என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சீர்காழி அருகே பெண் வி.ஏ.ஓ.வை மிரட்டிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்து வருபவர் ஆனந்தி (வயது 24).

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி மெய்யழகன் (35) என்பவர் பட்டா சிட்டா வழங்குவது கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தார்.

    நேற்று மெய்யழகன், தனக்கு பட்டா சிட்டா வழங்குவதில் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கிராம நிர்வாக உதவியாளர் ஜெயபால் என்பவரிடம் கேட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தியிடம் மெய்யழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி, சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திட்டச்சேரி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே நரிமணம் ஊராட்சியில் தனியார் மின்உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாகவும், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி சுள்ளாங்கால் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மின்உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரால் விளை நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டு மண்ணின் வளம் குறைவதாகவும், காது கேளாமை, மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் இந்த மின் உற்பத்தி நிலையம் மூலமாக கிராம பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படவில்லை என்பதால் மின் உற்பத்தி நிலையம் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கோ‌‌ஷம் எழுப்பினர். கிராம மக்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
    மயிலாடுதுறை அருகே ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 7 பவுன்- 2 கிலோ வெள்ளி கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் மேலவீதியை சேர்ந்தவர் கோபால அய்யர் (வயது 80). இவர் வேளாண்மை துறை அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபால அய்யர், தனது மனைவி ருக்மணியுடன் சென்னையில் உள்ள மகனை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகிறார்.

    பூட்டி கிடந்த வீட்டில் நகை- வெள்ளி கொள்ளை போன சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம் அருகே தனியார் பள்ளியில் லேப்டாப்- ரூ.52 ஆயிரம் ரொக்கம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியை நேற்று இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்தநிலையில் நள்ளிரவு பூட்டை உடைத்து பள்ளிக்குள் புகுந்த கொள்ளையன் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு லேப்-டாப், கம்ப்யூட்டருக்கான உபகரணங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டான்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் பள்ளி செயலாளர் வேதரெத்தினம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    சீர்காழி அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
    சீர்காழி:

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 68). ஸ்தபதி. இவரது மனைவி சாந்தி (50). இவர்களது மகள் சுபத்ரா (38).

    இந்த நிலையில் சுபத்ரா கணவர் சரவணன், நேற்று துபாய் நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டார். இதற்காக சோமசுந்தரம், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் காரில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் இரவு 10.30 மணியளவில் மருமகன் சரவணனை, வெளிநாட்டுக்கு வழியனுப்பி விட்டு காரில் சொந்த ஊருக்கு நேற்று இரவு புறப்பட்டனர்.

    காரில் சோமசுந்தரம், அவரது மனைவி சாந்தி, மகள் சுபத்ரா மற்றும் சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன் (14) , சுபத்ராவின் உறவினர்கள் காட்டுமன்னார்கோவில் திருசின்னபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (40), அவரது தாய் அன்னப்பூரணி, மகள் சாய்ஸ்ரீ (8) ஆகியோர் இருந்தனர். காரை செந்தில்குமார் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 2 மணியளவில் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் கோவில்பத்து அருகே கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. இந்த நிலையில் திடீரென எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி சோமசுந்தரம், சாந்தி, சுபத்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன், செந்தில்குமார், அவரது மகள் சாய்ஸ்ரீ, தாய் அன்னபூரணி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக 4 பேரையும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சீர்காழி டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டேங்கர் லாரி- கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை- தாய்- மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில் துணை மாவட்ட கண்காணிப்பாளர் முருகவேல் அறிவுறுத்தல்படி மணல் கடத்தலை தடுக்கும் வகையில் நேற்று இரவு நாகூர்போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நாகூர் வெட்டாறு பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கீழ்வேளுர் ராயத்தமங்கலம் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (வயது 37) என்பதும் அவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

    குத்தாலம் அருகே ஆற்றில் மூழ்கி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஷ். இவரது மகள் சோனாலி என்கிற ரூபா(வயது 12). இவர் ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ரூபா தனது தோழிகளுடன் நட்டாற்றுக்கு குளிக்க சென்றார்.

    அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற ரூபா, தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதை கண்டு அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ரூபாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், ஆற்றில் இறங்கி ரூபாவை தேடி உள்ளனர். அப்போது ரூபாவின் உடல் சிறிதுதூரம் தள்ளி கரை ஒதுங்கியது. உடனே அவரை மீட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நக்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரூபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவுப்படி போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீழ்வேளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராதாமங்கலம் பகுதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 37) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சாராயம் விற்பனை செய்த சிக்கல் அருகே பனை மேடு காலனி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மணி(34), ஆழியூரை அடுத்த சிக்கவலம் மெயின் சாலையை சேர்ந்த மகேந்திரன்(54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி வேதாரண்யத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்தவர் ராமு (வயது 40). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் கஜேந்திரன், ராஜேந்திரன், பழனிவேல் ஆகியோருடன் நேற்று மதியம் மீன்பிடிக்க சென்றார்.

    அவர்கள் 4 பேரும் இன்று காலை நெடுந்தீவு அருகே படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் படகில் வந்தனர். திடீரென ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் வந்த படகை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த வலைகள், மற்றும் கருவிகள், மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து கைதான மீனவர்கள் 4 பேரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.

    ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தகவல் இன்று காலை வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இந்த தகவலை கடலோர காவல் படை போலீசாருக்கு தெரிவித்தனர்.

    இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 4 பேரையும் பத்திரமாக மீட்டு தரக்கோரி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் வடமழை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது வடமலை ஆலமரத்தடி அருகே மர இடத்தில் அமர்ந்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த வடமலையை சேர்ந்த சரவணன் (வயது 48), சுரேஷ் (35), தீரன் (34), சந்திரன் (55) ஆகிய 4 பேரையும் பிடித்து ஆட்டக்களத்தில் கிடந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


    பொறையாறு அருகே வீட்டில் இரும்பு மேற்கூரை அமைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தரங்கம்பாடி:

    காரைக்கால் கோட்டுச்சேரி ராயல்புரம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுகுமாறன் மகன் சுந்தர் (வயது 18), இவர் இரும்பு மேற்கூரை அமைக்கும் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பொறையாறு சந்திரபாடி மீனவர் குடியிருப்பில் செல்வமணி என்பவரது வீட்டில் இரும்பு மேற்கூரை அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்வயர் மீது கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி மேலே இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அவரை உடனடியாக காரைக் கால் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். சுந்தரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பொறையாறு  போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யத்தில் மோட்டார் கைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அகஸ்தியன் பள்ளி குமரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு (வயது70). இவர் அதே பகுதியில் பிள்ளையார் கோவில் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார்.

    இவர் நேற்று தனது பேரன் விக்னேஷ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து திருத்துறைப்பூண்டி சாலை வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் பழனிவேலு பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி பழனிவேலு இறந்தார். அவரது மகன் சத்தியமூர்த்தி(39) கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×