search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர் தம்பதிகள் சித்திரவேலு -வசந்தா ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு குடைகளை வழங்கினர்.
    X
    ஆசிரியர் தம்பதிகள் சித்திரவேலு -வசந்தா ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு குடைகளை வழங்கினர்.

    மழைக்காலத்தையொட்டி 1,000 மாணவ மாணவிகளுக்கு குடைகளை வழங்கிய ஆசிரியர் தம்பதி

    வேதாரண்யத்தில் மழைக்காலத்தையொட்டி 1,000 மாணவ மாணவிகளுக்கு குடைகளை ஆசிரியர் தம்பதியினர் வழங்கினர். இந்த உதவும் குணத்தை பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆசிரியராக பணியாற்றியவர் சித்திரவேலு. இவரது மனைவி வசந்தா. இவரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகின்றனர். இந்த ஆசிரியர் தம்பதியினர் ஆண்டு தோறும் வேதாரண்யம் பகுதி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு , பேனா சீருடை மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கி வருகின்றனர்.  

    மேலும் தங்களது வாழ்நாள் சாதனையாக ஆண்டு தோறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவர்களின் பிறந்த நாளுக்கு கொடுக்கின்றனர். அந்த மரக்கன்றுகளை அந்த மாணவர்கள் வளர்ப்பதை கண்காணித்து நன்றாக மரக்கன்றுகளை வளர்த்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி வருகின்றனர். 

    இந்த ஆண்டு அதேபோல் மாணவர்களுக்கு மழை காலத்தை எதிர்கொள்ளும் வகையில் குடைகள் வழங்க முடிவு செய்தனர். 
    இதையொட்டி வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன் புலம் நாடிமுத்து உதவி தொடக்க பள்ளியில் 1,000 மாணவ- மாணவிகளுக்கு குடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர் தம்பதிகள் சித்திரவேலு- வசந்தா ஆகியோர் 1000 மாணவ- மாணவிகளுக்கு குடைகளை வழங்கினர். 

    முன்னதாக விழாவுக்கு வேதாரண்யம் உதவி தொடக்க கல்வி அலுவலர் தாமோதரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மதியரசு வரவேற்றார். விழாவில் ஆசிரியர் தம்பதியர் சித்திரவேலு, வசந்தா ஆகியோரின் உயரிய உதவும் குணத்தை  மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பாராட்டினர்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, மழை காலத்தில் பள்ளிக்கு எங்களது குழந்தைகளை அனுப்பாமல் இருப்போம். ஏனென்றால் குடை இல்லாமல் இருக்கும். சாலையும் சரியாக இருக்காது. இந்த காரணத்தால் குழந்தைகளை மழை பெய்யும் காலத்தில் அனுப்ப முடிவதில்லை. எங்களது கஷ்டத்தை கருத்திற் கொண்டு ஆசிரியர் தம்பதியினர் மாணவர்களுக்கு குடைகளை வழங்கி உதவுவது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.  
    Next Story
    ×