சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்ற மீன்வளத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த மீனவர்கள்

சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்ற மீன்வளத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் மீனவர்கள் தடுத்தனர்.கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை பகுதியில் விசைப்படகில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்ற  மீன்வளத்துறை  அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த  மீனவர்கள்
Published on

கடலூர்:

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என தமிழக அரசு தடை உத்தரவு அறிவித்து உள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப்படாது என கடும் எச்சரிக்கை விடுத்து வந்தார். மேலும் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீனவர்கள் ஏதேனும் மீன் பிடிக்கிறார்களா? என்பதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர் சதுருதீன், சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் மயில்வாகனன், காவலர் சாம்பசிவம் ஆகியோர் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை பகுதியில் விசைப்படகில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசைப்படகு மற்றும் வலையை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ராசா பேட்டை சேர்ந்த மீனவர்கள் அதிகாரிகளை அவதூறாக பேசியும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.  மேலும் மீனவர் கிராமங்களில் சட்டவிரோத பிரச்சனை ஏற்படுத்த வழிவகுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தும் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதீன் கொடுத்த புகாரின் பேரில் ராசா பேட்டை சேர்ந்த கலைமணி, அய்யனார் உள்ளிட்ட 7 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com