என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி அருகே பூம்புகார் கீழத் தெருவில் வசித்து வருபவர் கலையரசி (வயது40). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்க வெளியூருக்கு சென்று விட்டார்.
பின்னர் துணி எடுத்த பிறகு வரும் வழியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்ற கலையரசி அங்கு இரவு தங்கி விட்டார். இதையடுத்து நேற்று மாலை தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தது.
அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தோடு, செயின் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கலையரசி பூம்புகார் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின்பேரில் நாகூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று இரவு மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திட்டச்சேரி சாலை வழியாக சந்தேகப்படும்படி ஒரு நபர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின்னாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் கையில் மறைத்து வைத்திருந்த பையை சோதனை செய்தனர். சோதனையில் அவர் புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே அவரை நாகூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் சங்கமங்கலம் ஓட மேட்டு தெருவைச் சேர்ந்தஆசீர்வாதம் (வயது 48) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து ஆசீர்வாதத்தை கைது செய்தனர்.
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 30). கொத்தனார்.
இவர் நாகப்பட்டினத்தில் வேலைபார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு வெள்ளப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று உள்ளார். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கட்டையால் அன்பரசனை தாக்கி அவர் வைத்திருந்த 1000 ரூபாயை பறித்து சென்று விட்டனர்.
இதில் காயமடைந்த அன்பரசன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த தகவலையடுத்து வேதாரண்யம் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா உத்தரவின் பேரில் வேட்டைக்காரனிருப்பு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபாஷ்சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கவுண்டமணி, மணிகண்டன், விநாயகமூர்த்தி, வீரகுமார் ஆகிய 5 பேர் என்று தெரியவந்தது. அதன் பேரில் ரமேஷ் (26), கவுண்டமணி (29), மணிகண்டன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 65). தொழில் அதிபரான இவர் கியாஸ் ஏஜென்சி, ஷாப்பீங் மால் ஆகியவை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முத்துக்குமார், தனது நிறுவனங்களுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த ரூ.13 லட்சம், மற்றும் வைர நெக்லஸ், 8 பவுன் நகை ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.
இந்த திருட்டு பற்றி முத்துக்குமார், குத்தாலம் போலீசில்புகார் செய்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து விசாரித்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் பிச்சன் கோட்டகம் மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). பால் வியாபாரி.
இவர் நேற்று மாலை பால் வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இந்த நிலையில் அந்த வழியாக எதிரே வந்த ஒரு லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ் பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் பலியான குமாருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வேதாரண்யம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சுப்பிரமணியன் போலீசார் பால்ராஜ், அசோக்குமார் ஆகியோர் வேதாரண்யம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆறுகாட்டுத் துறையில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் நெய்விளக்கு பகுதியை சேர்ந்த சங்கர் (33) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து 110 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை கைப்பற்றினர்.
இதேபோல் கரும்பம்புலம் கடைவீதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் கருப்பம்புலம் சிவானந்தம் (33) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 55 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை கைப்பற்றினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் அதிகாலை வேளையில் வீட்டின் வாசலில் நின்றிருந்த 2 பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்வங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மதுரையை சேர்ந்த அஜித்குமார்(வயது21) மற்றும் விஜய்(22) ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான 25 பவுன் நகைகளை கைப்பற்றினர். மேலும் 2 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பாராட்டினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன் பிடி சீசன் காலமாகும். சீசன் காலத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பர்.
6 மாத காலம் நடைபெறும் இந்த சீசன் காலத்தில் 50-க்கும் மேற்பட்ட வகை மீன்கள் பிடிக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது கோடியக்கரையில் சீசன் துவங்கி உள்ள நிலையில் பைபர் மற்றும் விசைப் படகுகள் 50-க்கும் மேற்பட்டவை கோடியக்கரைக்கு வந்து உள்ளன.
நாள்தோறும் படகுகள் கோடியக்கரையிலிருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் மீன்பிடிக்க செல்கின்றன. மீனவர்களது வலையில் காலா, ஷிலா, வாவல், இறால், நண்டு, மட்லீஸ் போன்ற மீன்கள் கிடைக்கின்றன. இதேபோல் ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், பெரிய குத்தகை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கடற்கரை பகுதியிலும் மீன்பிடி தொழில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிருநாளில் வடகிழக்கு பருவ காற்று வீச துவங்கிய உடன் இந்த பகுதியில் மீன்பிடி சீசன் முடிவடைந்து அப்பகுதி மீனவர்களும் கோடியக்கரைக்கு வந்து விடுவர்.
இதேபோல் ஓரிரு நாளில் நூற்றுக்கணக்கான படகுகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த மீன்பிடி சீசன் குறித்து கோடியக்கரை முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் சித்ரவேலு கூறியதாவது;
கோடியக்கரையில் சீசன் காலத்தில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும். இதனால் அதிக வருமானம் கிடைக்கும். மேலும் சீசன் துவங்கி உள்ள நிலையில் மட்லீஸ், வாவல், காலா போன்ற மீன்கள் கிடைக்கின்றன. கடந்த 2 நாட்களாக அதிக அளவில் நீலக்கால் நண்டு கிடைக்கிறது. இதனை கடற்கரையிலேயே அவித்து சிங்கப்பூர், அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறோம் என்றார்.






