search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடியக்கரையில் பிடிபட்ட நீலக்கால் நண்டை அவித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப மீனவர்கள் தயார் செய்தபோது எடுத்த படம்.
    X
    கோடியக்கரையில் பிடிபட்ட நீலக்கால் நண்டை அவித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப மீனவர்கள் தயார் செய்தபோது எடுத்த படம்.

    கோடியக்கரையில் மீன்பிடி சீசன் துவக்கம்: நீலக்கால் நண்டுகள் சிங்கப்பூர்- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் மீன்பிடி சீசன் தொடங்கியுள்ளதால் நீலக்கால் நண்டுகள் சிங்கப்பூர்- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மட்லீஸ், வாவல் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன் பிடி சீசன் காலமாகும். சீசன் காலத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பர்.

    6 மாத காலம் நடைபெறும் இந்த சீசன் காலத்தில் 50-க்கும் மேற்பட்ட வகை மீன்கள் பிடிக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது கோடியக்கரையில் சீசன் துவங்கி உள்ள நிலையில் பைபர் மற்றும் விசைப் படகுகள் 50-க்கும் மேற்பட்டவை கோடியக்கரைக்கு வந்து உள்ளன.

    நாள்தோறும் படகுகள் கோடியக்கரையிலிருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் மீன்பிடிக்க செல்கின்றன. மீனவர்களது வலையில் காலா, ஷிலா, வாவல், இறால், நண்டு, மட்லீஸ் போன்ற மீன்கள் கிடைக்கின்றன. இதேபோல் ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், பெரிய குத்தகை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கடற்கரை பகுதியிலும் மீன்பிடி தொழில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிருநாளில் வடகிழக்கு பருவ காற்று வீச துவங்கிய உடன் இந்த பகுதியில் மீன்பிடி சீசன் முடிவடைந்து அப்பகுதி மீனவர்களும் கோடியக்கரைக்கு வந்து விடுவர்.

    இதேபோல் ஓரிரு நாளில் நூற்றுக்கணக்கான படகுகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்த மீன்பிடி சீசன் குறித்து கோடியக்கரை முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் சித்ரவேலு கூறியதாவது;

    கோடியக்கரையில் சீசன் காலத்தில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும். இதனால் அதிக வருமானம் கிடைக்கும். மேலும் சீசன் துவங்கி உள்ள நிலையில் மட்லீஸ், வாவல், காலா போன்ற மீன்கள் கிடைக்கின்றன. கடந்த 2 நாட்களாக அதிக அளவில் நீலக்கால் நண்டு கிடைக்கிறது. இதனை கடற்கரையிலேயே அவித்து சிங்கப்பூர், அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறோம் என்றார்.

    Next Story
    ×