமிழ்நாட்டின் அதிகார வரம்புக்குள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களும் அழிகின்றன.

    ஆயிரக்கணக்கான படகுகள் செல்வதால் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால்தான் சுருக்குமடி வலையால் மீன் பிடிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது மிக கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான பெஞ்ச் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:-

    வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 நாட்டிக்கல் மைல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

    தமிழக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சுருக்குமடி வலையுடன் காலை 8 மணிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்குள் மீனவர்கள் திரும்பி விட வேண்டும்.

    மீனவர்கள் தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தியிருக்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் சமமான பலனை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நிபந்தனைகளை மீறி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறி உள்ளனர்.

    அதே வேளையில் தமிழகத்தில் 12 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்த தமிழக அரசாணைக்குள் தற்போதைய நிலையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்தனர்.

    இதனால் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான பிரதான வழக்கின் விசாரணை இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடலூரில் சுருக்குமடி வலையை கைப்பற்றி அதிகாரிகள் சேதப்படுத்தினர்.
    • தொடர்ந்து நடந்த ஆய்வின்போது மீன்பிடிப்பதற்கு உதவியாக இன்னொரு நாட்டு படகு நின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன் வளத்துறை தடைவிதித்து உள்ளது. அதன்படி மீன் வளத்துறை அதிகாரிகள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இன்று காலை மீன்வளத்துறை ஆய்வாளர் பதுருதீன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு காவலர் சாம்பவசிவம் மற்றும் ஊழியர்கள் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். சுபஉப்பலவாடி பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு படகில் சுருக்குமடி வலைலைய பயன்படுத்தி மீன் பிடித்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். விசாரணையில் படகில் வந்த மீனவர்கள் புதுவை பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்து அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தினர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது மீன்பிடிப்பதற்கு உதவியாக இன்னொரு நாட்டு படகு நின்றது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    • சுருக்குமடி வலை வைத்திருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 மீனவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.
    • தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கூறினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகள் பயன்படுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதோடு, மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கமடி வலை மற்றும் படகுகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டம் அறிவித்து நடத்தி வந்தனர்.

    மேலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டத்தில் 7- க்கும் மேற்பட்ட கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்த அனுமதிக்க கூடாது. ஆகையால் உடனடியாக தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கடுமையான உத்தரவிட்டார்.


    இந்த நிலையில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமத்திற்கு நேரில் சென்றனர். பின்னர் 60 மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகள் இருப்பதை கண்டறிந்து அவர்களிடம் அதிரடியாக நோட்டீஸ் வழங்கினர். இதில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் படகுகளை கடலூர் மாவட்ட எல்லைகளில் நிறுத்தக்கூடாது, மீறி நிறுத்தினால் வலை மற்றும் படகுகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இது மட்டுமின்றி கடலூர் மாவட்ட கடற்கரையில் போலீசார் உடன் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் ஏறேனும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மற்றும் படகுகளை நிறுத்தி உள்ளார்களா? என்பதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர் கிராமங்களில் பெரும் பதட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது.

    • சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்ற மீன்வளத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் மீனவர்கள் தடுத்தனர்.
    • கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை பகுதியில் விசைப்படகில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என தமிழக அரசு தடை உத்தரவு அறிவித்து உள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப்படாது என கடும் எச்சரிக்கை விடுத்து வந்தார். மேலும் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீனவர்கள் ஏதேனும் மீன் பிடிக்கிறார்களா? என்பதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர் சதுருதீன், சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் மயில்வாகனன், காவலர் சாம்பசிவம் ஆகியோர் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை பகுதியில் விசைப்படகில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசைப்படகு மற்றும் வலையை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ராசா பேட்டை சேர்ந்த மீனவர்கள் அதிகாரிகளை அவதூறாக பேசியும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.  மேலும் மீனவர் கிராமங்களில் சட்டவிரோத பிரச்சனை ஏற்படுத்த வழிவகுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தும் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதீன் கொடுத்த புகாரின் பேரில் ராசா பேட்டை சேர்ந்த கலைமணி, அய்யனார் உள்ளிட்ட 7 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×